99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 3

சம்பந்தர்க்கு இறைவன்
99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 3

பாடல் 3:

    நீலத்தார் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று
    சூலத்தார் சுடலைப் பொடி நீறணி வார் சடையார் 
    சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கை தொழக்
    கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே  

விளக்கம்:

உன=உன்னுடைய; திருவேட்களம் தலத்திலிருந்து தில்லை செல்லுங்கால், சம்பந்தர்க்கு இறைவன், தில்லைச் சிதம்பரம் தலத்திலுள்ள மூவாயிரம் அந்தணர்களும் சிவகணங்கள் என்பதை உணர்த்த, சம்பந்தரும் தான் அவ்வாறு உணர்ந்ததை யாழ்ப்பாணருக்கு சுட்டிக் காட்டிய கோலம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. தில்லை வாழ் அந்தணர்கள் போன்று திருவாரூர் வாழ்வோர் அனைவரும் சிவகணங்களாக இருக்கும் தன்மை நமிநந்தி அடிகளுக்கு உணர்த்தப் பட்டதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். இந்த காரணம் பற்றியே, தில்லை வாழ் அந்தணர்கள் மற்றும் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆகிய இருவரையும் தொகை அடியார்களாக சுந்தரர், திருத்தொண்டத் தொகையில் குறிப்பிட்டார் போலும். இந்த காரணம் பற்றியே திருவாரூரை தில்லைக்கு சமமான தலமாக கருதி, இந்த இரண்டு தலங்களுக்கும் சைவப் பெருந்தகையார்கள் முதன்மைத் தன்மை அளிக்கின்றனர்.  
   
திருவாரூருக்கும் நமிநந்தி அடிகள் வாழ்ந்து வந்த ஏமப்பேறூர் என்ற ஊருக்கும் இடையே உள்ள ஊர் மணலி என்பதாகும். திருவாரூரில் உள்ள தியாகேசப் பெருமான் ஊர்வலமாக மணலிக்கு எழுந்து அருளும் போது, அங்கே சென்று பெருமானை தரிசனம் செய்து வணங்குவது நமிநந்தி அடிகளாரின் வழக்கம். அவ்வாறு ஒரு நாள் வழிபட்ட பின்னர் தனது இல்லத்திற்கு அடிகள் திரும்புகின்றார். பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் சென்று வந்த காரணத்தால், குளித்த பின்னரே தான் தினமும் சியபெருமானுக்கு செய்யும் வழிபாடுகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், மனைவியை, தான் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார். அவரது மனைவியும் குளிர்ந்த நீர், உலர்ந்த ஆடை, திருநீறு, முதலானவற்றை தயாராக எடுத்து வைத்தார். இதனிடையில் வெளியே சென்று வந்த அயர்ச்சி காரணமாக நமிநந்தி அடிகள் சற்றே கண்ணயர்ந்தார். இவ்வாறு தூங்கியபோது கனவின் கண் வந்த சிவபெருமான், அடிகளுக்கு ஆரூரில் பிறந்தார் அனைவரும் தமது கணங்கள் என்றும், அந்தத் தன்மையை அடிகளுக்கு அடுத்த நாள் நேரில் காட்டுவதாகவும் கூறினார். 

    மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான் தாம்
    மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளி
    ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
    ஆன பரிசு காண்பாய் என்றருளிச் செய்தங்கு எதிர் அகன்றார்

கனவில் வந்த சிவபெருமான் மறைந்த பின்னர் கண் விழித்த அடிகளார், தான் பூஜை செய்யாமல் கண் அயர்ந்ததை நினைத்து வருந்தி, தான் செய்யவேண்டிய தினசரி வழிபாட்டினைச் செய்தார். மனைவிக்குத் தான் கண்ட கனவின் விவரங்களைத் தெரிவித்தார். மறுநாள் விடியற்காலையில் எழுந்து தனது நித்திய அனுஷ்டானங்களை முடித்த பின்னர், திருவாரூர் சென்ற அடிகளார் அங்கே கண்ட காட்சி அவரை வியப்படைய வைத்தது. அனைவரையும் சிவகணங்களாகக் கண்ட அடிகளார், நிலத்தில் வீழ்ந்து அனைவரையும் வணங்கி மகிழ்ந்தார்.

    தெய்வப் பெருமான் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்
    மை வைத்தனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால்
    மொய் வைத்து மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த 
    கை வைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து களி சிறந்தார் 

அடிகளார் உண்மையை உணர்ந்த பின்னர், சிவபிரான் தான் அடிகளாருக்குக் காட்டிய காட்சியை மறைத்து திருவாரூர்ப் பிறந்தார்கள் அனைவரையும் முன் போல் மனிதர்களாகவே காட்டினார். உடனே அடிகளார் தனது பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டினார். மேலும் திருவாரூர் நகரத்துச் சிறப்பினை இறைவன் உணர்த்தியதை மனதில் கொண்டு, ஏமப்பேறூரை விடுத்து, திருவாரூர் குடி புகுந்து தந்து எஞ்சிய வாழ்நாளை, சிவத்தொண்டில் கழிக்கலானார். இந்த நிகழ்ச்சி தான், சுந்தரர், திருவாரூர்[ பிறந்தார்கள் அனைவரையும் தொகை அடியார்களாக கருதி, திருவாரூர்ப் பிறந்தார் எல்லார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் பாட வைத்ததோ?

    படிவம் மாற்றிப் பழம்படியே நிகழ்வும் கண்டு
       பரமர் பால்
    அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று
       பணிந்து அருளால்
    குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து
        வாழ்வார் குவலயத்து
    நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச்
       செய்து நிலவுவார்
   

நீலத்தார்=நீல நிறம் பொருந்திய; வார்சடை=நீண்ட சடை; காரணம்= முதன்மைத் தன்மை; மிடறு=கழுத்து;

பொழிப்புரை: 

பெருமானின் கோலத்தைப் போன்று, கருநீல நிறத்தில் உள்ள மணியினைப் போன்று தங்களது கழுத்தினில் கறையினை உடையவர்களாகவும் நெற்றியினில் கண் கொண்டவர்களாகவும், சூலத்தைத் தங்களது கையினில் பற்றியவர்களாகவும், திருமேனி முழுவதும் சாம்பல் பூச்சினை உடையவர்களாகவும், சடையினை உடையவர்களாகவும் சிவகணங்களின் வடிவத்தில் காணப்பட்ட சிறந்த ஒழுக்கம் உடைய தில்லை வாழ் அந்தணர்கள் தொழுது வணங்கும் சிற்றம்பலத்தை காணும் வாய்ப்பு கிடைத்தமையால் ஆங்கே உறையும் இறைவனின் வீரக்கழல் அணிந்த திருப்பாதங்களை அடியேனது கைகளால் தொழும் பேற்றினை அடைந்தேன்.  இது உனது அருளால் நிகழ்ந்த செயலாகும். இனிமேல் அடியேன், நீர் அனைவர்க்கும் முதன்மையாக இருக்கும் தன்மையை புகழ்ந்து கூறுவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com