84. குலம் பலம் பாவரு - பாடல் 2

84. குலம் பலம் பாவரு - பாடல் 2

கருணை கூர்ந்து


பாடல் 2:

மற்று இடம் இன்றி மனை துறந்து அல்
                            உணா வல்லமணர் 
சொல் திடம் என்று துரிசு பட்டேனேக்கு
                           உண்டு கொலோ
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று
                           ஒரு வேடுவனாய்ப்
புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத்
                          தொண்டராம் புண்ணியமே


விளக்கம்:


அல்=இரவுப் பொழுது; துரிசு=குற்றம்: சிறிய வயதில் சமணர்கள் உரைத்த மொழியினை உண்மையான மொழி என்று நம்பி அவர்களது பேச்சினில் தான் மயங்கி சமண சமயம் சார்ந்ததை குற்றம் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தில் கூறுகின்றார். வில் திடம்=வில்லின் வலிமை; வல்லமணர்=கல் போன்று வலிமையான நெஞ்சம் உடையவர்கள்;  தான் சைவ சமயம் சார்ந்ததை குற்றமாக கருதி, தனக்கு சமணர்கள் செய்த பல கொடுஞ்செயல்கள் அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும். அதனால் தான் வலிமையான நெஞ்சம் உடையவர்கள் என்று சமணர்களை இங்கே குறிப்பிடுகின்றார் போலும். இங்குள்ள மூலவரின் திருநாமம் புற்றிடம் கொண்டார். வடமொழியில் வன்மீகநாதர் என்று அழைக்கப்படுகின்றார். மூலவரின் திருநாமத்தை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். புற்றினில் எழுந்த சுயம்பு மூர்த்தமாக மூலவர் இங்கே விளங்குகின்றார். புற்றிலிருந்து எழுந்த பெருமான் என்பதால், திருவாரூர் தலமும், பஞ்சபூத தலங்களில் ஒன்றாக, நிலத்திற்கு உரிய தலமாக (கச்சி ஏகம்பம் போன்று) கருதப் படுகின்றது.    

பொழிப்புரை:

பண்டைய நாளில் வேடுவனாக சென்று அர்ஜுனனின் வில்லின் வலிமையைக் கவர்ந்து அவனை போரினில் வென்றவனும், புற்றிடம் கொண்ட பெருமானாக திருவாவூரில் திகழ்பவனும் ஆகிய பிரானின் அடியார்களுக்கு, அடியேனாக இருக்கும் நல்வினைப் பேறு, துறவு நிலை மேற்கொண்டதால் தாங்கள் இருப்பதற்கு இடம் இல்லாமல் பல இடங்களில் திரிபவர்களும் இரவுப் பொழுதில் உணவினை உண்ணாதவர்களாக திகழ்ந்தவர்களும், கல் போன்று வலிமையான நெஞ்சம் உடையவர்களும் ஆகிய சமணர்களின் சொற்களை உண்மை என்று நம்பி, அவர்களைச் சார்ந்து குற்றம் புரிந்த அடியேனுக்கு  வாய்க்குமோ. பெருமானே, நீர் தான் அடியேன் பால் கருணை கூர்ந்து அத்தகைய பேறு எனக்கு கிடைப்பதற்கு வழி வகுக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com