90. முத்து விதானம் - பாடல் 2

அடியார்களுக்கு அணிகலனாக
90. முத்து விதானம் - பாடல் 2

பாடல் 2:

    நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
         பிணி தான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
    மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு
         அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

விளக்கம்:

நணியார்=அருகில் உள்ளவர்; சேயார்=தொலைவில் உள்ளவர்: பிறங்கிக் கிடத்தல்=வரம் வேண்டுதல்: அடியார்களுக்கு அணிகலனாக சிவபிரான் விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, நமக்கு சுந்தரரின் ஆரூர்ப் பதிகத்தின் ஒரு பாடலை (7.87.7) நினைவூட்டுகின்றது. செம்பொன்னாகவும் நல்ல மணியாகவும் விளங்கும் சிவபிரான் தனக்கு, பொன்னாகவும் மணியாகவும் விளங்குகின்றார் என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார். அதாவது தனக்கு அணிகலனாக விளங்குகின்றார் என்று சுந்தரர் கூறுகின்றார். வம்பு என்றால் வாசனை என்று பொருள்.

    கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறு அணிந்த
         வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பு அமரர்
    செம்பொனை நன்மணியைத் தென் திருவாரூர் புக்கு
         என் பொனை என் மணியை என்று கொல் எய்துவதே

பொழிப்புரை:

திருவாரூருக்கு மிகவும் அருகில் உள்ளவர்களும், திருவாரூருக்குத் தொலைவில் இருப்பவர்களும், நல்லவர்கள், தீயவர்கள் ஆகிய பலரும், தங்களது பிறவிப்பிணி தீர வேண்டும் என்று சிவபிரானை வழிபடும் அடியார்களும், எந்தன் பொன்னே, எனது மணியே, மைந்தனே, மணாளனே என்று இறைவனை அழைத்து துதிப்பார்களும் ஆரூர்த் ஆதிரைத் திருவிழாவில் கலந்து கொள்கின்றார்கள். கலந்து கொள்ளும் பலவிதமான அடியார்களின் கருத்துக்கு அணியாகத் திகழ்பவன் சிவபிரான் ஆவான். இவ்வாறு அனைத்து தரத்தினரையும் அங்கமாகக் கொண்ட ஆரூர்த் திருவிழாவின் மாண்பு காண்போரின் கருத்தில் நிலைத்து நிற்கின்றது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com