86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 1

பூதகணங்களை உடையவனும்
86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 1

முன்னுரை:

காவிரி தென்கரைத் தலங்களில் மிகவும் அதிகமான தேவாரப் பாடல்கள் கொண்ட ; பெருமையை உடைத்த தலம், திருவாரூர் ஆகும். அப்பர் பெருமானின்
(தற்போது நமக்கு கிடைத்துள்ள பதிகங்களில்) பாடல்கள் பெற்ற திருத்தலங்களில் மிகவும் அதிகமான பாடல் பெற்ற தலம் திருவாரூர் ஆகும். இந்த இரண்டு பெருமைகளைத் தவிர முதல் ஏழு திருமுறைகளிலும் இடம் பெரும் தலங்கள் மூன்றினில் திருவாரூர் ஒன்றாகும் (மற்ற இரண்டு தலங்கள், திருமறைக்காடு மற்றும் கச்சி ஏகம்பம்). திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகங்கள், பெருகிய ஆர்வத்துடன், மனம் குழைந்து உள்ளம் உருகி பாடிய பதிகங்கள் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.

    நீடுபுகழ்த் திருவாரூர் நிலவு மணிப் புற்றிடம்
                               கொள் நிருத்தர் தம்மைக்
    கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து
                              கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
    பாடிளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான
                              பலவும் பாடி
    நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து
                            உருகி நயந்து செல்வார்  
  


பாடல் 1:

    பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய் வண்ணத்தானும்
    கூடிள மென்முலையாளும் கூடிய கோலத்தினானும்
    ஓடிள வெண்பிறையானும் ஒளிதிகழ் சூலத்தினானும் 
    ஆடிளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

விளக்கம்:

சிவகணங்கள், மூப்பு அடையாமல், என்றும் இளைமையாக இருப்பதால் இளம் பூதம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஓடிள வெண்பிறை என்று, இளமையாக காணப்படும் சந்திரனின் தோற்றம் அழிந்து தேய்ந்து இருந்த நிலை குறிப்பிடப்படுகின்றது. அருமையான மகன் என்பதை குறிக்கும் அருமகன் என்ற தொடர் அம்மான் என்று மருவி உள்ளது. நமக்கு மிகவும் அருமையான கடவுள் சிவபெருமான் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். கூடிள என்று ஒன்றுக்கொன்று நெருக்கமாக அமைந்துள்ள இறைவியின் மார்பகங்களின் அழகினை அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.  

பொழிப்புரை:

பண்ணிசைத்து பாடுகின்ற இளைய பூதகணங்களை உடையவனும், பவளம் போன்று சிவந்த வாயினை உடையவனும், நெருங்கி இளமையும் அழகும் கலந்து விளங்கும் மார்பகங்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டதால் ஒப்பற்ற அழகோடு விளங்குபவனும், தேய்ந்து அழிந்து கொண்டிருந்த நிலையில் இருந்த சந்திரனை வெண்பிறையாகச் சூடி, சந்திரனுக்கு அழியாத நிலை ஏற்படுத்தியவனும், ஒளியுடன் விளங்கும் சூலப் படையை உடையவனும், அசைந்து ஆடும் இளைய பாம்பினைத் தனது இடுப்பில் கட்டியவனும் ஆகிய சிவபிரான், ஆரூர் நகரத்தில் உறையும் அம்மான் ஆவான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com