110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 3

வணங்க வேண்டும்
110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 3

பாடல் 3:

    காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடுந்தொழில்
         காலனைக் காலால்    
    வீட்டினார் எனவும் சாந்த வெண்ணீறு பூசியோர் வெண்மதி சடை மேல்
    சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல்லுள சொல்லு நால் வேதப் 
    பாட்டினர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

விளக்கம்:

சுவடு தாமறியார் என்று முந்தைய பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர் இந்த பாடலிலும் அவ்வாறு குறிப்பிடுகினார். பூவினில் பொருந்தியுள்ள நறுமணத்தை நம்மால்  உணர முடிந்தாலும் காண இயலாதது போன்று இறைவன் எங்கும் இருப்பதை நாம் உணரமுடிந்தாலும் அவ்வாறு இறைவன் பொருந்தி இருக்கும் சுவட்டினை நாம் காண முடியாது என்ற செய்தியைத் தான் சம்பந்தர் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். நமது உணர்வுகள் மூலம் நம்மால் உணரப்படும் இறைவனை அறிவு பூர்வமாக நம்மால் காண முடியாது என்பதை மணிவாசகர் திருச்சதகம் பாடல் ஒன்றினில் மிகவும் அழகாக உணர்த்துகின்றார். இன்ன தன்மையன் என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இறைவனை நாம் உணர்வினால் அவன் இருப்பதை புரிந்து கொண்டு அவனை வழிபட்டு வணங்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவனது தன்மை யாது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது தவறு. இந்த பாடலில் இறைவனை உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் கூறுகின்றார். எப்படி உண்மையாக இருக்கும் பொருள் இல்லாத பொருளாக மாற முடியும். நமது உணர்வினால் உணரப் படுபவன் இறைவன். எனவே அவன் உள்ளதை, அவன் இருக்கும் உண்மையை நாம் யாவரும் உணர்வால் அறிந்து உணர்கின்றோம். ஆனால் அதே இறைவனை நமது அறிவின் துணையால் இன்ன தன்மையன் என்று ஆராயத் தொடங்கினால் அவனை நாம் உணர முடியுமா. முடியாது என்பதே விடை. எனவே தான் அறிவினால் கண்டறியாத பொருள் என்று உணர்த்தும் பொருட்டு இன்மையுமாய் உள்ளவன் என்று கூறுகின்றார். உணர்வால் உணர முடியும் இறைவனை அறிவினால் உணர முடியாது என்பதை சுட்டிக் காட்டவே உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். வளி=காற்று; ஊன்=உடல்;

    வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
    ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
    கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
    வானாகி நின்றாய் என் சொல்லி வாழ்த்துவனே     
 

பொழிப்புரை:

காட்டில் வாழ்பவர் என்றும், நாட்டினில் உறைபவர் என்றும், தக்க தருணத்தில் உடல்களிலிருந்து உயிர்களை பிரிக்கும் கொடிய தொழிலைச் செய்யும் காலனைத் தனது காலால் உதைத்து வீழ்த்தியவர் என்றும், நறுமணம் கமழும் திருநீற்றினைத் தனது உடலில் பூசியவர் என்றும் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ளவர் என்றும், தான் அனைத்துப் பொருட்களிலும் கலந்து நிற்கும் தன்மையை எவரும் அறிய முடியாத வண்ணம் சுவடு ஏதும் வைக்காதவர் என்றும் அடியார்கள் அவரை குறிப்பிடுகின்றனர். எத்தனை புகழ்ச் சொற்கள் உள்ளனவோ அத்தனைப் புகழ்ச் சொற்களையும் பயன்படுத்தி வேதங்களால் புகழ்ந்து பேசப்படும் இறைவன் வேதத்தின் பொருளாகவும் உள்ளார். இத்தகைய தன்மையைக் கொண்டுள்ள இறைவன் பந்தணைநல்லூர் பசுபதியாக உறைகின்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com