90. முத்து விதானம் - பாடல் 4

உயர்ந்த குணங்களையும்
90. முத்து விதானம் - பாடல் 4


பாடல் 4:

    குணங்கள் பேசி கூடிப் பாடித் தொண்டர்கள்
    பிணங்கித் தம்மில் பித்தரைப் போல் பிதற்றுவார்
    வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
    அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

விளக்கம்:

அணங்கன்=தெய்வத் தன்மை பொருந்தியவன்; குணங்கள்=அருட்செயல்கள். இந்த பாடலில் திருவிழாவில் கலந்து கொள்ளும் அடியார்களின் தன்மை விளக்கப்படுகின்றது. இறைவன் பேரில் அடியார்கள் கொண்டுள்ள அதிகமான அன்பின் காரணமாக அவர்கள் பித்தர் போல் நடந்துகொள்வது இங்கே உணர்த்தப்படுகின்றது. 

பொழிப்புரை:

நாள்தோறும் காலையில் தேவர்கள் வணங்கும்படி, தெய்வத்தன்மை பெற்று சிறப்பு வாய்ந்த சிவபிரானின் மார்கழி மாதத்து ஆதிரைத் திருவிழாவில், பங்கேற்கும் அடியார்கள் சிவபிரானது உயர்ந்த குணங்களையும் அருட்செயல்களையும் தங்களுக்குள் பேசிக் கொண்டும், மற்றவர்களுடன் கூடி இறைவனது புகழினைப் பாடிக்கொண்டும், சென்றனர்.  அவ்வாறு பேசிக் கொண்டு செல்கையில், சிவபிரானின் பேரில் தங்களுக்கு இருந்த மிகுந்த அன்பின் காரணமாக, தாங்கள் சிவபிரானைப் பற்றி சொல்லும் கருத்தே சரியென்று, மற்றவர்களுடைய கருத்துடன் உடன்படாமல், மறுபடியும் மறுபடியும் தங்களது கருத்தையே வலியுறுத்தி பித்தர் போல் பிதற்றுகின்றார்கள். இவ்வாறு அடியார்களின் அன்பு வெளிப்படும் ஆதிரைத் திருநாளின் நினைவுகள், அதனைக் காணும் அடியார்களின் மனதினில் என்றும் நிலைத்து நிற்கும். .  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com