85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 5

நஞ்சு ஒடுக்கப்பட்ட
85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 5


பாடல் 5


    நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
           நற்றவனே நின் பாதம் போற்றி போற்றி
    வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி
          வெண்மதியம் கண்ணி விகிர்தா போற்றி
    துஞ்சிருள் ஆடல் உகந்தாய் போற்றி
          தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
    செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
         திருமூலட்டானனே போற்றி போற்றி


விளக்கம்:

வெஞ்சுடரோன்=சூரியன்:

தக்க யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்கள் உடைக்கப்பட்டதாகவும், கண்கள் பிடுங்கப் பட்டதாகவும், பல திருமுறைப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.  திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தில் சூரியன் தண்டனை அடைந்ததைக் குறிக்கும் பாடல்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. கண் பறிக்கப்பட்ட சூரியனின் பெயர் பகன் என்று வெளிப்படையாக கூறிய மணிவாசகர், பற்கள் உடைக்கப்பட்ட சூரியனின் பெயரினை குறிப்பிடவில்லை. இந்த சூரியனின் பெயர் பூடன் என்று உரையாசிரியர்கள் கூறுவார்கள்.

    உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே கண்ணைப் பறித்தவாறு உந்தீ பற
    கருக்கெட நாமெலாம் உந்தீ பற
    சூரியனார் தொண்டை வாயினில் பற்களை வாரி நெரித்தவாறு உந்தீ பற
    மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற   

ஆமயம் தீர்த்து அடியேனை என்று தொடங்கும் பதிகத்தில் (பதிக எண்: 6.96) அப்பர் பிரான் பகனின் கண்ணைப் பறித்த வீரபத்திரர், சூரியர்களில் ஒருவனது பல்லை இறுத்தார் என்று குறிப்பிடுகின்றார். எச்சன்=வேள்வியை முன்னின்று நடத்திய வேள்வித் தலைவன்; மெச்சன் என்று தன்னைத் தானே மிகவும் பெரியவனாக நினைத்து மெச்சிக் கொண்டு, சிவபெருமானை அவமதித்து வேள்வி நடத்திய தக்கன். வியாத்திரன் என்பது யாத்ரிகன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. இங்கே மாறான வழியில் சென்ற தக்கன் என்று பொருள் கொள்ளவேண்டும்.. 

    எச்சன் நிணைத் தலைக் கொண்டார் பகன் கண்
           கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக் கொண்டார் 
    மெச்சன் வியாத்திரன் தலையும் வேறாகக் கொண்டார்
           விறல் அங்கி கரம்             கொண்டார் வேள்வி காத்த
    உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார்
           உணர்விலாத் தக்கன் தன்             வேள்வி எல்லாம்
    அச்சம் எழ அழித்துக் கொண்டு அருளும் செய்தார்
           அடியேனை ஆட்கொண்ட             அமலர் தாமே 


மேற்கண்ட பாடலில் இரவிகள் என்று பன்மையில் குறிப்பிட்ட காரணத்தால், ஒருவருக்கு மேற்பட்ட சூரியன் என்பது புலானகின்றது வேதங்களில் த்வாதச ஆதித்யர்கள் என்று பன்னிரண்டு சூரியர்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்திற்கும் அதிபதியாகிய சூரியன் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றான். பன்னிரண்டு வடமொழிப் பெயர்களாவன, தாதா, அர்யமா, மித்ரா, வருணா, இந்திரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்சுமான், பகா, பூஷா, பர்ஜனா.  

பொழிப்புரை:

நஞ்சு ஒடுக்கப்பட்ட கழுத்தினை உடையானே, தவத்தில் ஆழ்ந்து யோக வடிவாக விளங்குபவனே, தக்க யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களை உடைத்தவனே, வெண் பிறையை, தலையில் மாலையாகச் சூடியவனே, ஊழிமுடிவில் உலகெங்கும் அடர்ந்த இருள் சூழ்ந்து இருக்கும் சமயத்தில் விருப்பமுடன் ஆடல் புரிபவனே, தூய திருநீற்றினை உடலில் பூசியவனே, சிவந்த சடையை உடையவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com