113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 11

பெருமானைத் தொழுது
113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 11


பாடல் 11:

    விடை நவிலும் கொடியானை வெண்கொடி சேர் நெடுமாடம்
    கடை நவிலும் கடம்பூரில் காதலனைக் கடற்காழி
    நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்
    படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே 

விளக்கம்:

நவிலும்=அறிவிக்கும்; கடை=கடைவாயில்; காதலன்=உயிர்கூட்டமாகிய பெண் இனத்திற்கு தலைவன்; நடை=நல்லொழுக்கம்; படை=கருவி; படை நவில் பாடல் என்ற தொடர் நயமாக இரு பொருள் தருவதை நாம் உணரலாம். பாடலை பாடும் அடியார்களுக்கு பழி மற்றும் பாவத்திலிருந்து காக்கும் படைக் கவசமாக திகழ்கின்றது என்பது ஒரு பொருள். பெருமானுக்கு படைக்கப்படும் பாடல் என்பது மற்றொரு பொருள்.  

பொழிப்புரை:

இடபமே தனது சின்னம் என்பதை அறிவிக்கும் கொடியினை உடையவனை, வெண் கொடிகள் சேர்ந்த உயர்ந்த வாயில்களை கொண்ட வீடுகளை உடைய கடம்பூர் தலத்தில் உறைபவனை, அனைத்து உயிர்களும் காதல் கொள்ளத்தக்க தலைவனும் ஆகிய பெருமானை. கடல் சூழ்ந்த சீர்காழி நகரினைச் சார்ந்தவனும் நல்லொழுக்கம் உடைய ஞானசம்பந்தன், ஓதுபவருக்கு நன்மை அளிக்கும் வண்ணம் பெருமானைப் புகழ்ந்து பாடிய பத்து பாடல்களும், சிறந்த சாதனமாக திகழ்ந்து, இந்த பாடல்களை பாடுவதில் தேர்ச்சி பெரும் அடியார்கள் பழியும் பாவமும் இல்லாதவர்களாக திகழ்வார்கள்.      

முடிவுரை: 

பதிகத்தின் முதல் மூன்று பாடலில் பெருமானைத் தொழுது வணங்கினால் மிகவும் எளிதாக வீடுபேறு அடையலாம் என்றும், இரண்டாவது பாடலில் பெருமானை இரவும் பகலும் தொழுது வணங்கும் அடியார்கள் இம்மையில் இன்பம் பெறுவார்கள் என்றும், உணர்த்திய சம்பந்தர் மூன்றாவது பாடலில் பெருமானின் பொற்கழல்களை தொழுது வணங்கி உரிய பயன்களை அடையும் வண்ணம் நம்மை ஊக்குவிக்கின்றார். இவ்வாறு பெருமானைப் போற்றிப் பேணும் அடியார்கள் பெரியோர்கள் என்று நான்காவது பாடலில் உணர்த்தி, ஐந்தாவது ஆறாவது மற்றும் பத்தாவது பாடல்களில், பெருமானின் புகழினை பாடும் அடியார்கள் பழியும் பாவமும் இல்லாதவர்களாக திகழ்வார்கள் என்று கூறுகின்றார்; பதிகத்தின் ஏழாவது பாடலில் பெருமானைப் புகழ்ந்து வணங்குவதே வாழ்க்கையின் நோக்கம் என்று குறிப்பிடும் சம்பந்தர், எட்டாவது பாடலில் கடம்பூர் தலம் இருக்கும் திசை தொழும் அடியார்களின் தீய வினைகள் கெட்டுவிடும் என்று கூறுகின்றார். பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் பெருமானைப் புகழ்ந்து பாடும் அடியார்கள் வானுலகம் சென்று அடைவார்கள் என்று கூறுகின்றார்; பெருமானின் திருவடிகளை வணங்குவதாலும் அவனது புகழினை உணர்த்தும் பாடல்களை பாடுவதாலும் நாம் அடையவிருக்கும் பயன்களை, திருஞானசம்பந்தரின் பதிகம் மூலம் உணர்ந்து கொண்ட நாம், கடம்பூர் பெருமானை குறிப்பிடும் பதிகத்தினை பாடி இம்மை மற்றும் மறுமையிலும் நல்ல பலன்களை பெறுவோமாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com