90. முத்து விதானம் - பாடல் 6

சிவபிரானின் புகழைக்
90. முத்து விதானம் - பாடல் 6


பாடல் 6:

    விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
    தம் மாண்பிலராய்த் தரியார் தலையால் முட்டுவார்
    எம்மான் ஈசன் எந்தையே என்னப்பன் என்பார்கட்கு
    அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

விளக்கம்:

ஆரூர் ஆதிரைத் திருவிழாக் காட்சியினைக் கண்ட அடியார்களின் நிலையினை இதே பதிகத்தின் நான்காவது பாடலில் விளக்கிய அப்பர் பிரான், அடியார்கள் எவ்வாறு தங்கள் வசம் இழந்த நிலையில் ஆனந்தமாக இறைவனின் திருவுலாக் காட்சியை கண்டு களித்தனர் என்று இங்கே கூறுகின்றார்.

விம்மா, வெருவா, விழியா, தெழியா என்ற சொற்களுக்கு எதிர்மறைப் பொருள் கொண்டு விம்மி, வெருவி, விழித்து, தெழித்து என்று பொருள் கொள்ளவேண்டும். விம்மி=மனம் நிறைந்து, மனம் குமுறி; வெருவி=அச்சத்தால் உடல் நடுங்கி; அஞ்சுதல் உணர்வின் கண் நிகழ்வது; வெருவுதல் உணர்வின் மாற்றத்தால் உடல் கண் நிகழ்வது;  தெழித்து=ஆரவாரம் செய்து அதட்டுதல்: சிவபிரானின் புகழ்ச் சொற்களைக் கேட்கும் போது, குரல் விம்முவதும், உடல் நடுங்குவதும் அடியார்களின் பத்து புறச் செயல்களில் அடங்குவன. .  
 
பொழிப்புரை:

சூழ்ந்திருக்கும் அடியார்கள் சிவபிரானின் புகழைக் கூறக் கேட்ட அடியார்கள் சிலரின் குரல் விம்மியது; மற்றும் சில அடியார்கள் உடலில் நடுக்கம் ஏற்பட்டது; சிலர் தங்களின் விழிகளை அகல விழித்து உரத்த குரலில் ஆரவாரத்துடன் அனைவரையும் விரட்டுமாறு பேசினார்கள்; சிலர் அளவு கடந்த மகிழ்ச்சியால், தாம் செய்வதை உணராமல் தங்களது தலையினை மற்றவர்களின் தலையுடன் மோதினர்; இவ்வாறெல்லாம் உணர்ச்சி மிகுதியால் தாம் செய்வது யாது என்று அறியாமல், பல விதமான செயல்களைப் புரியும் தொண்டர்கள், எம் தலைவனே, எம்மை அடக்கி ஆட்கொண்டவனே, என் அப்பனே என்று குரல் கொடுக்க, அவர்களுக்குத் தலைவனாக விளங்கும் சிவபிரானின் ஆரூர்த் திருவிழாவின் காட்சிகள், காண்போரின் உள்ளத்தில் நிலை பெற்று விளங்குகின்றன.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com