91. தோடுடைய செவியன் - பாடல் 5

மேக யானை
91. தோடுடைய செவியன் - பாடல் 5


பாடல் 5:

    
ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை
                    ஊரும் இவன் என்ன
    அருமையாக உரை செய்ய அமர்ந்து எனது
                    உள்ளம் கவர் கள்வன்
    கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர்

                     காலம் இது என்னப் 
    பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மன்
                     இவன் அன்றே

விளக்கம்:

ஒருமை என்ற சொல்லினை பெண்மை மற்றும் சடையன் ஆகிய இரண்டு சொற்களுடன்  சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். ஒருமை=ஒரு புறம்; தனது உடலின் ஒரு பக்கத்தில் உமையன்னையை ஏற்றுக்கொண்டு காணப் படுவதால், அவரது திருமுடியில் ஒரு பாகம் சடையும் மற்றொரு பக்கத்தில் குழலும் காணப்படும் தோற்றம் இங்கே, பெருமை ஒருமை பெண்மை உடையன் சடையன் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. தனது இயல்பினில் நீர் வண்ணமற்றது; எனினும் கரையிலிருந்து கடலினைக் காணும் நமக்கு, அருகினில் நீலநிறத்துடனும் தொலைவில் கருமை நிறம் பெற்று இருப்பதாகவும் தோன்றுகின்றது. கருமை என்பது கடலின் இயல்பான நிறம் அன்று, அது ஒரு தோற்றமே என்பதை உணர்த்தும் வண்ணம் கருமை பெற்ற கடல் என்று இங்கே கூறுகின்றார். 

இந்த பாடலும் அகத்துறை வகையைச் சார்ந்த பாடலாகும். பெருமான் தனது உள்ளத்தைக் கவர்ந்ததாக பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் கூறும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் பெருமான் தனது உள்ளத்தினை எவ்வாறு கவர்ந்தார் என்று கூறுகின்றார். தனது தோழிகள் பெண்மைக்கு இரங்கி தனது மனைவியை ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டவன் என்றும் பலவாறு பெருமானைப் புகழ்ந்து பேசவே, அவர்களது பேச்சினைக் கேட்ட தானும் பெருமான் பால் காதல் கொண்டு, அவனது திருவுருவத்தை எப்போதும் தனது மனதினில் நினைத்து சுமந்தவாறு, தனது உள்ளத்தை அவனிடம் இழந்ததாக சம்பந்த நாயகி இங்கே கூறுகின்றாள்.

மேலே குறிப்பிட்ட சம்பந்த நாயகியின் கூற்று நமக்கு அப்பர் பிரான் சீர்காழி தலத்தின் மீது அருளிய மாது இயன்று என்று தொடங்கும் பதிகத்தினை (5.45) நினைவூட்டுகின்றது. தோணிபுரம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. அப்பர் பிரானின் இந்த பதிகத்து பாடல்கள் தாயின் கூற்றாகவும் தலைவியின் கூற்றாகவும் உள்ள பாடல்களைக் கொண்டதாகும். பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டு இருப்பவன் என்றும், கங்கையைத் தனது சடையில் மறைத்துக் கொண்டவன் என்றும் பெருமானை குறிப்பிட்டு அவனது உண்மையான தன்மையை புரிந்து கொள்ளாமல் தனது பெண் இருக்கின்றாளே என்று கவலைப்பட்ட தாய், பேய்களைத் தனது உறவாகவும் உண்ணும் கலன் மண்டையோடாகவும் உறைவிடம் சுடுகாடாகவும், உடலின் ஒரு பாகமாக ஒரு பெண்ணையும் கொண்டுள்ள இறைவன் பால் எந்த தன்மையைக் கண்டு எனது பெண் காதல் கொண்டுள்ளாள் என்று வியக்கின்றாள்(பாடல். 5.45.8).

    உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை
    உறைவது ஈமம் உடலிலோர் பெண்கொடி
    துறைகள் ஆர் கடல் தோணிபுரத்துறை
    இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பாவதே

அதற்கு தலைவி பதில் கூறும் முகமாக அமைந்துள்ள பாடலும் (5.45.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மேக யானை என்பது எதுகை கருதி மாக யானை என்று திரிந்துள்ளது. மாக யானை=மேகத்தைப் போன்று கரிய நிறம் உடைய யானை: மருப்பு=கொம்பு, இங்கே யானையின் தந்தம் என்று பொருள் கொள்ள வேண்டும். தான் மட்டுமல்ல, தனது தோழியர் பலரும் சிவபெருமான் மீது தீராத  காதல் கொண்டுள்ளதாக அப்பர் நாயகி கூறுகின்றாள். சம்பந்தர் இந்த பதிகத்தின் பாடலில் கூறுவது போன்று, அப்பர் நாயகியும் தனது  தோழிகளை பின்பற்றிச் சென்று இறைவனிடம் தனது பறி கொடுத்ததாக கூறுகின்றாள்'

    மாக யானை மருப்பேர் முலையினர்
    போக யானும் அவள் புக்கதே புகத்
    தோகை சேர் தரு தோணிபுரவர்க்கே
    ஆக யானும் அவர்க்கு இனி ஆகதே 

உரை செய்ய அமர்ந்து என்ற தொடருக்கு, பெருமான் தனது மனதினில் அமர்ந்து கொண்டு தான் அவனைப் பாடுமாறு செய்தார் என்று சம்பந்தர் கூறுவதாக சிலர் பொருள் கொள்கின்றனர். இந்த விளக்கமும் பொருத்தமாக உள்ளது. வடமொழி வேதங்களை தனது வாயினால் மொழிந்த பெருமான், தமிழ்வேதம் எனப்படும் தேவார திருவாசகப் பதிகங்களை நால்வர் பெருமானார்கள் பாடுமாறு செய்தமையால் திருமுறைகள் தமிழ் வேதம் என்று கருதப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. இத்தகைய விளக்கம் நமக்கு எனது உரை தனது உரையாக என்று இலம்பையங்கோட்டூர் தலத்து பதிகத்து பாடல்களில் திருஞானசம்பந்தர் கூறுவதை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. 

இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தில், ஞான சம்பந்தர், எனது உரை தனது உரையாக என்ற தொடரினை பதிகத்தின் (1.76) முதல் பத்து பாடல்களிலும் அடக்கி, சிவபெருமானின் உரை தான் தனது வாய்மொழியாக தேவாரப் பாடல்களாக வந்தன என்ற உண்மையை சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். இந்த பதிகம் அகத்துறை கருத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தனது உரையினை எனது உரைகளாக வெளிப்படுத்தி அருளியவன் என்று சிவபெருமானை இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.  

    மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்
                 மறைக்காடு நெய்த்தானம்
    நிலையினான் எனது உரை தனது உரையாக நீறு அணிந்து ஏறு
                 உகந்து ஏறிய  நிமலன்
    கலையினார் மடப்பிணை துணையொடும் துயில கானல்
                 அம் பெடை புல்கிக்  கணமயில் ஆலும்
    இலையினார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                  பேணி என் எழில் கொள்வது இயல்பே  

திருஞான சம்பந்தப் பெருமானை மட்டுமா பெருமான் பாட வைத்தார், அப்பர் பிரான் சுந்தரர் மற்றும் மணிவாசகர் ஆகியோரையும் தனது பண்புகளையும் பெருமையையும் பாடி உலகுக்கு உணர்த்துமாறு செய்தவர் பெருமான் தானே. இந்த செய்தியை அவர்கள் மூவரும் பதிவு செய்துள்ள சில பாடல்கள் நாம் இங்கே காணலாம். தன்னைப் பல நாட்கள் தொடர்ந்து தேவாரப் பதிகங்கள் பாட வைத்தவன் சிவபெருமான் தான் என்பதை புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (6.54.3) அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அண்ணித்தல்=தித்தித்தல்; புத்தேள்=கடவுள், தேவர்கள்; பாடப் பயில்வித்தானை=பாடக் கற்றுக் கொடுத்தவன் என்றும் தொடர்ந்து பாடவைத்தவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தீங்கரும்பு=இனிமையான கரும்பு;
    

பத்திமையால் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை
                   பாடப்  பயில்வித்தானை
 எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை எம்மானை என்னுள்ளத்து
                   உள்ளே ஊறும் 
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை அன்னிக்கும் தீங்கரும்பை
                   அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற
                    நாள் போக்கினேனே

அபயம் என்று சரணடைந்த தனது சூலை நோயினைத் தீர்த்து ஏற்றுக்கொண்டதும் அல்லாமல், தன்னிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதை முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (668) ஒரு பாடலில் அப்பர் பிரான், தன்னை பாமாலை பாட பயில்வித்தவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். எவராலும் தீர்க்கமுடியாத சூலை நோயினைக் கொடுத்து திருவதிகைக்கு வரவழைத்து அப்பர் பிரானின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை அமைத்துக் கொடுத்து, அவரை தேவாரப் பதிகங்கள் பாடச் செய்தவர் பெருமான் தானே. எத்திசையும் வானவர்கள் தொழநின்றான்=வானவர்கள் தங்களுக்கு இட்ட கட்டளையின் படி, வெவ்வேறு இடத்தில் இருந்தவாறு தங்களது தொழில்களைச் செய்தவாறு இருப்பார்கள். அவ்வாறு வெவ்வேறு இடங்களில் இருந்தவாறே, இறைவனைத் தொழும் நிலை, எத்திசையும் வானவர்கள் தொழ நின்றான் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. சித்தன்=எல்லாம் செய்ய வல்லவன்:
    

எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறூர்ந்த பெம்மானை எம்மான் என்று    பத்தனாய்ப் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப்  பயில்வித்தானை    
    முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செழும்பவளக்   கொழுந்து ஒப்பானைச்
    சித்தனை என் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே   திகைத்தவாறே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (6.84.4) தமிழ்மாலை பாடுவித்து என் சிந்தை மயக்கு அறுத்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பன்னிய நூல் என்றால் இலக்கண முறைப் படி அமைந்த பாடல்கள் என்று பொருள். இந்த பாடல்களைப் பாடியதால் தனது மனதில் இருந்த மயக்கும் சிந்தைகள் அறுந்தன என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அவரது பாடல்களை பொருள் உணர்ந்து ஓதினால், நாமும் நமது சிந்தைகளில் உள்ள மயக்கங்களை அறுத்துத் தூய்மை பெறலாம் என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது.    
    

கந்தமலர்க் கொன்றை அணி சடையான் தன்னைக் கதிர்
          விடுமாமணி  பிறங்கு கனகச்சோதிச் 
சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானைச் சராசர நல்
           தாயானை நாயேன் முன்னைப்
பந்தம் அறுத்து ஆளாக்கப் பணி கொண்டு ஆங்கே பன்னிய
           நூல் தமிழ்மாலை பாடுவித்து என்
சிந்தை மயக்கு அறுத்த திருவருளினானைச்
           செங்காட்டங்குடி அதனில் கண்டேன்  நானே

நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து, பின்னர் அடிமை ஓலை காட்டி சுந்தரரை ஆட்கொண்ட பெருமான், அவரை திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்துறை திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்ற பின்னர் அங்கே மறைந்து விடுகின்றார். பின்னர் வானில் எழுந்த ஓசை மூலம், எம்மை பாடுவாய் என்று சுந்தரரை பணிக்கின்றார். உன்னை அறிந்து கொள்ள முடியாமல், நாயினும் கடையேனாக இருந்த அடியேன் என் சொல்லிப் பாடுகேன் என்று சுந்தரர் சொல்ல, இறைவனார் முன்பு என்னை பித்தன் என்றே மொழிந்தனை, ஆகவே பித்தன் என்றே பாடுக என்று அடியெடுத்துக் கொடுத்து, சுந்தரரை பித்தா பிறைசூடி என்று தொடங்கும் பதிகத்தை பாடவைத்தார். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் பெரிய புராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
    முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
    என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற
    வன்பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடலுற்றார்

மணிவாசகர் தனது கோத்தும்பீ பதிகத்தில், தன்னை பாடுவித்த நாயகன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். சீ என்று வெறுக்காது தான் செய்த திருப்பணிகளை ஏற்றுக்கொண்டவன் என்றும் அடியார்களின் குற்றங்களைப் பொறுத்து அருளும் பெருமையாளன் என்றும் இந்த பாடலில் பெருமானை குறிப்பிடுகின்றார்.         

    நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
    பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனைச்
    சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
    தாயான ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ  

பொழிப்புரை:

தனது உடலின் ஒரு புறத்தில் உமை அன்னையை ஏற்றுக்கொண்டுள்ள இறைவனின் தலைமுடியின் ஒரு பாகம் சடையாகவும் மற்றொரு பாகம் பெண்களது குழலாகவும் உள்ளது. அவனை பெண்மை உடையவன் என்றும், சடையன் என்றும், இடபத்தை வாகனமாகக் கொண்டவன் என்றும் பலவாறு எனது தோழியர்கள் புகழ்ந்து கூறவே, அவர்களது பேச்சினைக் கேட்ட நானும், பெருமான் பால் காதல் கொண்டு அவனது திருவுருவத்தை எப்போதும் நினைத்தவாறு மனதினில் சுமந்து கொண்டேன். அதனால் அவர் எனது உள்ளத்தைக் கவர்ந்தவராக திகழ்கின்றார். இவ்வாறு எனது மனதினைக் கவர்ந்த கள்வர் யார் என்று நீங்கள் வினவுவரேல், நான் அதற்கு விடை கூறுகின்றேன். முற்றூழி காலத்தில் கருமை நிறம் கொண்ட கடல் பொங்கி வந்து அனைத்து உலகினையும் மூழ்கடித்த போதும், தோணிபுரமாக மிதந்த பெருமையினை உடைய பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் பொருந்தி உறையும் பெருமான் தான், எனது உள்ளம் கவர்ந்த கள்வராக, எனது பெருமைக்குரிய தலைவராக விளங்குகின்றார்.   ;     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com