90. முத்து விதானம் - பாடல் 7

ஆதி அந்தம்
90. முத்து விதானம் - பாடல் 7

பாடல் 7:

    செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்
    மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
    இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்
    அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

விளக்கம்:

செந்துவர்=செம்பவளம்: அந்திரன்=தனியன், இறைவனுக்கு ஒப்பாக யாரும் இல்லாததால் தனியன் என்று கூறப்பட்டுள்ளது. ஆதி அந்தம் இல்லாமல் உறுதியான நிலைபாட்டினை உடைய ஈசனுக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாததால், அவன் தனியன் தானே. மற்றையோர் அனைவரும் தாய் தந்தை உடையவர்கள், சிவபிரான்  ஒருவன் தான் தாயும் தந்தையும் அற்றவன் என்பதால், அவனுக்கு ஒப்பாக எவரும் இல்லை என்பதை உணர்த்தும் வண்ணம், தாயுமிலி தந்தையிலி தான் தனியன் என்று மணிவாசகர் திருச்சாழல் பதிகத்தில் பாடுகின்றார்.     

    கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை
    தாயும் இலி தந்தை இலி தான் தனியன் காணேடி
    தாயும் இலி தந்தை இலி தான் தனியன் ஆயிடினும் 
    காயில் உலகு அனைத்தும் கற்பொடி காண் சாழலோ


பொழிப்புரை:

அனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திப்பேற்றினை உடைய செல்வனாகிய சிவபெருமானின் திருவடிகளை சிந்தித்த வண்ணம் இருக்கும் அடியார்கள் செம்பவளம் போன்று சிவந்த வாயினை உடையவர்களாக காணப்படுகின்றார்கள். சிவபிரானின் அழகில் மயங்கிய பல ஆடவர்களும் மகளிர்களும் மார்கழி ஆதிரைத் திருநாள் விழாவில் கலந்து கொள்கின்றார்கள்; மேலும் இந்திரன் முதலான தேவர்கள், சித்தர்கள் பலவாறு இறைவனை துதித்து பாடல் பாடிவரும் காட்சிகள் நிறைந்தது ஆரூரில் நடைபெறும் திருவாதிரைத் திருவிழாவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com