86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 4

காலத்தை ஆட்சி செய்பவன்
86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 4


பாடல் 4:

    கொம்பு நல் வேனிலவனைக் குழைய
                                           முறுவல் செய்தானும்
    செம்பு நல் கொண்டு எயில் மூன்றும்
                                           தீயெழக் கண் சிவந்தானும்
    வம்பு நல் கொன்றையினானும் வாட்கண்ணி
                                          வாட்டம் அது எய்த 
    அம்பர ஈருரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே


விளக்கம்:


வேனிலவன்=வேனில் காலத்தை ஆட்சி செய்பவன், வசந்த காலம் மன்மதனுக்கு உரியதாக கருதப் படுவதால், வேனிலவன் என்று அப்பர் பிரான் மன்மதனை குறிப்பிடுகின்றார். கொம்பு=ஊதுகொம்பு: வசந்த காலத்தில் கூவும் குயில், தலைவன் தலைவியர்க்கு  இடையே உள்ள அன்பினை மேலும் பெருகச் செய்வதால், அது மன்மதனின் ஊதுகுழலாக கருதப் படுகின்றது. அம்பரம்=மேலாடை: தனது தவத்தினைக் கலைக்கும் ஆற்றல் மன்மதனுக்கு மட்டுமல்ல வேறு எவருக்கு இல்லை என்பதை உணர்த்தும் வண்ணம் ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்தவாறே, மன்மதனை எரித்தவர் சிவபெருமான். நல்ல செம்பால் செய்யப்பட்ட கோட்டை என்று திரிபுரத்து அரக்கர்களின் கோட்டையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். திரிபுரங்களை, முறையே பொன், வெள்ளி, இரும்பினால் செய்யப்பட்ட கோட்டைகள் என்றே புராணங்கள் குறிப்பிடுகின்றன. பொன்னுடன் செம்பு சேர்த்தால் தான் பொன் கெட்டிப்படும் என்பதால், அவ்வாறு சேர்க்கப்பட்ட செம்பினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. பசுமையான யானையின் தோல், உடலுக்கு கெடுதி விளைவிக்கும் என்று நம்பப்படுவதால், சிவபெருமான் தன் மீது ஏவப்பட்ட யானையைக் கொண்டு அதன் தோலினைத் தனது உடலின் மேல் போர்வையாக போர்த்துக் கொண்டபோது உமையம்மை, கொண்ட கவலை இங்கே உணர்த்தப்படுகின்றது. 

யானையின் தோலை உரித்த சிவபெருமான், அந்த தோலினை, தனது உடலில் போர்த்துக் கொண்ட நிகழ்ச்சி பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டாலும், அதற்காக உமையம்மை கவலை அடைந்தது ஒரு சில பாடல்களில் மட்டுமே சொல்லப்படுகின்றது. பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.32), அப்பர் பிரான் இதே நிகழ்ச்சியை நகைச்சுவையாக கூறுகின்றார். பார்வதி தேவியின் கவலையை புரிந்து கொண்ட சிவபெருமான், யானையின் தோலைத் தாங்க முடியாதவராக நடித்து, பின்னர் அது நடிப்பு என்பதை உணர்த்தும் வண்ணம், தனது பற்கள் வெளியே தெரியுமாறு சிரித்ததாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். கவலை மிகவும் அதிகமாகவே, அம்பிகை தனது விரல்களை பலமுறை உதறியதாக, அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அலக்கல்=கவலை: பசுந்தோல் என்பதை புலப்படுத்த, ஈருரி, அதாவது இரத்தம் தோய்ந்து ஈரமாக உள்ள தோல் என்று இங்கே கூறப்படுகின்றது.

    உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட
    விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கல் நோக்கி 
    தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலராகித் தாமும் 
    சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே    

பொழிப்புரை:

இளவேனில் காலத்தினை ஆட்சி செய்யும் மன்மதன், தனது ஊதுகொம்பாக குயிலைக் கொண்டுள்ளான். இவ்வாறு அனைவரது கவனத்தையும் சிதறச் செய்யும் வல்லமை படைத்த மன்மதனை, ஏளனச் சிரிப்பு சிரித்தவாறே, அவனது உடல் நெருப்பினில் எரிந்து குழையும் வண்ணம் விழித்தவன் சிவபெருமான். செம்பு கலந்து செய்யப்பட்ட மூன்று கோட்டைகளும் தீயில் எரியும் வண்ணம் கோபத்தால் கண் சிவந்தவனும், நறுமணம் வீசும் கொன்றை மாலையினை அணிந்தவனும் சிவபெருமான் ஆவார். பசுமையான யானையின் தோல் போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொண்டதால் உமையம்மை அடைந்த கவலையினையும் பொருட்படுத்தாமல், இருந்தவர் சிவபிரான் ஆவார். அத்தகைய வல்லமை பொருந்திய சிவபிரான் ஆரூர் நகரில் அமர்ந்திருக்கும் அம்மான் ஆவார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com