84. குலம் பலம் பாவரு - பாடல் 5

அடியேன் ஏங்குகின்றேன்
84. குலம் பலம் பாவரு - பாடல் 5


பாடல் 5: 

    அருந்தும் பொழுது உரையாடா அமணர்
                                                 திறம் அகன்று 
    வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு
                                                 உண்டு கொலோ
    திருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
    பொருந்தும் தவமுடைத் தொண்டர்க்குத்
                                                தொண்டராம் புண்ணியமே


விளக்கம்:


அருந்தும் பொழுது=உணவு உட்கொள்ளும் நேரத்தில்; திறம்=சமயக் கோட்பாடு; அரன்=பாவங்களை அரித்து போக்குவதால் வந்த பெயர்; பொருந்து தவமுடைத் தொண்டர்  என்பதற்கு, சென்ற பிறவிகளில் செய்த தவத்தின் பயனாக திருவாரூரில் பிறக்கும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் என்று விளக்கமும் பொருத்தமான விளக்கமே.  

பொழிப்புரை:

உணவு உட்கொள்ளும் நேரத்தில் பேசுவதைத் தவிர்க்கும் பழக்கம் கொண்டுள்ள சமணர்களின்  சமயக் கோட்பாட்டிலிருந்து விலகி வந்து, அந்நாள் வரையில் அவர்களுடன் பழகி வாழ்ந்தமை குறித்து வருந்தியவாறு, அரனே என்று பெருமானை அழைத்து வாழ்த்தி வாழும் அடியேனுக்கு, திருத்தமாக அமைந்துள்ள மதில்களை கொண்டுள்ள ஆரூர் நகரத்தில் உறையும் மூலட்டானனுக்கு பொருந்தியவாறு தவத்தினில் ஈடுபட்டுள்ள அடியார்களுக்கு தொண்டனாகும் நற்பேறு கிடைக்குமா என்று அடியேன் ஏங்குகின்றேன். பெருமானே, நீரே அருள் புரிந்து அத்தகைய நற்பேறு எனக்கு கிடைக்குமாறு அருள் புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com