99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 11

தில்லை வாழ்
99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 11

பாடல் 11:

    நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறை
      வல்ல ஞானசம்பந்தன்
    ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை
      தன்னுள்
    ஏறு தொல் புகழ் ஏத்து சிற்றம்பலத்து ஈசனை
       இசையால் சொன்ன பத்திவை
    கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவரே

விளக்கம்:

ஊறும் இன் தமிழ்=இனிமை ஊறும் தமிழ்; தில்லை வாழ் அந்தணர்களை சிவகணங்களாகக் கண்ட திருஞான சம்பந்தர்க்கு நாம் அனைவரும் அந்த நிலையினை அடைய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது போலும். தில்லை வாழ் அந்தணர் குடியினில் பிறந்து .பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக பணிவிடை செய்யும் பாக்கியம் அனைவர்க்கும் கிடைக்காது என்பதால், பெருமானை வழிபட்டு அந்த நல்ல கதியை நாம் அடைவதற்கு உதவும் பொருட்டு இந்த பதிகம் அருளினார் போலும்.     

பொழிப்புரை: 

நறுமணம் நிறைந்த பூஞ்சோலைகள் நிறைந்த காழியைத் தனது ஊராகக் கொண்டவனும் நான்கு மறைகளிலும் தேர்ச்சி பெற்றவனும் ஆகிய ஞானசம்பந்தன், இனிமை ஊறும் தமிழ் மொழியில், ஒழுக்கத்தில் மற்றும் சிவநெறியில் உயர்ந்தவர்கள் உறையும் தில்லை நகரில் உள்ளதும் மேன்மேலும் புகழ் ஓங்குகின்ற, தொன்மைப்புகழ் வாய்ந்த சிற்றம்பலத்து ஈசனை, இசையுடன் கலந்த பாடலால் சொன்ன இந்த பத்து பாடல்களையும் இசையுடன் சொல்லும் வல்லமை படைத்தவர்கள் உயர்ந்த சிவகணங்களோடு கூடும் வாய்ப்பினை அடைவார்கள்.    

முடிவுரை:

இந்த பதிகம் மூன்றாம் திருமுறையின் முதல் பதிகமாகும்.; அப்பர் பிரான் அருளிய ஐந்து மற்றும் ஆறாம் பதிகத்தின் முதல் பாடல்களாக அன்னம் பாலிக்கும் மற்றும் அரியானை அந்தணர் தம் சிந்தையானை என்ற பாடல்கள் அமைந்துள்ளன. ஒன்பதாம் பதிகத்தின் முதல் பாடலாக ஒளிவளர் விளக்கே என்ற பாடல் அமைந்துள்ளது. இந்த நான்கு பாடல்களும் உயிரெழுத்தினை முதல் சொல்லாக அமைந்துள்ள சொற்கள் கொண்டு தொடங்கப் பெறுவதை நாம் உணரலாம். சைவப் பெருமக்களின் உயிராக தில்லைச் சிற்றம்பலம் கருதப் படுவதன் தன்மையை உணர்த்தும் வண்ணம் அமைந்து உள்ளமை இறைவனின் திருவருளே. 

இந்த பதிகத்தின் பல பாடல்களில் பல அடைமொழிகள் கொடுத்து தில்லை வாழ் அந்தணர்களை சம்பந்தர் புகழ்கின்றார். சீலத்தார் தொழுது ஏத்தும் சிற்றம்பலம் என்றும் காழியார் காதலால் கழல் சேவடி கைதொழ என்றும், தில்லையார் தொழுது ஏத்தும் சிற்றம்பலம் என்றும் சீறினால் வழிபாடு ஒழியாததோர் செம்மையால் அழகாய சிற்றம்பலம் என்றும் கற்றவர் தொழுது ஏத்தும் சிற்றம்பலம் என்றும் உயர்ந்தார் உறை தில்லை என்றும் குறிப்பிட்டு தில்லை வாழ் அந்தணர்கள் பெருமானை வழ்படும் சிறப்பினையும் சம்பந்தர் உணர்த்துகின்றார்.

இந்த பதிகத்தின் பல பாடல்களில் சிற்றம்பலத்தானை கைகளால் தொழுவது பற்றிய குறிப்பு காணப் படுகின்றது. நான்காவது, ஐந்தாவது, ஏழாவது, மற்றும் பத்தாவது பாடல்களில் இந்த குறிப்பினை நாம் காணலாம். காண முக்தி என்று சிதம்பரம் தலத்தினை பெரியோர்கள் குறிப்பிடுவார்கள். நாமும் தில்லைச் சிதம்பரம் சென்று, ஆங்கே பெருமான் ஆடும் அழகினைக் கண்டு, கைகளை நமது தலைமேல் கூப்பி அவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவோமாக.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com