97. மந்திர மறையவை - பாடல் 6

இறைவனை வணங்குகின்றார்கள்
97. மந்திர மறையவை - பாடல் 6


பாடல் 6:

    மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
    எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
    விண்ணமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
    அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே

விளக்கம்:

முதலடியில் உள்ள சொற்களை, தேவர்களின் எண்ணத்துடன் தொடர்பு கொண்டு பொருளினை உணர்ந்தால், தேவர்கள் பெருமானை வணங்குவதன் நோக்கத்தினை சம்பந்தர் உணர்த்துவதாக தோற்றம் அளிக்கின்றது. தேவர்கள் வெண்காட்டு இறைவனை வணங்குவதை குறிப்பிடும் திருஞான சம்பந்தர் அவர்கள் ஏன் பெருமானை வணங்குகின்றனர் என்பதையும் இங்கே கூறுகின்றார். ஏனையோர் தன்னை வணங்கும் நிலைக்கு தாம் உயரவேண்டும் என்பதற்காக தேவர்கள் இறைவனை வணங்குகின்றார்கள் என்று கூறுவது, நமக்கு திருவாசக பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. மதுகரம்=வண்டினங்கள்; தார்=மாலை தாரோய்=மாலை அணிந்தவன்; பாழ்த்த=பயன் ஏதும் இல்லாத; தேவர்களைப் போன்று, தங்கள் உயரவேண்டும் என்றும் மற்றவர்கள் தம்மைத் தொழவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமானைத் தொழாமல், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக இறைவனை வணங்க வேண்டும் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.   

    வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின் பால்
    தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லை தொழ வேண்டி
    சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
    பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே 

பொழிப்புரை:

நிலவுலகத்தில் உள்ளோரும், விண்ணுலகத்தில் உள்ளோரும், மற்றுமுள்ள தேவர்களும் தினமும் தமது எண்ணங்கள் ஈடேறும் பொருட்டு வெண்காட்டு பெருமானை இறைஞ்சி வழிபடுகின்றனர். வானத்தைத் தொடும் அளவு உயர்ந்த சோலைகளைக் கொண்ட திருவெண்காடு தலத்தில் உறையும் அண்ணலின் திருப்பாதங்களைச் தொழும் அடியார்களுக்கு துன்பங்கள் ஏதும் இருக்காது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com