86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 9

ஆனந்தக் கூத்து நிகழ்த்தும்
86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 9


பாடல் 9:

    வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர
    ஓடு அரங்காக வைத்தானும் ஓங்கி ஓர் ஊழி உள்ளானும்
    காடு அரங்கா மகிழ்ந்தானும் காரிகையார்கள் மனத்துள்
    ஆடரங்கத்து இடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

விளக்கம்:

வீடு அரங்காக நிறுப்பான்=முக்தி உலகினை தனது ஞானக் கூத்து நிகழும் அரங்கமாக நிலையாக நிறுத்துபவன் வேதி=பிரமன்: விசும்பு=ஆகாயம், இங்கே பரந்த வெளியிடம்: 

இந்த பாடலில் முக்தி உலகினை, அடியார்களுக்கு நிலையாக நிறுத்துபவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எப்போதும் முக்தி நிலையில் இருக்கும் சிவபெருமான், தன்னைச் சாரும் அடியார்களையும், தானாகவே மாற்றும் (தன்னைப் போன்று முக்தி நிலையில் இருப்பவர்களாக) மாற்றும் தன்மை படைத்தவன் என்று பந்தத்தால் என்று தொடங்கும் சீர்காழி பதிகத்தில் (1.126) சம்பந்தர் கூறுகின்றார். சிவபிரானைச் சேர்வது எப்படி என்று இந்த பாடலின் முதல் மூன்று அடிகளில் சம்பந்தப் பெருமான் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார். விக்கத்தே என்றால் விக்னம் செய்யும், இடையூறு விளைவிக்கும் என்று பொருள். பக்தி எனப்படும் விதையை நமது மனதினில் ஊன்றி, பரந்து சென்று நம்மை பல விதங்களிலும் அழைக்கும் ஐம்புலன்களின் வழியே செல்லாமல் அவற்றை அடக்கி, நமது உட்பகைகளாக விளங்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் எனும் அறுவகைப் பகைகளை அறுத்தெறிந்து, நாம் முக்திநிலை அடைய இடையூறாக இருக்கும் முக்குணங்களை (சாத்வீகம், இராஜசம், தாமசம்) அடக்கி, எப்போதும் திரிந்துகொண்டு இருக்கும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நான்கு அந்தக்கரணங்களை ஒருவழிப் படுத்தி சித்தத்தில் செலுத்தி பரம்பொருளாகிய சிவபிரானைச் சேரவேண்டும் என்று சம்பந்தர் கூறுகின்றார். அவ்வாறு சிவபிரானின் திருவடிகளைச் சென்று அடையும் அடியார்களை, தன்னைப் போலவே மாற்றும் சிவபிரான் உறையும் இடம் கழுமலம் என்று இங்கே கூறுகின்றார். பாடலின் இறுதி அடியில் கழுமலத்தில் வாழும் மறையவர்களின் பண்பை விவரிக்கின்றார். வேதங்களின் ஆறு பிரிவுகளையும் நன்றாக கற்றுணர்ந்த மறையவர்கள், வேதங்களின் உட்பொருளாக விளங்கும் சிவபெருமானின் திருவடிகளை இடைவிடாது தியானிக்கும் அந்தணர்கள் வாழும் பதி சீர்காழி ஆகும். 

    பத்திப் பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்
                   பாலே போகாமே காவாப் பகை         
                  அறும்     வகை நினையா 
    முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்
                  மூடா வூடா நால்                 
                  அந்தக்கரணமும் ஒரு நெறியாய்ச்
    சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்
                 சேர்வார் தாமே தானாகச்             
                 செயும் அவன் உறையும் இடம்
    கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கு நற்பொருள்
                 காலே ஓவாதார் மேவும்           
                 கழுமல வளநகரே  

இதே கருத்து, சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதியின் நூறாவது பாடலிலும் காணப்படுகின்றது. துறக்கம் என்றால் முக்தி நிலை என்று பொருள். முக்தி நிலையில் இருக்கும் சிவபிரானைச் சேரும் அடியார்களும், மேரு மலையின் முன்னர் இருக்கும் காக்கையும் பொன் நிறத்தில் மின்னுவது போன்று, முக்தி நிலை பெறுவார்கள் என்று இங்கே கூறுகின்றார். மேருமலையினை பொன்மலை என்று ஆசிரியர் இங்கே கூறுகின்றார். இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் அப்பர் பிரான் பொன்வரை என்று மேரு மலையினை குறிப்பிட்டதை நாம் கண்டோம். 

    மாயன் நன் மாமணி கண்டன் வளர்ச்சடையாற்க்கு அடிமை
    ஆயின தொண்டர் துறக்கும் பெறுவது சொல்லுடைத்தே 
    காய்சின ஆனை வளரும் கனகமலை அருகே
    போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே

பொழிப்புரை:

முக்தி உலகினை, தனது ஆனந்தக் கூத்து நிகழ்த்தும் இடமாக நிலை நிறுத்தி, முக்தி அடைந்த அடியார்களுக்கு ஆனந்தக் கூத்து ஆடிக் காட்டுபவன் சிவபெருமான். அந்த சிவபெருமான் விண்ணினையும் தாண்டி தீப்பிழம்பாக ஓங்கி நின்றபோது, அந்த தீப்பிழம்பின் உச்சியைக் காணும் பொருட்டு, பரந்த வெளியாகிய அன்னமாக உருவெடுத்து ஆகாயத்தில் பல இடங்களிலும் ஓடிய பிரமன் காண முடியாதபடி திகைத்தான். இவ்வாறு பிரமன் அலைந்து தேடிக் களைத்த, அகன்று பரந்து காணப்படும் வெளியையே தான் ஆடும் அரங்காகக் கொண்டவன் சிவபெருமான்: ஒவ்வொரு ஊழியையும் கடந்து நிற்பவன் சிவபெருமான் ஆவார்: சுடுகாட்டினைத் தான் ஆடும் அரங்காக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டவன் சிவபெருமான்: தன்னை வழிபடும் மகளிரின் கண்களையும் மனத்தினையும், தனது உறைவிடமாகக் கொண்டு அங்கே நடனம் ஆடும் சிவபெருமான், ஆரூர் நகரில் வீற்றிருக்கும் அம்மான் ஆவான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com