89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 9

உகந்த இடமாக கொண்டுள்ளாய்
89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 9


பாடல் 9:

    புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும்
           பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும்
    கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும்
           கழற்சேவடி அடைந்தார் களைகண் எட்டும் 
    நகை எட்டும் நாளெட்டும் நன்மை எட்டும்
          நலம் சிறந்தார் மனத்து அகத்து மலர்கள் எட்டும் 
    திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
         திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே


விளக்கம்:


இந்த பாடல் பொருள் புரிந்து கொள்வதற்கு மிகவும் அரிய பாடலாக கருதப் படுகின்றது. அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் எதனை உணர்த்தினார் என்பதை அவரொத்த புலமை மிகுந்த சான்றோர் தாம் பொருள் கூற முடியும் என்ற முடிவினில் பலரும் இந்த பாடலுக்கு பொருள் காண முயலவில்லை. இருப்பினும் சில அறிஞர்கள் சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் இங்கே பொருள் கூறப்படுகின்றது. புகை=புகக் கூடிய இடங்கள்: இங்கே உயிர்கள் புகக் கூடிய இடங்களை குறிப்பிடுகின்றார். பொதுவாக ஏழு வகையான பிறவிகளை உயிர் புகக் கூடிய இடங்களாக சொல்வதுண்டு. ஆனால் இங்கே அப்பர் பிரான், ஏழு வகையான பிறப்புகள் அல்லாமல் நரகர் என்ற நிலையையும் ஒரு பிறப்பாக கருதி எட்டு பிறவிகள் என்று கூறுகின்றார். ஏதேனும் ஒரு பிறப்பு எடுப்பதற்கு முன்னர், அனைத்து உயிர்களும் தனது வினைத் தொகுதியின் ஒரு பகுதியினை, நரகத்தில் கழிக்க வேண்டி வருவதால் அதனையும் ஒரு பிறவியாக கருத்தில் கொள்கின்றார் போலும். எட்டு பிறவிகளாவன: தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரங்கள் மற்றும் நரகர் என்பன. 

போக்கு=குற்றம்: எட்டு வகையான குற்றங்கள்: அறியாமை, மயக்கம், யான் எனப்படும் அகங்காரம், எனது எனப்படும் மமகாரம், விருப்பு, வெறுப்பு, நல்வினை மற்றும் தீவினை ஆகிய எட்டும் உயிருக்கு உள்ள குற்றங்களாகும். நல்வினை அடுத்த பிறப்புக்கு வழி வகுப்பதால் அதுவும் உயரின் குற்றமாக கருதப்படுகின்றது.. அதனால் தான் பெரியோர்கள் தீவினையை இரும்புச் சங்கிலிக்கும் நல்வினையை பொன் சங்கிலிக்கும் ஒப்பிடுவார்கள். பொன்னாயிருந்தாலும், இரும்பாக இருந்தாலும் பிறவிப் பிணியுடன் இணைப்பதில் இரண்டின் தன்மையும் ஒன்று தானே. 

ஐந்து புலன்கள் முதலாய இருபத்து நான்கு தத்துவங்களை ஆன்ம தத்துவம் என்று ஒரு கூட்டமாக சொல்வார்கள். இந்த இருபத்து நான்கு தத்துவங்களை சுருக்கி எட்டு தொகுப்பாக கூறுவதும் வழக்கம். அப்பர் பிரான், புலன்கள் முதலாக உள்ள இந்த எட்டு தொகுப்புகளை, புலன்களின் முதன்மை கருதி புலன்கள் எட்டு என்று இங்கே கூறுகின்றார். எட்டு புலன்களாவன: ஐம்பூதங்கள் (ஆகாயம், காற்று, தீ, நீர், நிலன்) ஐந்து ஞானேந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி) ஐந்து கன்மேந்திரியங்கள் (கை, கால், வாய், எருவாய், கருவாய்), ஐந்து தன்மாத்திரைகள் (ஒலி, ஒளி, ஊறு, சுவை, நாற்றம்), மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்கள், 

பூதலங்கள் எட்டு: கீழுலகங்கள் ஏழுடன் நிலவுகத்தையும் சேர்த்து எட்டு உலகங்கள். மேல் உலகங்கள் ஏழுடன் நிலவுலகத்தையும் இணைத்து எட்டு உலகங்கள் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். இங்கே குறிப்பிடப்படும் தலங்கள், தீவுகள், கடல்கள் முதலானவை வேதங்களில், புராணங்களில் குறிப்பிடப்படுகின்றன. சிவஞான மாபடியத்திலும் இவை குறிப்பிடப்படுகின்றன. கந்தபுராணம் அண்டகோசப் படலத்திலும் இந்த விவரங்கள் காணப்படுகின்றன.  

பொழில்கள் என்றால் தீவு என்று பொருள். மணிவாசகர் திருவாசகப்பாடலில் பூம்பொழில்கள், பயந்து காத்து மற்று அழித்து என்று உலகத்தைப் படைத்தும், காத்தும், அழித்தும் விளையாடும் பரமனின் செயல் பற்றி கூறுவது இங்கே நோக்கத் தக்கது. நாவல், சாகம், குசை, கிரௌஞ்சம், சால்மலி, கோமேதகம், புட்கரம் மற்றும் தேவர் உலகம் ஆகியவை எட்டு தீவுகள்.

கலை என்றால் ஆடை என்று பொருள். மேலே குறிப்பிட்ட எட்டு பொழில்களைச் சுற்றி அமைந்துள்ள கடல்கள், அந்த தீவுகளுக்கு ஆடை போன்று அமைந்திருப்பதால், கடல் என்று கூறாது கலை என்று கூறினார். எட்டு கடல்களாவன, உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல் தேன் கடல், நன்னீர்க்கடல், மற்றும் சக்கரவாக மலையைச் சூழ்ந்துள்ள கடல். 

காப்பு என்பதற்கு அரண் என்று பொருள். இந்த எட்டு கடல்களைச் சூழ்ந்த மலைகள் எட்டும் எட்டு அரண்களாக கருதப்படுகின்றன. நிடதம், ஹேமகூடம், இமாசலம், நீலம், சுவேதம், சிருங்கவான், மாலியவான், கந்தமாதனம் ஆகிய மலைகள் எட்டு மலைகளாகும்.

காட்சி எட்டு என்று எந்தக் காட்சிகளைக் குறிக்கின்றார் என்பது தெளிவாக விளங்கவில்லை. இந்த பதிகத்தின் பல பாடல்களில் இறைவன் செய்த வீரச் செயல்களைக் குறிப்பிட்டு, அந்த செயல்கள் செய்யப்பட்ட நாட்களுக்கு முன்னோ பின்னோ, திருவாரூர் கோயிலாக் கொண்ட நாள் என்று அப்பர் பிரான் கூறுவதால், எட்டு காட்சிகள் என்பதை எட்டு வீரட்டத் தலங்களில் புரிந்த வீரச் செயல்கள் இங்கே உணர்த்தப்படுகின்றது எனத் தோன்றுகின்றது. 

களைகண் என்றால் பயன் என்று பொருள். இந்த உலகத்தில் செய்த செயல்களின் பலன்களுக்கு ஏற்ப, உயிருக்கு  தனது நல்வினையை கழித்துக் கொள்ளும் பொருட்டு  கிடைக்கும் போக உலகங்கள் இங்கே உணர்த்தப்படுகின்றன. இந்த உலகங்களில் நாம் செய்த கர்மங்களின் வினைகளை போகங்களாக அனுபவிக்க முடியுமே தவிர, வினைகளை கூட்டிக் கொள்ளவோ, கழித்துக் கொள்ளவோ முடியாது. எனவே போக லோகங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. அவையாவன, புவலோகம், சுவலோகம், மகலோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம், விஷ்ணுலோகம் மற்றும் உருத்திரலோகம்.

நகை என்பன ஒளிவீசும் கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் குறிக்கும். இராகு மற்றும் கேது கிரகங்களுக்கு, சுயமான ஒளியில்லை என்பதால் அவை இரண்டும் இந்த தொகுதியில் சேர்க்கப்படவில்லை. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள் இந்த நகை எட்டு என்ற தொகுப்பில் வரும்.

காலத்தின் கூற்றாக கருதப்படும் எட்டும் நாள் எட்டு என்ற தொகுப்பில் வருகின்றன. நாழிகை, நாள், வாரம், பட்சம், மாதம், ருது, அயனம், வருடம் என்பன இந்த தொகுதியில் அடங்கும். நன்மை எட்டு எனப்படுவன, அறம், பொருள், இன்பம், வீடு, மறம், இன்மை (இல்லாமை), துன்பம், பிறப்பு ஆகியவை. கொல்லாமை பொறியடக்கம் பொறுமை இரக்கம் அறிவு உண்மை தவம் அன்பு ஆகிய உயர்ந்த எட்டு குணங்கள் எட்டு அக மலர்களாக கருதப் படுகின்றன. திகை என்பது திசை என்ற சொல்லின் திரிபு. நேர்த்திசைகள் நான்கும் கோணத் திசைகள் நான்கும் சேர்ந்து எட்டு. மேற்கண்ட எட்டு தொகுதிகள் என்று கருதப்படும் பொருட்கள், காலத்தின் பிரிவுகளாக கருதப்படும் எட்டு கூறுகள், அனைத்தும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றிய திருக்கோயில் திருவாரூர் திருக்கோயில் என்று பாடலை அப்பர் பிரான் முடிக்கின்றார்.

பொழிப்புரை:

உயிர்கள் சென்று அடையும் எட்டு வகையான பிறப்புகள், உயிருடன் ஒட்டி இருக்கும் எட்டு வகையான குற்றங்கள், எட்டு வகையாக பிரிக்கப்படும் ஆன்ம தத்துவங்கள் எனப்படும் ஐந்து புலன்கள் உள்ளிட்ட தத்துவங்கள், பூமி மற்றும் மேல் ஏழு உலகங்கள் சேர்ந்த தொகுப்பாகிய எட்டு உலகங்கள், எட்டு வகையான சோலைகள் எட்டு வகைகயான கடல்கள், உலகிற்கு அரணாக விளங்கும் எட்டு வகையான மலைகள், எட்டு வகையான வீரச் செயல்கள், இந்த உலகத்தில் ஈட்டப்படும் வினைகளின் பயன்களை அனுபவித்து கழிப்பதற்கு அமைந்துள்ள எட்டு போக உலகங்கள், ஒளிவீசும் கோள்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்கள், அறம் பொருள் முதலாக உயிர்களுக்கு விளையும் எட்டு நன்மைகள். உயர்ந்த ஞானம் படைத்த அடியார்களின் மனதினில் விளங்கும் அகமலர்கள் என்று அழைக்கப்படும் எட்டு உயர்ந்த குணங்கள், எட்டு திசைகள் ஆகியவை தோன்றுவதற்கு முன்னோ பின்னோ, பெருமானே நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது.,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com