90. முத்து விதானம் - பாடல் 1

ஆதிரைத் திருநாள்
90. முத்து விதானம் - பாடல் 1

பின்னணி:

முதல் முறையாக சீர்காழி நகரில் அப்பர் பிரானும் ஞானசம்பந்தப் பெருமானும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் புகலூரில் இருவரும் சந்தித்தனர். திருவாரூரில் பல நாட்கள் தங்கியிருந்த அப்பர் பிரான் மார்கழி திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப் பெருமான் திருவீதிகளில் பவனி வரும் காட்சியைக் கண்டார். அந்த திருவிழா நடத்தப்படுகின்ற பெருமையான நெறிமுறைகளை நேரில் கண்டு மகிழ்ந்தார். பின்னர் திருப்புகலூர் சென்றடைந்தார். அப்போது ஞானசம்பந்தர், முருக நாயனாரின் மடத்தில் தங்கியிருந்தார். திருவாரூரில் இருந்து புறப்பட்ட அப்பர் பிரான் புகலூர் வருகின்றார் என்ற செய்தியை கேட்டறிந்த ஞான சம்பந்தர், தனது தொண்டர்களோடும் அவரை எதிர் சென்று வரவேற்றார். இருவரும் ஒருவருக்கொருவர் வணங்கிய பின்னர், சம்பந்தர், அப்பர் பெருமானை நோக்கி, அப்பர் பெருமானே, நீர் திருவாரூரில் கண்ட பெருமைகளை உரைக்க வேண்டும் என்று வேண்டினார். உடனே அப்பர் பிரான், திருவாரூர் நகரில் நடைபெற்ற, திருவாதிரைத் திருநாளின் பெருமையை என்னவென்று கூறுவேன் என்று இந்த பதிகத்தைப் பாடினார். இதனைக் கேட்ட சம்பந்தர், புகழ் பெற்ற திருவாரூர்ப் பெருமானை வணங்கிய பின்னர், தான் திரும்பவும் புகலூர் வந்து உம்முடன் இணைவேன் என்று அப்பர் பிரானிடம் சொல்லிவிட்டு, அவர் திருவாரூர் புறப்பட்டுச் சென்றார்.

    சித்தம் நிலாவும் தென் திருவாரூர் நகர் ஆளும்
    மைத்தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
    இத்தகைமைத்து என்று என் மொழிகேன் என்று உரை செய்தார்
    முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை

    அம்மொழி மாலை செந்தமிழ் கேளா அணி சண்பை
    மைம்மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்
    கொய்ம்மலர் வாவித் தென் திருவாரூர் கும்பிட்டே 
    உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார்.

பல தலங்களில் நடைபெற்ற விழாக்கள் தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. திருவொற்றியூரில் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா, இடைமருதில் நடைபெற்ற பூச விழா, திருமயிலையில் நடைபெறும் பல விழாக்கள் என்பன அவற்றுள் சிலவாகும். ஆனால் பதிகம் முழுவதும் திருவாரூர்த் திருவாதிரைத் திருவிழா சிறப்பித்துச் சொல்லப்படுவது போன்று வேறு எந்த திருவிழாவும் தேவாரப் பதிகத்தில் குறிப்பிடப் படவில்லை. எனவே மிகவும் சிறப்பு வாய்ந்த பதிகமாக இந்த பதிகம் கருதப் படுகின்றது. புகலூரில் அருளப்பட்டாலும், அனைத்துப் பாடல்களிலும் திருவாரூர்த் தலம் குறிப்பிடப் படுவதால், இந்த பதிகம் ஆரூர்ப் பதிகமாகவே கருதப்படுகின்றது.  

ஆதிரைத் திருநாளின் சிறப்பினை நேரில் காண்பதற்காக நாராயணன், நான்முகன், இந்திரன், அக்னி, சூரியன் உள்ளிட்ட பல தேவர்கள் வருவதால், ஆரூர் நகரத்தின் வீதிகள் நிறைந்து இருப்பதாக சேந்தனார், திருப்பல்லாண்டுப் பதிகத்தின் ஒரு பாடலில் கூறுகின்றார்.

    ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள்
    நாரயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
    தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து
    பாரார் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே  

ஆதிரைத் திருநாள், ஞான சம்பந்தர் அருளிய மயிலைப் பதிகத்திலும் குறிப்பிடப்படுகின்றது.
    

    ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
    கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
    கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்

சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக ஆதிரை கருதப்படுவதை அப்பர் பிரான், மற்றொரு (4.4.8) பாடலில் குறிப்பிடுகின்றார். ஆதிரை நாளினை மிகவும் விரும்பும்  சிவபெருமானை, ஆதிரையன் என்று பல தேவாரப் பதிகங்கள் அழைக்கின்றன. ஆதிரை நாளினை சிவபெருமான் உகப்பது போல், ஓணம் நாளினை திருமால் விரும்புகின்றார், இந்த இரண்டு நட்சத்திரங்கள் தான் திரு என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு, திருவாதிரை என்றும் திருவோணம் என்றும் அழைக்கப்படுகின்றன. இதிலிருந்து இந்த இரண்டு நட்சத்திரங்களையும் இந்துக்கள் எவ்வளவு உயர்வாக மதிகின்றார்கள் என்பது நமக்கு புலனாகும். 
  

    ஊர்திரை வேலையுள்ளானும் உலகிறந்த ஒண்பொருளானும்
    சீர்தரு பாடலுள்ளானும் செங்கண்  விடைக்கொடியானும்
    வார்தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும்
    ஆதிரை நாளுகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

திருவாதிரைத் திருநாளுக்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. நாம் சாதாரண நாட்களில். தியாகராஜப் பெருமானின் திருப்பாத தரிசனம் காண முடியாது. எப்போதும் மலர்களால் மூடப்பட்டே இறைவனின் திருப்பாதங்கள் காணப்படும். ஒரு வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாம் இறைவனின் திருப்பாதங்களைக் காண முடியும். அந்த இரண்டு நாட்களில் ஒன்று, மார்கழி மாதத் திருவாதிரைத் திருநாள்; மற்றொன்று பங்குனி உத்திரத் திருநாள். எனவே மார்கழி மாதத் திருவாதிரைத் திருநாளன்று, அடியார்கள் அதிகமாக திருவாரூரில் கூடுவார்கள். 

பாடல் 1:
  
    முத்து விதானம் மணிப் பொன் கவரி முறையாலே
    பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
    வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்
    அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

விளக்கம்:

விதானம்=மேற்பகுதி: பலி=பெருமானுக்கு அளிக்கப்படும் நிவேதனப் பொருட்கள். எண்கணத்தார்களில் மாவிரதியர் ஒருவர். சிவபிரான் மாவிரதியர் கோலத்தில் வந்தது மானக் கஞ்சாறர் புராணத்தில் கூறப்படுகின்றது. மூன்று பாடல்களில் சேக்கிழார் பெருமான், சிவபிரானின் மாவிரதி கோலத்தை விவரிக்கின்றார். அந்த மூன்று பாடல்களும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. நெற்றியில் மூன்று கீற்றாக திருநீறு; மழித்த தலையின் உச்சியில் ஓர் இடத்தில் மட்டும் கற்றையாக குடுமி மற்றும் அதன் மேல் எலும்பின் மணி; காதினில் எலும்பினைக் குடைந்து எடுத்த மணிகள் போன்ற அணி; கழுத்தில் எலும்புகளாலான பெரிய மாலை; தோளில் யோகப் பட்டை; மார்பினில் கருநிறம் உடைய மயிர்க் கற்றையால் செய்யப்பட்ட பூணூல், கையில் திருநீற்றுப் பை, முன்கையில் எலும்பினால் செய்யப்பட்ட காப்பு, இவை அனைத்தும் அடங்கிய கோலம் மாவிரதிக் கோலம் என்று பெரிய புராணத்தில் கூறப்படுகின்றது.   
    

    முண்ட நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில்
    கொண்ட சிகை முச்சியின் கண் கோத்தணிந்த எற்பு மணி
    பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த
    வெண் தரளம் எனக் காதின் மிசை அசையும் குண்டலமும்

    அவ்வென்பின் ஒளிமணி கோத்து அணிந்த திருத் தாழ்வடமும்
    பைவன்பேர் அரவு ஒழியத் தோளில் இடும் பட்டிகையும்
    மை வந்த நிறக் கேச வடப் பூணு நூலும் மனச்
    செவ்வன்பர் பவம் மாற்றும் திருநீற்றுப் பொக்கணமும்

    ஒரு முன்கைத் தனி மணி கோத்தணிந்து ஒளிர் சூத்திரமும்
    அருமறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திருவுடையும்
    இருநிலத்தின் மிசை தோய்ந்த எழுதரிய திருவடியும்
    திருவடிவில் திருபஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க

பொழிப்புரை:

மேற்புறத்தில் முத்துக்கள் மற்றும் மணிகள் பதிக்கப்பட்ட பந்தலின் கீழே மிகுந்த பொலிவுடன் அமர்ந்து இருக்கும் பெருமானுக்கு பொன்னால் செய்யப்பட்ட பிடியினை உடைய கவரி வீசப்படுகின்றது. திருவீதி உலா வரும் சிவபெருமானை, சிறப்பான பத்து குணங்களை உடைய அடியார்களும், பாவையர்களும் சூழ்ந்து கொண்டு சிவபெருமானுடன் திருவீதிவலம் வந்தனர். மேலும் இறைவனுக்கு நிவேதனமாக அளிக்கப்பட்ட பொருட்கள்  எடுத்துவரப் பட்ட ஊர்வலத்தில், எலும்பு மாலைகள் மற்றும் தலை மாலைகள் அணிந்து வித்தியாசமான கோலத்துடன் உலவும் மாவிரதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு சிவபிரான், திருவாரூர் நகரத்தில் மார்கழி ஆதிரைத் திருநாளில் சிறந்த பொலிவுடன் உலா வந்த கோலம், அமைந்தது: அதனைக் கண்ட அடியார்களின் மனதினில் நிலைத்து நின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com