110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 4

திருமாலின் மேனியை
110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 4


பாடல் 4:

    முருகினார் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல்
         கணங்களின் துயர் கண்டு
    உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
    கருகினார் எல்லாம் கை தொழுது ஏத்தக் கடலுள் நஞ்சு
         அமுதமா வாங்கிப்
    பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

விளக்கம்:

முருகு=அழகு; முருகினார்=அழகிய; மொய்த்த=நெருங்கி வந்த; கணங்கள்=தேவகணங்கள்; அமுதம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த பாற்கடலிலிருந்து ஆலகாலம் விடம் பொங்கி வந்த போது அந்த விடத்தின் தாக்குதலை தாங்க முடியாமல் பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் பல திசைகளிலும் பரவி ஓடினார்கள். அப்படியும் விடத்தின் தாக்கத்தினால் அவர்களது உடல் கருகியது என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் பருவரை ஒன்று சுற்றி என்று தொடங்கும் தசபுராணத் திருப்பதிகத்தின் பாடலை (4.14.1) நினைவூட்டுகின்றது. பருவரை=மந்தரமலை: பிதிகாரம்= பிரதிகாரம் எனும் வடமொழியின் திரிபு, கழுவாய்: அரவம் கைவிட்ட இமையோர்= கடையப்பட்டதால் ஏற்பட்ட துன்பம் தாளாத வாசுகி பாம்பு விடத்தை வெளியிட, அதனால் பயந்து பாம்பினைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளை எடுத்து ஓடிய வானவர்கள்: பாம்பின் வாலினைத் தங்கள் கைகளால் பிடித்துக் கொண்டு தாங்கள் கடைந்து கொண்டிருந்ததை விட்டுவிட்டு ஓடிய வானவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். எரியாமல்=தேவர்கள் கடுமையான விடத்தால் எரிந்து போகாமல் தடுத்த; கரிய நிறம் கொண்ட திருமாலின் நிறத்தை தோற்கடிக்கும் பொருட்டு மிகவும் கருமையான நிறம் கொண்ட ஆலகால விடம் என்றும், திருமாலின் மேனியை அழிக்கும் வண்ணம் பொங்கி எழுந்த வந்த விடம் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

    பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயமாய்த்
    திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
    பெருகிட மற்று இதற்கோர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும்
    அருள் கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர் அரசே

கடலுள் நஞ்சு அமுதமா வாங்கிப் பருகின்றார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். திருமால் உள்ளிட்ட பல தேவர்களும் அஞ்சியோடும் படி பொங்கியெழுந்த நஞ்சினை அமுதம் உண்பது போன்று மிகவும் எளிதாக பெருமான் உண்டார். பல திருமுறைப் பாடல்களில் மீதம் ஏதும் வைக்காமல் நஞ்சினை உண்டார் என்றும் தாமே விருப்பத்துடன் உண்டார் என்றும், தயக்கம் ஏதும் இன்றி உண்டார் என்றும் தாமதம் செய்யாமல் உண்டார் என்றும் பெருமான் நஞ்சு உண்ட தன்மை குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அமுதத்தை தானே, அவ்வாறு தயக்கமின்றி தாமதம் செய்யாமல் மீதம் ஏதும் வைக்காமல் விருப்பமுடன் எவரும் உண்பர். எனவே தான் நஞ்சினை அமுதமாக வாங்கி உண்டார் என்று சம்பந்தர் இந்த பாடலில் மிகவும் பொருத்தமாக குறிப்பிடுகின்றார். உறுதி போந்து என்று சிறிதும் தயக்கம் இன்றி நஞ்சினை உண்ட செய்கையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.         
 
பொழிப்புரை:

அழகிய சோலைகள் சூழ்ந்த உலகத்தவர் போற்றி வணங்க, நெருங்கி வந்து வேண்டிய தேவர்களின் துயரம் கண்டு மனம் உருகியவராய், உறுதியான உள்ளத்துடன், ஒளி வீசும் தங்களது உடல்கள் கருகிய நிலையில் தன்னை நாடி வந்த தேவர்கள் கைகளை தலைமேல் கூப்பித் தொழுது வணங்கிய திருமால் பிரமன் உள்ளிட்ட தேவர்களின் நிலை கண்டு இரங்கியவராய், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த நஞ்சினை அமுதம் உண்பது போன்று மிகுந்த விருப்பத்துடன் மீதம் ஏதும் வைக்காமல் தயக்கம் ஏதும் இன்றி உண்ட சியபெருமான், பந்தணைநல்லூர் தலத்தில் பசுபதியாக வீற்றிருக்கின்றார்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com