90. முத்து விதானம் - பாடல் 5

அப்பர் பிரான்
90. முத்து விதானம் - பாடல் 5


பாடல் 5:
    
    நில வெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
    பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்தெங்கும்
    கலவ மஞ்ஞை கார் என்றெண்ணிக் களித்து வந்து
    அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

விளக்கம்:

கலவம்=தோகை: மஞ்ஞை=மயில்: நிற்கில்லா=நில்லாமால், நிறுத்தாமல்: கல்ல வடங்கள்=காலில் கட்டிக்கொள்ளும் சதங்கை: கார்=மழை, இங்கே மழைக்கு முன்னர் அடையாளமாகத் தோன்றும் இடியினைக் குறிக்கும்: அலமர்=அலமரும் என்ற சொல் சுருக்கப் பட்டுள்ளது. அலமரும்=வருந்தும், துன்பப்படும்:: 

ஆதிரைத் திருநாளின் ஆரவாரத்தை குறிப்பிடும் அப்பர் பிரான், விழாவினில் ஏற்படும் ஆரவாரத்தை, வானில் தோன்றும் இடியின் முழக்கம் என்று மயில்கள் தவறாக நினைத்து, மழை வரும் என்று மகிழ்ச்சியில் நடமாடுவதாக இங்கே கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது, நமக்கு சம்பந்தரின் திருவையாற்றுப் பதிகத்தின் (புலனைந்தும் என்று தொடங்கும் பதிகம்) முதல் பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில், சம்பந்தர் திருவையாற்றில் திருக்கோயிலை வலம் வரும் மடந்தையர்கள் நடமாடும்போது முழவு வாத்தியங்கள் எழுப்பும் ஓசையினை குரங்குகள், மழை முன்னர் வானில் தோன்றும் இடி என்று அஞ்சி, மரத்தினில் ஏறி வானத்தைப் பார்ப்பதாக கூறுகின்றார்.  
    
    புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐ மேல் உந்தி 
    அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்
    வலம் வந்த மடவார்கள் நடமாட முழவு அதிர மழை என்று அஞ்சிச்
    சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திருவையாறே

சங்கு ஊதி ஒலி எழுப்புவது, பண்டைய நாட்களில் மங்கல வழக்காக கருதப்பட்டு வந்தது இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு ஒலி எழுப்பி, மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்து, அனைவரையும் திருக்கோயில் வழிபாட்டிற்கும், திருவிழா வைபவத்திற்கும் அழைப்பது இதன் நோக்கமாக இருந்தது போலும். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் குறிப்பிடப்படும் அப்பர் பிரானின் பாடல், வெண் சங்குகள் ஊதாப்படாத ஊர்கள், ஊர்கள் அல்ல காடு என்று குறிப்பிடுகின்றது. நாளடைவில் சங்கு ஊதுவதன் நோக்கத்தினை நாம் மறந்து, மங்கல நிகழ்ச்சிகளில் சங்கினால் ஒலி எழுப்புவதை நாம் நிறுத்தி விட்டோம். ஆனால் இன்றும் பிரதோஷம் போன்ற நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் சிங்கப்பூர் கோயில்களில் வெண்சங்குகள் ஊதப்பட்டு அப்பர் பிரானின் பாடல் நினைவூட்டப்படுகின்றது. தமிழ்நாட்டிலும், பல இடங்களில் திருமுறை முற்றோதல் நடைபெறும் போது சங்குகள் முழங்குகின்றன.

ஆதி நாதத்தின் ஒலி, பல சங்குகள் ஒன்று சேர்ந்து ஒரே சீராக ஒலிக்கும் ஓசையை ஒத்து இருக்கும் என்று மணிவாசகர் சங்கிலிருந்து எழும் ஓசையின் மங்கலத் தன்மையை, தனது  திருப்படையாட்சி பதிகத்தின் கடைப்பாடலில் குறிப்பிடுகின்றார்.

 
    ங்கு திரண்டு முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே
    சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே
    அங்கிது நன்றிது நன்றெனும் மாயை அடங்கிடும் ஆகாதே
    ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே
    செங்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
    சீரடியார்கள் சிவானுபவங்கள் தெரிந்திடும் ஆகாதே
    எங்கும் நிறைந்து அமுது ஊரும் பரஞ்சுடர் எய்துவது ஆகாதே
    ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளிப் பெறிலே 

ஆதி அந்தம் இல்லாத மறையோனாகிய சிவபெருமான் நம்மை ஆட்கொள்வதற்காக நம் முன்னே எழுந்தருளினால் என்னவெல்லாம் நிகழும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. அப்போது ஆயிரக்கணக்கான சங்குகள் ஒன்று சேர்ந்து ஒரே சுருதியுடன் முழங்கும் ஓசையினை ஒத்த ஆதி நாதத்தின் ஒலி கேட்கப்பட்டு நம்மை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தும்; அவரவர்கள் பிறந்த சாதியினால் ஏற்பட்டு என்றும் நீங்காது நிற்கும் குணங்கள் நம்மை விட்டு நீங்கிவிடும்; அவரவர்கள் சிந்தைனைக்கு ஏற்ப, மற்றவர்கள் நன்மை விளைவிக்கும் பொருட்களை நாம் தீயனவாகவும், மற்றவர்கள் தீயவை என்று கருதும் பொருட்களை நாம் நல்லவை என்றும் கருதும் தன்மை விலகி அனைத்துப் பொருட்களையும் சமநோக்குடன் பாவிக்கும் குணம் நம்மில் தோன்றும்: நம்மிடம் உள்ள பலவிதமான ஆசைகள் மறைந்து, அடியார்களுக்கு அடியோம் என்ற உணர்வு நிறைந்து மற்ற ஆசைகள் அடங்கிவிடும்; சிற்றின்பத்தை நாடிச் செல்லும் நமது சிந்தை மாறிவிடும்; மற்ற அடியார்கள் பெற்ற சிவானுபவங்கள் நமக்கும் தெரிந்திடும்; மேலும் எங்கும் நிறைந்து, நமக்கு அமுதமாக இருக்கும் பரஞ்சுடரினை நமது அகக்கண்களால் காணமுடியும் என்றும் மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார்.       

பொழிப்புரை:

நிலவைப் போன்று வெண்ணிறம் கொண்ட சங்குகள், பறை எனப்படும் தோல் இசைக் கருவிகள், எழுப்பும் ஓசையினோடு, பல மங்கையர்கள் இடைவிடாது ஆடுவதால், அவர்கள் காலில் கட்டிய சலங்கைகள் எழுப்பும் ஒலியும் இணைந்து தோன்றும் ஒலி, மேகங்கள் உண்டாக்கும் இடியோசை போல் ஒலிப்பதால், மழை வரும் என்று எதிர்பார்த்து மகிழ்வுடன் தங்களது தோகையை விரித்து நடனமாடும் மயில்கள், மழை ஏதும் இல்லாததால், ஏமாற்றம் அடைந்து வருந்துகின்றன. இவ்வாறு, ஆரவாரம் மிகுந்து, மங்கையர்களின் நடனமும் மயில்களின் நடனமும் நடைபெறும் ஆரூர் ஆதிரைத் திருவிழாவின் அழகு காண்போர் உள்ளத்தில் நிலைபெற்று நிற்கின்றது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com