99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 10

சிற்றம்பலத்தில் நடமாடும்
99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 10

பாடல் 10:

    வெற்றரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார்
       அவர்கள் உரை கொள்ளன்மின்
    மற்றவர் உலகின் அவலம் அவை
       அறுக்க கில்லார்
    கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால்
       கழல் சேவடி கைதொழ
    உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே

விளக்கம்:

வெற்று அரை=ஆடையில்லாத இடுப்பு; உலகின் அவலம் என்று பிறப்பிறப்புச் சுழற்சியினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உறுதி=ஆன்ம இலாபம், உயிருக்கு உண்மையான இன்பம் அளிக்கும் வீடுபேறு நிலை.

பொழிப்புரை: 

உலகத்தவரே, ஆடையிலாத இடுப்பினை உடைய சமணர்களும் துவராடையினை அணியும் புத்தர்களும் பெருமானை இழித்துச் சொல்லும் பேச்சுகளை ஒரு பொருட்டாக கொள்ளாதீர்;  அவர்கள் இருவரும் பிறப்பிறப்புச் சுழற்சியில் அழுந்திய உயிர்கள் உலகத்தினில் படும் துயரங்களை மாற்றும் வழி அறியாதவர்கள். பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வழியினை அறிந்த கற்றவர்கள் தொழுது வணங்கும் சிற்றம்பலத்தில் நடமாடும் இறைவன் பால் மிகுந்த அன்பு கொண்டு, அவனது திருப்பாதங்களை வணங்கும் அடியார்கள், உயிருக்கு நிலையான என்றும் அழியாத இன்பம் தரும் வீடுபேற்றினை அடைவதற்கு தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com