97. மந்திர மறையவை - பாடல் 9

அடியவனுக்கு பெருமான்
97. மந்திர மறையவை - பாடல் 9


பாடல் 9:

    ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த்
    தேடவும் தெரிந்தவர் தேர கிற்கிலார்
    வேடமது உடைய வெண்காடு மேவிய
    ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே

 
விளக்கம்:

ஏடு=தாமரைப் பூவின் இதழ்கள்; அமர்ந்த=விரும்பிய; சுவேதகேது என்ற தனது அடியவனுக்கு பெருமான் தனது ஏழு நடனங்களை காட்டி அருள் புரிந்த இடம். தில்லைச் சிதம்பரம் போன்று ஸ்படிக இலிங்கத்திற்கு தினமும் அபிடேகமும், நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை அபிடேகங்களும் நடைபெறுகின்றன. இந்த தலத்திற்கு ஆதி சிதம்பரம் என்றே பெயர். நடராஜரின் சன்னதிக்கு அருகே பெருமாள் சன்னதியும் உள்ளது. இதனால் தான் சம்பந்தர், வெண்காட்டில் ஆடிய இறைவன் என்று உணர்த்தும் வண்ணம் வெண்காடு மேவிய ஆடலை அமர்ந்த எம் அடிகள் என்று இந்த பாடலில் குறிப்பிட்டார் போலும். தனது ஆடல் மூலம் பெருமான் ஐந்தொழில் புரிவதை உணர்த்துவதாக சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார். 

நாதத்திலிருந்து படைப்பு தோன்றியதாக ஐதீகம். நாதம் எழுப்பும் உடுக்கை படைப்பு தொழிலையும், அபய ஹஸ்தம் காட்டும் வலது கரம் காக்கும் தொழிலையும், கையில் ஏந்திய தீச் சுடர் அழிக்கும் தொழிலையும் முயலகன் மேல் ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும் தூக்கிய திருவடி அருளும் தொழிலையும் குறிப்பதாக கூறுவர். இந்த தத்துவத்தை விளக்கும் திருமந்திரப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
    அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்
    அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
    அரன் அடி என்றும் அனுக்கிரகம் தானே
 

சிவபெருமான் ஆடும் நடனத்தை ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் உண்மை விளக்கம் சைவ சித்தாந்த நூலின் ஆசிரியர் மனவாசகம்கடந்தார் கூறுகின்றார். ஆன்மாக்கள் உலக இன்பங்களை நுகரும் பொருட்டு நடத்தப்படும்
கூத்தினை ஊன நடனம் என்றும், ஆன்மாக்கள் வீடுபேறு பெறுவதற்கு உதவி செய்யும் நடனத்தை ஞான நடனம் என்றும் ஆசிரியர் கூறுகின்றார். பெருமானின் ஒரே நடனம் இந்த இரண்டு வகைகளில் செயல்படுவதால், நடனம்
விளைவிக்கும் பயன் கருதி, ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் கருதப்படுகின்றது. 

படைத்தல் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் நாதத்தை எழுப்பும் உடுக்கை ஏந்திய திருக்கரம் படைத்தல் தொழிலையும், அபயம் காட்டும் வலது திருக்கரம் காத்தல் தொழிலையும், தீச்சுடர் ஏந்திய திருக்கரம் அழித்தல் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளும் தொழிலையும் குறிப்பதாக கூறுவார்கள். இந்த ஐந்து தொழில்களும் உயிர் தனது வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப ஒரு உடலுடன் பொருந்தி, வினைகளின் விளைவால் ஏற்படும் இன்பதுன்பங்களை அனுபவித்து, வினைகளை கழித்துக் கொள்ள வழி வகுப்பதால் இந்த நடனம் ஊன நடனம் எனப்படுகின்றது. இதனை விளக்கும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திதி ஸ்திதி என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.; அங்கி=அக்னி; சங்காரம் என்றால் அழிக்கும் தொழில்; 

    தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் -- ஊற்றமா
    ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம் முத்தி
    நான்ற மலர்பதத்தே நாடு 

இந்த நடனம் எவ்வாறு ஆன்மாக்கள் வீடுபேறு பெறுவதற்கு வழி வகுத்து, ஞான நடனமாக திகழ்கின்றது என்பதை அடுத்த பாடலில் ஆசிரியர் விளக்குகின்றார். உடுக்கை ஏந்திய திருக்கை மாயா மலத்தை உதறுகின்றது; தீச்சுடர் ஏந்திய திருக்கரம் கன்ம மலத்தை சுட்டு எரிக்கின்றது; ஊன்றிய திருவடி ஆணவ மலத்தின் வலிமையை அடக்கி அதை அழுத்தி செயலிழக்கச் செய்கின்றது; இவ்வாறு மலங்களின் பிடியிலிருந்த டுபட்ட ஆன்மாவை, தூக்கிய திருவடி பேரானந்தத்தை அருள, அபயகரம் அந்த ஆன்மாவை பேரின்பத்தில் அழுத்துகின்றது. இவ்வாறு ஆன்மாவை பேரானந்தத்தில் ஆழ்த்தும் செயல் ஞான நடனம் என்று கருதப்படுகின்றது. சிவயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தில்
உள்ள ஐந்து எழுத்துக்களும் ஐந்து பொருட்களை குறிக்கின்றன. சி என்ற எழுத்து சிவபிரானையும், வ என்ற எழுத்து அவனது அருட்சக்தியாகிய அம்மையையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், ந என்ற எழுத்து திரோதான மலத்தையும் ம என்ற எழுத்து ஆணவ மலத்தையும் குறிக்கும். ய என்று உணர்த்தப்படும் ஆன்மா, சிவ எனப்படும் ஞான நடனத்தையும், நம எனப்படும் ஊன நடனத்தையும் நுகர்வதாக, பஞ்சாக்கர மந்திரம் உணர்த்துவதாக கூறுவார்கள். 

    மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்
    சாய அமுக்கி அருள் தான் எடுத்து -- நேயத்தால்
    ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
    தான் எந்தையார் பரதம் தான்

நறுமணம் கமழும் இதழ்களைக் கொண்டுள்ள தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் பெருமானின் திருமுடியையும் திருவடியையும் தேடிய போது, அதனை அறிந்து கொண்ட பெருமான் இருவரும் அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம் நீண்ட நெருப்புப் பிழம்பாக தோன்றினார். இவ்வாறு பல பல வேடம் எடுக்க வல்ல பெருமான் திருவெண்காடு தலத்தில் மிகுந்த விருப்பத்துடன் நடனம் ஆடுகின்றார் அல்லவா.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com