113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 2

திருப்பாதங்களைத் தொழுவது
113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 2


பாடல் 2:

    அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும்
    விரவும் திருமுடி தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பிப் 
    பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பாதம்
    இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அதுவாமே

விளக்கம்:

பெருமானின் திருப்பாதங்களைத் தொழுவது மறுமையில் நிரந்தரமாகிய இன்பம் அளிக்கும் வீடுபெற்றினை மிகவும் எளிதாக பெற்றுத் தரும் என்று முந்தைய பாடலில் கூறிய சம்பந்தர் இந்த பாடலில், பெருமானைத் தொழுதால் இம்மையிலும் இன்பம் பயக்கும் என்று கூறுகின்றார். அம் துகில்=அழகிய துகில்; துகில்=புடவை; வேங்கை=புலி; விரவும்=கலந்து; கலந்து நிற்பவை எவை என்று சம்பந்தர் இங்கே கூறவில்லை எனினும், முந்தைய பாடலில் உணர்த்திய வண்ணம் கங்கை என்பதையும் கொன்றை என்பதையும் சேர்த்து  பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறே பரவும் என்ற சொல்லுக்கும் முன்னர் அடியார்கள் என்று இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும். புடவையும் புலித்தோலும் பூண்டவன் என்று குறிப்பிட்டு, மாதோர் பாகனாக இறைவன் விளங்கும் தன்மையை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அந்துகில் வேங்கை அதள் என்ற தொடருக்கு அழகிய புலித்தோலாடை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.      
  
பொழிப்புரை:

பாம்பினோடு ஆமை ஓட்டினையும் அணிகலனாக அணிந்து அழகிய புலித்தோல் ஆடையை உடுத்தியவனும், கங்கை நதியும் கொன்றை மலரும் கலந்து பொருந்தி விளங்கும் சடை முடியில் பிறைச் சந்திரனை அணிந்தவனும் ஆகிய பெருமானை அடியார்கள் மிகுந்த விருப்பத்துடன் புகழ்ந்து தொழ, அவன் ஒப்பற்ற கடம்பூர் தலத்தில் வீற்றிருக்கின்றான். அத்தகைய பெருமானின், பசிய கண்களை உடைய வெள்ளை எருதின் மீது உலவும் அண்ணலின் திருப்பாதங்களை இரவும் பகலும் பணிந்து வணங்க நமக்கு இன்பம் ஏற்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com