99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 2

நறுமணம் உலாவும்
99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 2

பாடல் 2:

    கொட்டமே கமழும் குழலாளொடு  கூடினாய்
        எருது ஏறினாய் நுதல்
    பட்டமே புனைவாய் இசை
        பாடுவ  பாரிடமா
    நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை
        நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
    இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை கொலோ

விளக்கம்:

கொட்டம்=ஒருவகை வாசனை பொருள்; பாரிடம்=பூத கணங்கள்; நவில்தல்=செய்தல்; இந்த பாடலில் நறுமணம் கமழும் கூந்தல் கொண்ட அம்மை என்று உமை அம்மையாரை குறிக்கிறார். பாரிடம் என்றால் பூதம் என்று பொருள். நவிலுதல்=பழகுதல்; இந்தப் பாடலில் சிவபெருமானின் ஐந்து செய்கைகளின் காரணத்தை அவரிடம் சம்பந்தர் வினவுவதை காணலாம். அந்த செய்கைகளாவன, உமை அம்மையோடு கூடுதல், ஊர்தியாக எருது ஏறுதல், பூத கணங்களின் இசைக்கு ஆடுதல், நெற்றியில் பட்டம் எனும் அணிகலன் அணிந்து இருத்தல், அந்தணர் பிரியாத சிற்றம்பலத்தில் வாழ்தல் ஆகும். நுதல்=நெற்றி; குழல்=கூந்தல்; ஏலவார் குழலி என்பது இங்குள்ள அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. கொட்டமே கமழும் குழல் என்று குறிப்பிடுவதன் மூலம் பிராட்டியின் கூந்தல் இயற்கை மணம் வாய்ந்தது என்பதை ஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். இந்த செய்தி பல திருமுறை பாடல்களில் காணப் படுகின்றது, அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே
காண்போம். கந்தம் மல்கு குழலி என்று புகலி (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.74.3) கூறுகின்றார்.

பந்தம்=பிரியாத பிணைப்பு; பந்தம் என்ற சொல்லுக்கு உதரபந்தம் அணிகலன் என்று பொருள் கொண்டு  ஆபரணத்தை அணிந்த பூத கணங்கள் என்றும் விளக்கம் அளிக்கின்றனர். ஆர்க்க=ஒலிக்க கந்தம்=நறுமணம் அந்தண்=அழகியதும் குளிர்ந்ததும்; அமர்வு எய்தி=விரும்பி அமர்ந்து; பந்தம் உடைய என்ற சொல்லுக்கு தீப்பந்தத்தை ஏந்திய பூதங்கள் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். இரவில் நடனம் ஆடுவதால், வெளிச்சம் வேண்டி தீப்பந்தங்கள் பிடிக்கப் படுகின்றன.  

    பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்கக்
    கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி
    அந்தண் கடல் சூழ்ந்த அழகார் புறவம் பதியா அமர்வு எய்தி
    எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

இந்த குறிப்பு நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டும். தெய்வீக நறுமணம் வீசும் கூந்தல் என்று உணர்த்தும் அதிகை வீரட்டானத்து திருத்தாண்டகப் பாடல் (6.4.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இயற்கையில் நறுமணம் கமழும் கூந்தலுக்கு மேலும் மணம் சேர்க்கும் வகையில் அன்று அலர்ந்த மலர்கள் சூட்டப்பட்டுள்ளன என்றும் அப்பர் பிரான் கூறுகின்றார்.

     செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும்
         செஞ்சடை  எம் பெருமானே   தெய்வ நாறும்
    வம்பின் நாண் மலர்க் கூந்தல் உமையாள் காதல்
          மணவாளனே  வலங்கை  மழுவாளனே
    நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார்
        புரம் மூன்றும் நடுங்கச்  செற்ற
    அம்பனே அண்ட கோசரத்துளானே அவனாகில் அதிகை வீரட்டனாமே

திருவெறும்பூர் தலத்து இறைவியின் திருநாமம் நறுங்குழல் நாயகி என்பதாகும். இந்த பெயரினை சற்று மாற்றி நறுங்குழல் மடவாள் என்று அப்பர் பிரான் அழைக்கும் குறுந்தொகைப் பாடல் (5.74.2) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பிறங்கு=விளங்கும்; கறங்கு= சுழலும், ஓரிடத்தில் நில்லாமல் சுற்றித் திரியும்; சீர்=புகழ் பேணும்=விரும்பும்; பிராட்டியின் கூந்தலை குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு பெருமானின் சடையின் தன்மை நினைவுக்கு வந்தது போலும். அழகாக பின்னப்பட்டு விளங்கும் செஞ்சடை என்று உணர்த்துகின்றார். பிஞ்ஞகன் என்றால் அழகிய தலைக்கோலம் உடையவன் என்று பொருள். 

    பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணு சீர்க்
    கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்
    நறுங்குழல் மடவாளொடு நாள் தொறும்
    எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே   

திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்துப் பாடல் (6.91.3) ஒன்றினில் அப்பர் பிரான் மலரின் நறுமணத்தினை வென்ற கூந்தலை உடையவள் என்று அன்னையை குறிப்பிடுகின்றார். கடுஞ்சுடர்=பேரொளியை உடைய விளக்கு; படிந்து=நிலத்தில் வீழ்ந்து; ஒரு=ஒப்பற்ற; ஓத வேலி=அலைகளையுடைய கடல்; நிறை=மிகுதியாய் காணப்படுகின்ற; மருவை வென்ற=மலர்களின் மணத்தை வென்ற நறுமணம்; 

 கருவை என் மனத்திருந்த கருத்தை ஞானக் கடும்
     சுடரைப் படிந்து கிடந்து அமரர்
  ஏத்தும் உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி
     உலகின் நிறை தொழில்  இறுதி நடுவாய் நின்ற
  மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து
     மாசிலா மணியை  வாசத்
  திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச்
     செழுஞ்சுடரைச் சென்று அடையப்  பெற்றேன் நானே

கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.67.10) அப்பர் பிரான் நறுமணம் கமழ்ந்து கருமையும் மென்மையும் கலந்து காணப்படும் கூந்தலை உடையவள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். விரை=நறுமணம்:: பாறி=சிதறி: வெருவர=அச்சம் கொள்ள: விலங்கல்=மலை, கயிலை மலை: ஞான்று=நாளன்று என்பதன் திரிபு: பருவரை= பருத்த மலை: நறுமணம் கமழ்ந்து கருமையும் மென்மையும் கலந்து காணப்படும் கூந்தலையும், ஒளிவீசும் அணிகளையும், வேல் போன்று நீண்டும் ஒளிபடைத்தும் காணப்படும் கண்களையும் உடைய உமையம்மை அச்சம் கொள்ளுமாறு, கயிலை மலையினை பேர்த்து எடுக்க அரக்கன் இராவணன் முயற்சி செய்த அன்று, அவனது பருத்த மலை போன்று விளங்கும் தோள்களும் தலைகளும் சிதறி விழுமாறு, தனது கால் விரல் ஒன்றினை கயிலை மலை மீது ஊன்றியவன் திருக்கொண்டீச்சரம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்து..  

    விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேல் ஒண்கண்ணாள்
    வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று
    பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழக்
    திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சரத்து உளானே 

திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் தேவியின் திருநாமம் மருவார்குழலி என்பதாகும். மணம் பொருந்திய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.25.1) மருவார் குழலி என்று குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் மணம் கமழும் கூந்தலை உடைய தேவியை ஒரு பாகத்தில் வைத்தவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.

    மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
    திருவார் செம்பொன்பள்ளி மேவிய
    கருவார் கண்டத்து ஈசன் கழல்களை
    மருவாதார் மேல் மன்னும் பாவமே

விசயமங்கை தலத்தின் அருளிய பதிகத்தின் (3.17) முதல் பாடலில் அம்மையை மருவமர் குழலி என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். மரு=வாசனை. இயற்கையாகவே நறுமணம் சென்று அமரும் கூந்தலை உடைய தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மாணிக்க வாசகரும் தனது கீர்த்தித் திருவகவலில் மருவார் குழலி என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். 

    மருவமர் குழல் உமை பங்கர் வார்சடை
    அரவமர் கொள்கை எம் அடிகள் கோயிலாம்
    குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
    விரவிய பொழில் அணி விசயமங்கையே

மரு வளர் கோதை என்ற தொடர் மூலம், என்றும் குறையாது நறுமணம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் கூந்தலை உடைய அன்னை என்று கண்ணார்கோயில் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.101.4) திருஞானசம்பந்தர் கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். தரு=மரங்கள்; கானம்=காடு; துங்கம்=உயர்வு; மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழும் உயர்ந்த பெரிய யானை என்று பெருமானை எதிர்த்து வந்த யானையின் வலிமையை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கண்ணார்கோயில் கருவறையில் அமர்ந்துள்ள இறைவனை அடைந்து தொழும் மனிதர்கள் கற்றோர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

    தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
    மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
    உரு வளர் ஆலநீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
    கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே 

கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.133.1) நறுமணம் கமழும் கூந்தலை உடையவள் என்ற பொருள் பட, கந்தம் மல்கு குழலி என்று பிராட்டியை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். காஞ்சி நகரத்து அடியார்களை எல்லையற்ற நற்குணங்கள் பொருந்திய அடியார்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். 

    வெந்த வெண்பொடிப் பூசு மார்பின் விரி நூல் ஒரு பால் பொருந்த
    கந்தமல்கு குழலியோடும் கடி பொழில் கச்சி தன்னுள்
    அந்தமில் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல்புரி
    எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடர் கெடுமே 

    
திருக்கோளிலி தலத்தின் மீது பதிகத்தின் பாடலில் (7.20.7) சுந்தரர் நறுமணம் உடைய கூந்தல் கொண்ட உமையம்மை என்று குறிப்பிடும் வண்ணம் வம்பமரும் குழலாள் என்று கூறுவதை நாம் இந்த பாடலில் காணலாம். தன்னிடத்தில் அன்பு உடையவனே என்று பெருமானை அழைத்து, பெருமானே உன்னை அல்லால் வேறு எவரொருவர் எனக்கு உதவி செயவல்லார், நீயே குண்டையூரில் இந்த நெல்மலையினை திருவாரூர் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுந்தரர் விண்ணப்பம் செய்யும்

பாடல். 

    எம்பெருமான் உனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும்
    வம்பமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
    செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்
    அன்பதுவாய் அடியேற்கு அவை அட்டித் தரப் பணியே  

பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.48.8), நறுமணம் உலாவும் கூந்தலை உடையவள் என்று பார்வதி தேவியை சுந்தரர் குறிப்பிடுகின்றார். வம்பு= நறுமணம்; கொம்பு=மரக்கிளைகள்; நம்பன்=விரும்பத் தக்கவன்; தரம் வாய்ந்த பொன்னின் நிறத்தை ஒத்த சடையை உடைவன் பெருமான் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுவதை நாம் உணரலாம். கோலினாய்=வளைத்தாய்; பெருமானது சடையின் சிறப்பினை உணர்த்திய சுந்தரர் அம்மையின் கூந்தலின் சிறப்பையும் உணர்த்த ஆசை கொண்டார் போலும். 

    செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீயெழச் சிலை கோலினாய்
    வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
    கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
    நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

பிராட்டியின் கூந்தல் இயற்கை மணம் வாய்ந்தது எனும் தேவாரப் பாடல் குறிப்புகள் நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றன. பரஞ்சோதி முனிவர் தாம் அருளிய திருவிளையாடல் புராணத்தில், இந்த நிகழ்ச்சியை, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் மற்றும் கீரனை கரையேற்றிய படலம் ஆகிய இரண்டு படலங்களில் கூறுகின்றார். பெருமான் தருமிக்கு எழுதிக் கொடுத்த பாடல் குறுந்தொகை எனப்படும் சங்க இலக்கியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இறைவன் எழுதிக் கொடுத்த பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. 

    கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
    செறியெயிற்று அரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீ அறியும் பூவே

வண்டினை நோக்கி பாடுவதாக அமைந்த இந்த பாடலின் கருத்து; நறுமணத்தினை ஆராய்ந்து திரியும் வாழ்க்கையை உடைய அழகிய சிறகுகளை உடைய வண்டே, பயிற்சி மிக்க நட்பும் மயில் போன்ற சாயலும் நெருங்கிய பற்களும் உடைய எனது தலைவியின் கூந்தலில் வீசும் நறுமணத்தினை விடவும் அதிகமான நறுமணம் கொண்ட பூவினை நீ இதுவரை கண்டதுண்டோ. எனது கேள்விக்கு விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி உண்மையான பதிலை நீ கூறுவாயாக. இந்த பாடல் பொருட்குற்றம் உள்ள பாடல் என்று நக்கீரன் உரைக்க, இறைவன் நேரில் தோன்றி, நக்கீரனிடம், நீ வணங்கும் ஞானப் பூங்கோதையின் (திருக்காளத்தி தலத்து அம்மை) கூந்தலுக்கு இயற்கையில் நறுமணம் இல்லையா என்று கேட்க, நக்கீரன் இல்லை என்று முதலில் பதில் உரைத்தார். பின்னர் தான் தவறு செய்தேன் என்று ஒப்புக்கொண்டு, கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, கோப பிரசாதம், திருவெழுகூற்றிருக்கை ஆகிய பாடல்களை (பதினோராம் திருமுறை) பாடியதாகவும் பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார்.

பொழிப்புரை: 

நறுமணம் கமழும் கூந்தலை உடைய உமையம்மையுடன் கூடி இருப்பதும், எருதினை ஊர்தியாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்வதும், நெற்றியில் பட்டம் என்ற அணிகலனை புனைந்து கொள்வதும், பூத கணங்கள் பாடும் இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடுவதும், வேதங்கள் அறிந்த மறையோர்களும் நல்லவர்களும் என்றும் பிரியாது வழிபடும் தில்லைச் சிற்றம்பலத்தில் விருப்பத்துடன் உறைவதும் யாது காரணம் பற்றியோ, அடியேன் அறிய மாட்டேன், எனக்கு தெளிவு ஏற்படும் வண்ணம் உணர்த்துவாயக.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com