110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 2

அடிகளார் பெருமானை
110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 2


பாடல் 2:

    கழியுளார் எனவும் கடலுளார் எனவும் காட்டுளார் நாட்டுளார் எனவும்
    வழியுளார் எனவும் மலையுளார் எனவும் மண்ணுளார்
        விண்ணுளார் எனவும் 
    சுழியுளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய்
        வந்தன சொல்லும்
    பழியுளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

விளக்கம்:

பழி=ஒவ்வாத சொற்கள்; இந்த பாடலில் அடிகளார் பெருமானை குறிப்பிட்டு சொல்லும் சொற்கள் ஒன்றுக்கொன்று பொருத்தம் இல்லாத சொற்களாக தோன்றுவதால் தொண்டர் வாய் வந்தன சொல்லும் பழியுளார் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கழி=உப்பங்கழி; வழி=பாதைகள்; சாலைகள். தாங்கள் காணும் அனைத்துப் பொருட்களிலும் சிவபிரானைக் கண்டு மகிழும் பக்குவம் அந்நாளைய அடியார்களுக்கு இருந்தது போலும். அந்த நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. திருவையாற்றில் தான் கண்ட உயிரினங்கள் அனைத்தையும் சிவமாகவும் சக்தியாகவும் கண்ட அப்பர் பிரான் நமது நினைவுக்கு வருகின்றார். இவ்வாறு சிவானுபவத்தில் ஊறித் திளைத்த அப்பர் பெருமானே, பெருமான் உள்ளே புகுந்த சுவட்டினை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்.
 
கருநட்ட கண்டனை என்று தொடங்கும் தில்லைப் பதிகத்தின் பாடலில் (4.81.3) பெருமான் தனது உள்ளத்தில் புகுந்ததாக கூறும் அப்பர் பிரான், அவர் அவ்வாறு உள்ளே புகுந்த சுவடு ஏதும் தான் அறியும் வண்ணம் தென்படவில்லை என்று கூறுகின்றார். அப்பர் பிரானும் அறியாத வகையில் அவரது மனத்தினுள்ளே புகுந்ததும் புகுந்த சுவடு காணப்படாததும், அப்பர் பிரானுக்கே வியப்பைத் தருகின்றது. அந்த வியப்பினை இந்த பாடலில் அப்பர் பிரான் தெரிவிக்கின்றார். 

    கல் மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே
    நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
    பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல பொலிந்திலங்கி
    என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடில்லையே

உயிரின் வேட்கை இறைவனைச் சென்று அடைவது. இதனை புரிந்து கொள்ளாத நாம், உயிரின் விருப்பத்தை விட்டு விட்டு, இந்த உடலின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் நமது விருப்பங்களை இறைவனிடம் தெரிவிக்கின்றோம். இந்த உடலின் தேவைகள் அனைத்தும் நிலையற்றவை, ஒரு நாள் அழியக்கூடியவை. ஆனால் உயிர் விரும்பும் முக்தி நிலை, என்றும் அழிவற்றது, சற்றும் குறையாத பேரின்பத்தை கொடுக்க வல்லது. எனவே அந்த முக்தி நிலையை வேண்டிப் பெறாது, அழியும் இன்பங்களை வேண்டுவோரை கல்மனவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தில்லையுள் உள்ள அடியார்கள் இறைவனிடம் முக்தி நிலை வேண்டுவதால், அவர்களை நல்மனவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பேரின்பத்தைத் தரவல்ல சியபெருமானிடம் சென்று சிற்றின்பத்தை யாசிப்பது, ஒரு பெரிய பணக்காரரிடம் சென்று பத்து காசுகள் யாசித்துப் பெறுவது போன்று நகைக்கு உரியதல்லவா. அதனால் நமக்கு ஏற்படும் பயன் என்ன?     

பொழிப்புரை:

கடலில் உள்ளார் என்றும் கடற்கரையில் உள்ள உப்பங்கழியில் உள்ளார் என்றும் காட்டில் உள்ளார் என்றும் நாட்டில் உள்ளார் என்றும் ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு செல்லும் வழியில் உள்ளார் என்றும் மலையில் உள்ளார் என்றும் மண்ணில் உள்ளார் என்றும் விண்ணில் உள்ளார் என்றும் ஆற்றில் பெருக்கெடுத்தோடும் நீர்ச்சுழியில் உள்ளார் என்றும் தொண்டர்கள் தமது வாய்க்கு வந்தவாறு ஒவ்வாத சொற்களை கூறி பரமன் பரவி இருக்கும் இடங்களை குறிப்பிடுகின்றனர். அனைத்து இடங்களிலும் பரவியுள்ள பெருமான், தொண்டர்கள் குறிப்பிடும் மேற்கண்ட பொருட்களிலும் நிறைந்து உள்ளார் எனினும், அவர் அவ்வாறு இணைந்து இருக்கும் சுவட்டினையும் அறிய முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இவ்வாறு எங்கும் பரவியிருக்கும் பெருமான் பந்தணைநல்லூர் தலத்தில் பசுபதியாக கோலம் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com