86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 10

நாகத்தினை படுக்கையாக
86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 10


பாடல் 10:
பையம் சுடர் விடு நாகப் பள்ளி கொள்வான்
                                 உள்ளத்தானும்
கையஞ்சு நான்கு உடையானைக் கால் விரலால்
                                அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கு
                               அருள் செய்யும்
ஐ அஞ்சின் அப்புறத்தானும் ஆரூர் அமர்ந்த
                               அம்மானே


விளக்கம்:


பை=நச்சுப்பை: சுடர் விடுதல்=தனது தலையில் வைத்துள்ள மாணிக்கக் கல்லால் ஒளி மிளிரச் செய்யும் பாம்பு: அம் சுடர்=அழகிய மாணிக்கச் சுடர்: நாகப் பள்ளி கொள்வான்=நாகத்தை படுக்கையாக உடைய திருமால்: 

ஐயஞ்சின் அப்புறத்தான் என்பதற்கு இருபத்தைந்தைக் கடந்தவன் என்று பொருள். இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களுடன் புருடன் எனப்படும் வித்தியா தத்துவத்தையும் கடந்தவன் இறைவன் என்று பொருள் பலரால் கூறப்படுகின்றது. தருமை ஆதீனம் குருசன்னிதானம் இந்த சொற்றொடருக்கு ஒரு புதிய விளக்கம் ஒன்றினை கூறியுள்ளார். இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களுக்கு அப்பாற்பட்டவன் திருவாரூர் அம்மான் என்று கூறுகின்றார். திருவாரூர் தியாகேச மூர்த்தம் சோமாஸ்கந்த வடிவம் போல் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த வடிவம் சோமாஸ்கந்த வடிவத்தினினும் மாறுபட்டது என்று அவர் விளக்கம் கூறுகின்றார்.

இங்கே உள்ள தியாகேச மூர்த்தம், இந்திரனிடமிருந்து முசுகுந்த மன்னன் பெற்றது என்பதை நாம் அறிவோம். இந்திரனுக்கு இந்த மூர்த்தம் எவ்வாறு கிடைத்தது. திருமால் தனது உள்ளத்தில் தியாகேசரின் உருவத்தை நிலைநிறுத்தி வழிபட்டு வந்தார். தியாகேசரும் திருமாலின் மூச்சுக் காற்றின் சலனத்திற்கு ஏற்ப நடமாடினார். ஒருமுறை இந்திரன் தான் வழிபடுவதற்காக இந்த மூர்த்தத்தை திருமாலிடம் வேண்ட, திருமாலும் அவனுக்கு அளித்தார். அன்று முதல் இந்த மூர்த்தம் இந்திரனால் வழிபடப்பட்டு வந்தது.  இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களும் சிவபிரானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை. ஈசான முகத்திலிருந்து தோன்றிய மூர்த்தங்கள், சோமஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர்: தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திருபுராரி (திருபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமை மகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜ சம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும், 

பொழிப்புரை:

சுடர் விட்டு ஒளி வீசும் மாணிக்கக் கற்களையும் நச்சுப்பையையும் கொண்டுள்ள நாகத்தினை படுக்கையாக உடைய திருமாலின் உள்ளத்தில் இருப்பவன், திருவாரூரில் உறையும் தியாகேசப் பெருமான். அவன் இருபது கைகளை உடைய அரக்கன் இராவணன், கயிலை மலையினைப் பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, தனது கால் விரலால் கயிலை மலையை அழுத்தி, அதன் கீழ் அரக்கன் நொறுங்குமாறு செய்தவன். எப்போதும் வாய்மையை பேசி, பொய்கள் பேசுவதற்கு அஞ்சியவர்களாய், இறைபணியில் ஈடுபட்டு  மற்றவர்கள் புகழத் தக்கவாறு நடந்துகொள்ளும் அடியார்களுக்கு அருள் செய்யும் சிவபெருமான், இருபத்தைந்து தத்துவங்களைக் கடந்தவன் ஆவான். அவன் தான் ஆரூர் தலத்தில் அமர்ந்த அம்மான் ஆவான்.   

முடிவுரை:
ஆதிரைத் திருநாள் குறித்து தனியாக ஒரு பதிகம் அருளி, ஆதிரைத் திருநாளின் சிறப்புகளை நமக்கு உணர்த்திய அப்பர் பிரான், இந்த பதிகத்தில், ஆரூர் தியாகராஜன் வலம் வரும் சிறப்பினை நமக்கு உணர்த்துகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில், முரசங்கள் அதிர, யானை முன்னே செல்ல, அன்பர்கள் இறைவனின் பெருமையைப் புகழ்ந்து பாட, பாம்பினை இடுப்பில் கட்டிய சிவபெருமான் வீதி விடங்கராக உலா வருவதை குறிக்கின்றார். ஐந்தாவது பாடலில், வீதிவிடங்கப் பெருமானின் அழகில் மயங்கிய தங்களது தலைவிக்காக தோழியர்கள் தூதுச் செய்தியினைச் சொல்ல, வீதிவலம் வரும் பெருமானை அணுகும் காட்சியும், அடியார்கள் அந்த பெருமானின் புகழினைப் பாடியவாறு வலம் வரும் பெருமானைத் தொடரும் காட்சியும் விவரிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com