97. மந்திர மறையவை - பாடல் 8

நன்மைகள் புரிந்ததால்
97. மந்திர மறையவை - பாடல் 8


பாடல் 8:

    மலை உடன் எடுத்த வல்லரக்கன் நீள் முடி
    தலையுடன் நெரித்து அருள் செய்த சங்கரர்
    விலையுடை நீற்றர் வெண்காடு மேவிய
    அலையுடை புனல் வைத்த அடிகள் அல்லரே

விளக்கம்:

விலையுடை=மிகுந்த மதிப்பினை உடைய சங்கரர் என்ற சொல்லுக்கு நன்மையை அருளுபவர், சுகத்தை அருள்பவர் என்று பொருள். அரக்கன் இராவணனின் தலையையும் உடலையும் மலையின் கீழே அழுத்தி முதலில் நெரித்த போதிலும், அரக்கன் தனது தவறினை உணர்ந்து சாம கானம் பாடிய போது, தனது கால் விரலினால் ஏற்பட்ட அழுத்தத்தை தவிர்த்து, அரக்கனுக்கு நீண்ட வாழ்நாளும், உடைவாளும், இராவணன் என்ற  பெயரும் அளித்து பல நன்மைகள் புரிந்ததால், அருள் செய்த சங்கரர் என்று பொருத்தமாக கூறுகின்றார். நமச்சிவாய பதிகத்தின் எட்டாவது பாடல் (3.49.8) நமது நினைவுக்கு வருகின்றது. அடுக்கல்=மலை, இங்கே கயிலாய மலை; மலங்கி=திகைத்து; நலம் கொள்=பல நன்மைகளை அருளும் ஆற்றல் உடைய திருவடி;

    இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
    தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
    மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை
    நலம் கொள் நாமம் நமச்சிவாயவே
           

பொழிப்புரை:

கயிலாய மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்து முயற்சி செய்த அரக்கன் இராவணனின் நீண்ட முடிகள், தலைகள் மற்றும் உடலினை மலையின் கீழே அழுத்தி நெரித்த பெருமான், அரக்கன் தனது தவற்றினை உணர்ந்து வருந்தியவனாக சாம கானம் பாடிய போது, பல வகையிலும் அரக்கனுக்கு அருள் செய்தவர் சங்கரர். அவர் விலை மதிப்பற்ற திருநீற்றினைத் தனது திருமேனியில் பூசியுள்ளார். திருவெண்காடு தலத்தில் வீற்றிருக்கும் அவர், தனது சடையினில் அலைகள் வீசும் கங்கை நதியினை வைத்தவர் அல்லவா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com