99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 9

இறைவனின் திருவடிகளில்
99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 9


பாடல் 9:

    தாரினார் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள்
        சடையாய் தலைவா நல்ல
    நேரினார் மறுகின் திருவார் அணி தில்லை
       தன்னுள்
    சீரினால் வழிபாடு ஒழியாததோர் செம்மையால்
       அழகாய சிற்றம்பலம்
    ஏரினால் அமர்ந்தாய் உன சீரடி ஏத்துதுமே

விளக்கம்:

சம்பந்தரின் இந்த பதிகத்தில் இராவணன் கயிலை மலை எடுக்கச் செய்த முயற்சியும், அரியும் அயனும் தேடி காணாமல் நின்ற நிலையும் குறிப்பிடப்படவில்லை. சமணர்களின் உரைகளை ஏற்க வேண்டாம் எனும் அறிவுரை பத்தாவது பாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. சமணர்கள் பற்றிய குறிப்பினை மட்டும் குறிப்பிட்டு மற்றைய இரண்டு நிகழ்ச்சிகள் இடம் பெறாத சம்பந்தர் பதிகங்கள் மொத்தம் மூன்று ஆகும். காம்பினை வென்ற தோளி என்று தொடங்கும் நாரையூர் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகமும், பாடலன் நான்மறையன் என்று தொடங்கும் ஆரூர் பதிகமும் மற்றைய இரண்டு பதிகங்கள் ஆகும். தார்=மாலை; விரி=மலர்ந்த; மறுகு=வீதி; ஏர்=அழகு. அழகாக பெருமான் நடனம் ஆடும் காட்சியை சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய பாளையுடை கமுகோங்கி என்று தொடங்கும் பதிகத்தினை (4.80) நினைவூட்டுகின்றது. சிவபெருமானின் ஆடல் என்று பொதுவாக பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், இரண்டாவது பாடலில் திருவடியையும், மூன்றாவது பாடலில் உடுத்த துகிலினையும், நான்காவது பாடலில் இடுப்பில் கட்டிய கச்சையையும், ஐந்தாவது பாடலில் கழுத்தில் கருமணி போல் விளங்கும் விடம் உண்ட கறையையும், ஆறாவது பாடலில் கழுத்தில் அணிந்திருக்கும் மாலையில் கோர்க்கப்பட்ட பன்றியின் வெண்கொம்பினையும், ஏழாவது பாடலில் சிரித்த முகத்தினையும், எட்டாவது பாடலில் நெற்றியையும், ஒன்பதாவது பாடலில் ஊமத்தை மலரினை சூடியுள்ள சடையையும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பாதம் தொடங்கி கேசம் வரை அழகினை ரசிக்கும் முறையினை பாதாதி கேச வர்ணனை என்று கூறுவார்கள். இறைவனுக்கு பாதாதி கேச வர்ணனையும், இறைவிக்கு கேசத்தில் தொடங்கி பாதம் வரை, கேசாதி பாத வர்ணனையாக விவரிப்பதும் கவிகளின் மரபு. பாதாதி கேச வர்ணனையாக இறைவனை வர்ணித்த அப்பர் பிரான், அந்த அழகில் நாம் மெய்ம்மறந்து நமது நோக்கத்திலிருந்து வழுவக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் கடைப் பாடலில் நமது நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதையும் கூறுகின்றார். இறைவனின் திருவடிகளில் நாம் சரணடைவதே நமது நோக்கமாக இருக்கவேண்டும் என்பதை இந்த பதிகத்தின் கடைப் பாடலில் உணர்த்துகின்றார். 

அத்தகைய அழகினை உடைய பெருமானின் ஆடல் காட்சியைக் கண்ட கண்கள் வேறு எந்த காட்சியையும் காண்பதற்கு உரிய காட்சியாக கொள்ளாது: பெருமானின் நடனத்தை விடவும் உயர்ந்த காட்சியாக வேறு எந்த காட்சியையும் கருதினால் அத்தகைய அடியார்கள் உண்மையான அடியார்கள் அல்ல என்று அப்பர் பிரான், மேலே குறிப்பிட்ட பதிகத்தின் முதல் பாடலில், சாடுகின்றார்.

    பாளையுடைக் கமுகு ஓங்கிப் பன்மாடம்
       நெருங்கி எங்கும்
    வாளையுடைப் புனல் வந்து எறி வாழ் வயல்
        தில்லை தன்னுள்
    ஆளவுடைக் கழல் சிற்றம்பலத்து அரன்
         ஆடல் கண்டால்
    பீளையுடைக் கண்களால் பின்னைப் பேய்த்தொண்டர்
         காண்பதென்னே

பொழிப்புரை: 

விரிந்து மலர்ந்த கொன்றை மாலையை சூடியவனே, பிறைச் சந்திரனைத் தாங்கும் நீண்ட சடையை உடையவனே, தலைவனே, அழகிய தேர்களால் பொலிவு பெற்று விளங்கும்   செல்வச் செழிப்பு மிகுந்த வீதிகள் உடைய தில்லை நகரத்தில், ஆகம நூல்களில் சொல்லப்பட்டுள்ள வண்ணம் சிறந்த வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுவதால் அழகுடன் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் அழகுடன் உறைபவனே, உனது சிறந்த திருவடிகளை நாம் புகழ்ந்து போற்றுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com