84. குலம் பலம் பாவரு - பாடல் 4

வடிவினனாக விளங்கு
84. குலம் பலம் பாவரு - பாடல் 4


பாடல் 4:

    மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர்
                                             மொண்ணரை விட்டு 
    ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும்
                                             உண்டு கொலோ
    தேசனை ஆரூர்த் திருமூலட்டானனை
                                            சிந்தை செய்து 
    பூசனைப் பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம்
                                            புண்ணியமே


விளக்கம்:


தேசன்=தேஜஸ் உடையவன்; தேஜஸ் என்றார் வடமொழிச் சொல் தேசு என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வன்கண்ணர்=கொடிய பார்வையினைக் கொண்டவர்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, சமணர்களின் உள்ளத்தில் இருந்த வஞ்சம் அவர்களது பார்வையில் வெளிப்பட்டதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார் போலும். இரக்கம் இல்லாத மனதினை உடையவர்கள்; மொண்ணரை= வழுக்கை;  ஏசறுதல்=இடைவிடாது கவலைப்பட்டு ஏங்குதல்; சுரர்=தேவர்கள்; பூசுரர்=பூ+சுரர்  நிலவுலகத்தில் வாழும் தேவர்கள்; அந்தணர்களை நிலவுலகத்தில் உள்ள தேவர்களாக கருதி பூசுரர் என்று சொல்வது வழக்கம், பூசுரர் என்பதற்கு பூசிக்கும்
தொண்டர் என்றும் பொருள் கொள்வதுமுண்டு.  

பொழிப்புரை:

நிறைந்த ஞானத்தால் ஒளி வடிவினனாக விளங்குபவனும், ஆரூர் திருமூலட்டானத்தில் உறைபவனும் ஆகிய பெருமானை சிந்தனை செய்து பூசித்து வழிபடும்  அடியார்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேற்றினை, நீராடுவதைத் தவிர்த்ததால் மாசு பொருந்தி உடலின் நிறம் மாறியவர்களாக, உள்ளத்தில் நிறைந்து இருந்த வஞ்சத்தினால் கொடிய பார்வையினை உடையவர்களாகவும், வழுக்கைத தலைவர்களாகவும் விளங்கிய சமணர்களுடன் அடியேன் கொண்டிருந்த தொடர்பு ஈசனின் அருளால் துண்டிக்கப்பட்ட பின்னர் ஈசனையே இடைவிடாது நினைத்தவாறு அவனது திருவடிகளைச் சென்று சேரும் நாள் எந்நாளோ  என்று ஏக்கத்துடன் வருந்தி வாழும் அடியேன் பெறுவேனோ. பெருமானே, நீவிர் தான் அத்தகைய அருளினை அடியேன் பெறுமாறு அருள் புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com