86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 3

தீயின் நிறத்தை
86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 3


பாடல் 3:

    நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர்
                                        நெஞ்சத்து உளானும்
    ஏறு உகந்து ஏற வல்லானும் எரிபுரை
                                       மேனியானும்
    நாறு கரந்தையினானும் நான்மறைக்
                                      கண்டத்தினானும்
    ஆறு சடைக் கரந்தானும் ஆரூர் அமர்ந்த
                                       அம்மானே

விளக்கம்:

எரிபுரை மேனியினான்=தீயின் நிறத்தை ஒத்தவன்: பொதுவாக நாம் அணிந்துகொள்ளும் திருநீறு பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படுகின்றது. ஆனால் சிவபெருமான், ஊழி முடியும் சமயத்தில், அணிந்து கொள்ளும் திருநீறு நாம் அணிந்து கொள்ளும் திருநீறு போன்றது அல்ல. பிரமன் திருமால் முதலான தேவர்களின் இறந்த உடலை எரித்த பின்னர் சாம்பலை அவன் தனது மேனியில் பூசிக்கொண்டு, உலகில் தான் ஒருவனே நிலையானவன் என்றும் மற்ற உடல்கள் அனைத்தும் அழியக்கூடியவை என்றும், மற்ற உயிர்கள் அனைத்தும் தன்னிடம் ஒடுங்கும் என்பதையும் உணர்த்துகின்றான். இவ்வாறு சர்வ சங்கார காலத்தில் அழிந்த உடல்களின் சாம்பலை பூசிக்கொள்ளும் வல்லமை வேறு எவருக்கும் இல்லை என்பதால், நீறு மெய் பூச வல்லான் என்று குறிப்பிட்டு அப்பர் பிரான், சிவபிரானின் அழியாத தன்மையை நமக்கு உணர்த்துகின்றார். மெய் என்று நமது உடலினை குறிப்பிட்டாலும், உண்மையில் நமது உயிர்கள் அனைத்தும் (பிரமன், திருமால் மற்ற தேவர்கள் உட்பட) பொய்யான உடல்கள் தாம். சிவபிரானது உடல் ஒன்றே நிலையானது, மெய்யானது என்பதும் இங்கே கூறப்படுகின்றது.     

பொழிப்புரை:

என்றும் நிலைத்திருக்கும் தனது உடலின் மீது, சர்வ சங்கார காலத்தில் அனைத்து உடல்களும் அழிந்த பின்னர் அந்த உடல்களின் சாம்பலை, பூசிக்கொள்ளும் வல்லமை படைத்தவன் சிவபெருமான். அந்த சிவபெருமான், தன்னை விருப்பத்துடன் நினைக்கும் அடியார்களின் நெஞ்சத்தில் இருக்கின்றான்: காளையை விருப்பமுடன் தனது வாகனமாக ஏற்றுக் கொண்ட சிவபெருமான், தீயின் நிறத்தை ஒத்த மேனியினைக் கொண்டவன்: நறுமணம் கமழும் கரந்தை மலரைச் சூடுபவனும், நான்மறைகளை ஓதும் குரல்வளையை உடையவனும், கங்கை நதியைத் தனது சடையில் மறைத்தவனும் ஆகிய சிவபெருமான், ஆரூர் நகரத்தில் உறையும் அம்மான் ஆவான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com