87. உயிராவணம் இருந்து - பாடல் 1

ஒட்டி வாழும் சிவபெருமான்
87. உயிராவணம் இருந்து - பாடல் 1


முன்னுரை:


திருவாரூரில் பல நாட்கள் இறைத்தொண்டு செய்த போது அப்பர் பெருமான் அருளிய பதிகம். மிகவும் ஆழமான கருத்துக்கள் அமைந்த பதிகம். பல ஆழமான கருத்துக்கள் சொல்லும் பதிகத்தில், வழக்கமாக உள்ள பத்து பாடல்களுக்கு பதிலாக, பதினோரு பாடல்கள் அமைந்திருப்பது நமது பாக்கியமாகும். 

பாடல்  1:

    உயிராவணம் இருந்து உற்று நோக்கி
                         உள்ளக் கிழியின் உரு எழுதி
    உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத் தந்தால்
                        உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி  
    அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி
                      அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
    அயிராவணமே என் அம்மானே நின்
                    அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதரே' 

விளக்கம்:
உயிராவணம்=உயிராத வண்ணம்; உயிர்த்தல் என்ற சொல் மூச்சு விடுதல் என்ற பொருளில் இங்கே கையாளப்பட்டுள்ளது. உற்று நோக்கி=தியானத்தில் ஆழ்ந்து மனதினில் உருவகப்படுத்திய இறைவனின் உருவத்தினை நினைந்து; கிழி=திரைச்சீலை, துணி; உயிர் ஆவணம் செய்தல்=உயிரினை ஒப்படைத்தல் ஆவணம்=சாசனம்;. ஆவணம் என்பதற்கு ஓலை என்ற பொருள் கொண்டு அடிமை ஓலை எழுதி, தன்னை அடிமையாக இறைவனுக்கு ஒப்படைத்தல் என்றும் கூறுவார்கள். அயிராவணம்=கயிலை மலையில் உள்ள யானை, இரண்டாயிரம் தந்தங்களை உடையது. அயிராவணம் (நான்காவது அடியில் உள்ள சொல்)=ஐ இரா வண்ணம், ஐயம் ஏதும் இல்லாத வண்ணம் உள்ள உண்மையான மெய்ப்பொருள்.

இந்த தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் திருநாமம் தியாகராஜன் என்பதால், அந்த பெயருக்கு பொருத்தமாக ஆரூர் ஆண்ட பெருமான் என்று குறிப்பதை நாம் உணரலாம். அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தேவர் வாழும் உலகத்தை ஆளக்கூடிய வல்லமையும் தகுதியும் இருந்தபோதிலும், மண்ணுலகில் வாழும் அடியார்களின் நலன் கருதி, அவர்கள் தன்னை வணங்கி பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், ஆரூரில் குடிகொண்ட பெருமானை, ஆரூர் ஆண்ட பெருமான் என்று கூறுகின்றார். இந்த கருத்து, நமக்கு பூந்துருத்தி காடநம்பி அவர்களின் திருவிசைப்பா பாடல் ஒன்றினை (ஒன்பதாம் திருமுறை) நினைவூட்டும். இந்த பாடலில் காடநம்பி, தனது அடியார்களுக்கு சியலோகத்தை அளித்த சிவபெருமான், தான் விருப்பமுடன் தில்லையில் தங்கி, தில்லை வாழ் அந்தணர்களுடன் கலந்து மகிழ்ந்து இருப்பதாக கூறுகின்றார்.   

    கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்று உன்
    அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே
    முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரொடும்
    குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவிக் கூத்து ஆடினாயே

அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்டான் என்று அப்பர் பெருமான் கூறுவது, அமரர் நாட்டினை விட சிறப்பு வாய்ந்தது திருவாரூர்த் தலம் என்பதை உணர்த்துகின்றது. இதனால் தான் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகை பதிகத்தில் கூறினார் போலும்.

ஒட்டி வாழ்தல்=உடனாகி இருத்தல்; இந்தப் பாடலில், இறைவன் யாரோடு ஒட்டி வாழ்வான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனை தியானித்து, அவனது உருவத்தை நமது மனதிலிருந்து நீங்காத வண்ணம் எழுதி வைத்து, நாம் அவனுக்கு பூரண அடிமை என்ற நிலையை அவனுக்கு உணர்த்தினால், அவன் அத்தகைய அடியார்களுடன் இணைந்து வாழ்வான் என்று இங்கே விளக்குகின்றார். அடியார்கள் மண்ணில் வாழ்ந்த போதே அவர்களுடன் ஒட்டி வாழும் சிவபெருமான், அத்தகைய அடியார்கள் தங்களது உடலைத் துறந்த பின்னர், அவர்களுக்கு முக்தி அளித்து அவர்களை விட்டுப் பிரியாது இணைந்து வாழ்வான் என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு ஒட்டிட்ட பண்பினாராய் வாழ்பவர்களை சிவ கணத்தவர்களாக சம்பந்தர் தனது மயிலைப் பதிகத்தின் முதல் பாடலில் கருதுகின்றார்.  

    மட்டிட்ட புன்னை அம் கானல் மட மயிலைக்
    கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு 
    அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

எவரோடு இறைவன் ஒட்டி வாழ்வான் என்று முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், கடைசி அடியில், இறைவனை உணராதவர்கள், அவனது இன்பத்தைப் பெறுவதற்கு உரியவர்கள் அல்லர் என்று கூறுகின்றார். அருட்கண் என்று சிவபெருமான் நமக்கு அருளிய கண் என்று இங்கே கூறப்படுகின்றது.  

ஆரூரில் பிறந்த அடியார்களின் பெருமையை உணர்த்தும் முகமாக சிவபிரான் செய்த ஒரு திருவிளையாடல், நமிநந்தி அடிகளின் வரலாற்றில் சேக்கிழாரால் கூறப்படுகின்றது. திருவாரூரில் உள்ள சிவனடியார்கள் எல்லோரும் சாதி பேதமின்றி சிவகணங்களாக கருதப் படுகின்றனர் என்ற உண்மையை சிவபெருமான் நமிநந்தி அடிகளுக்கு உணர்த்தியதே இந்த நிகழ்ச்சி ஆகும். திருவாரூருக்கும் நமிநந்தி அடிகள் வாழ்ந்து வந்த ஏமப்பேறூர் என்ற ஊருக்கும் இடையே உள்ள ஊர் மணலி என்பதாகும். திருவாரூரில் உள்ள தியாகேசப் பெருமான் ஊர்வலமாக மணலிக்கு எழுந்து அருளும் போது, அங்கே சென்று பெருமானை தரிசனம் செய்து வணங்குவது நமிநந்தி அடிகளாரின் வழக்கம். அவ்வாறு ஒரு நாள் வழிபட்ட பின்னர் தனது இல்லத்திற்கு அடிகள் திரும்புகின்றார். பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் சென்று வந்த காரணத்தால், தான் குளித்த பின்னரே தான் தினமும் சியபெருமானுக்கு செய்யும் வழிபாடுகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், மனைவியை, தான் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார். அவரது மனைவியும் குளிர்ந்த நீர், உலர்ந்த ஆடை, திருநீறு, முதலானவற்றை தயாராக எடுத்து வைத்தார். இதனிடையில் வெளியே சென்று அந்த அயர்ச்சி காரணமாக நமிநந்தி அடிகள் சற்றே கண்ணயர்ந்தார். இவ்வாறு தூங்கியபோது கனவின் கண் வந்த சிவபெருமான், அடிகளுக்கு ஆரூரில் பிறந்தார் அனைவரும் தமது கணங்கள் என்றும், அந்தத் தன்மையை அடிகளுக்கு அடுத்த நாள் நேரில் காட்டுவதாகவும் கூறினார். 

    மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான் தாம்
    மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளி
    ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
    ஆன பரிசு காண்பாய் என்றருளிச் செய்தங்கு எதிர் அகன்றார்

கனவில் வந்த சிவபெருமான் மறைந்த பின்னர் கண் விழித்த அடிகளார், தான் பூஜை செய்யாமல் கண் அயர்ந்ததை நினைத்து வருந்தி, தான் செய்யவேண்டிய தினசரி வழிபாட்டினைச் செய்தார். மனைவிக்குத் தான் கண்ட கனவின் விவரங்களைத் தெரிவித்தார். மறுநாள் விடியற்காலையில் எழுந்து தனது நித்திய அனுஷ்டானங்களை முடித்த பின்னர், திருவாரூர் சென்ற அடிகளார் அங்கே கண்ட காட்சி அவரை வியப்படைய வைத்தது. அனைவரையும் சிவகணங்களாகக் கண்ட அடிகளார், நிலத்தில் வீழ்ந்து அனைவரையும் வணங்கி மகிழ்ந்தார்.

    தெய்வப் பெருமான் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்
    மை வைத்தனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால்
    மொய் வைத்து மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த 
    கை வைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து களி சிறந்தார் 

அடிகளார் உண்மையை உணர்ந்த பின்னர், சிவபிரான் தான் அடிகளாருக்குக் காட்டிய காட்சியை மறைத்து திருவாரூர்ப் பிறந்தார்கள் அனைவரையும் முன் போல் மனிதர்களாகவே காட்டினார். உடனே அடிகளார் தனது பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டினார். மேலும் திருவாரூர் நகரத்துச் சிறப்பினை இறைவன் உணர்த்தியதை மனதில் கொண்டு, ஏமப்பேறூரை விடுத்து, திருவாரூர் குடி புகுந்து தந்து எஞ்சிய வாழ்நாளை, சிவத்தொண்டில் கழிக்கலானார். இந்த நிகழ்ச்சி தான், சுந்தரர், திருவாரூர்[ பிறந்தார்கள் அனைவரையும் தொகை அடியார்களாக கருதி, திருவாரூர்ப் பிறந்தார் எல்லார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் பாட வைத்ததோ?

    படிவம் மாற்றிப் பழம்படியே நிகழ்வும் கண்டு பரமர் பால்
    அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று பணிந்து அருளால்
    குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து
    நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார்

பொழிப்புரை:

அயிராவணம் என்று இரண்டாயிரம் தந்தங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த யானை கயிலையில் இருந்தாலும், அதனை வாகனமாகக் கொள்ளாமல், எளிமையான எருதினை வாகனமாகக் கொண்டு, தேவர்கள் உலகத்தினை ஆளும் திறமையும் வல்லமையும் கொண்டிருந்தாலும், தேவலோகத்தை ஆளாமல், அடியார்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரூர் நகரினை ஆளும் இறைவனே; தங்களது உயிர் மூச்சினை அடக்கி, உன்னை தியானித்து, உனது உருவத்தைத் தங்களது உள்ளத்தில் என்றும் அழியாத வண்ணம் பதித்து, உனக்கு அடிமையாகத் தங்களைக் கருதி, அந்த அடிமை சாசனத்தை உனது கையில் ஒப்படைக்கும் அடியார்களுடன், நீ இணைந்து வாழ்கின்றாய். எவருக்கும் எந்த ஐயமும் ஏற்படாமல் உண்மையான மெய்ப்பொருளாக இருப்பவனே, உன்னால் வழங்கப்பட்ட கண்கள் கொண்டு உன்னைக் காணாதவர்கள், உனது அருளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்லர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com