110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 7

மூவர்க்கு அருள்
110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 7

பாடல் 7:

    எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இருநிலம் வானுலகு எல்லை
    தெற்றினார் தங்கள் காரணமாகச் செரு மலைந்து அடியிணை சேர்வான்
    முற்றினார் வாழும் மும்மதில் வேவ மூவிலைச் சூலமும் மழுவும்
    பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

விளக்கம்:

இந்த பாடலில் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அடியார்களுக்கு இறைவன் புரிந்த அருள் உணர்த்தப் படுகின்றது. இந்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது. திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் முதலில் வேதநெறியை கடைப்பிடித்து பெருமானை தொழுது வாழ்ந்ததாகவும், அதனால் அவர்கள் தேவர்களுக்கு கொடுமை செய்தபோதிலும் அவர்களுடன் போர் செய்ய சிவபிரான் உடன்படாத நிலையும், திருமால் ஒரு வேதியர் உருவம் கொண்டு திரிபுரங்கள் சென்று அரக்கர்களின் மனதில் மயக்கத்தை தோற்றுவித்து அவர்களின் சிந்தனையைக் கெடுத்து அவர்களை வேதநெறியிலிருந்து வழுவி சிவ நிந்தனை செய்யும் அளவுக்கு அவர்களை கெடுத்ததுவும், பின்னர் சிவபிரான் அவர்களை அழித்த வரலாறும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்றில் உணர்த்தப்படும் திருமாலின் பங்கு, நம்மாழ்வாரால் திருவாய்மொழி பாசுரத்தில் (5.10.4)  கூறப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில் சிவனும் திருமாலும் வேறு அல்லாமல் ஒன்றாக விளங்கினர் என்று நம்மாழ்வார் கூறுவதையும் காணலாம். 

    கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்கவாறும் கலந்து அசுரரை
    உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
    வெள்ள நீர்ச் சடையானும் நின்னுடை வேறு அலாமை விளங்க நின்றதும்
    உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே 

திரிபுரத்தில் வாழ்ந்து வந்த சுதன்மன், சுசீலன் சுபுத்தி என்ற மூன்று அரக்கர்களும், பெருமானை இகழாமல் தொடர்ந்து வழிபட்டு வந்தமையால், அவர்கள் மூவரையும் பெருமான் காத்து, உய்வினை அருளிய செய்தி திருவாசகத்தில் மிகவும் அழகாக கூறப்படுகின்றது. தொடர்ந்து பெருமானைத் தொழுது வந்தமையால், அவர்களை உய்ய வல்லார் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். இவர்கள் மூவரையும் காத்து. ஏனைய அரக்கர்களை கோட்டைகளுடன் எரித்ததை திருவுந்தியார் பதிகத்தின் பாடலில் அடிகளார் உணர்த்துகின்றார்.

    உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு
    எய்ய வல்லானுக்கே உந்தீ பற
    இளமுலை பங்கன் என்று உந்தீ பற 

அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த நகரில், சுதன்மன், சுசீலன், சுபுத்தி எனப்படும் மூன்று அரக்கர்கள், தங்களது மன்னர்களாகிய வித்யுன்மாலி, தாருகாட்சன் மற்றும் கமலாட்சன் ஆகிய மூவர்களிடம் கொண்டிருந்த அச்சத்தால், அங்கே வாழ்ந்து வந்த ஏனையோர் சிவ வழிபாட்டினை நிறுத்தி விட்ட போதும், தொடர்ந்து சிவபிரானை வழிபாட்டு வந்தார்கள். இவர்கள் மூவரும் பெருமானிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக, திரிபுரங்கள் மூன்றும் அழிக்கப்பட்ட போதும், இவர்கள் மூவரும் இறவாது இருந்தார்கள். மேலும் சுதன்மன் சுசீலன் என்ற இருவரும் பெருமானின் வாயில் காப்பாளராகவும், சுபுத்தி பெருமானின் எதிரே மத்தளம் வாசிப்பராகவும் இருக்கும் தகுதியை அடைந்தார்கள். பெருமானிடம் அன்பு கொண்டு, அச்சம் நடுக்கம் ஏதுமின்றி, பெருமானை வழிபட்ட மூவர்கள் எய்திய பெருமை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு மூவர்க்கு அருள் செய்த கருணைச் செயல் பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப் படுகின்றது. கீழ்க்கண்ட பாடல் திருப்புன்கூர் தலத்தின் மீது சுந்தரர் அருளியது (7.55.8)  

  மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
 காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரி காடு அரங்காக
 மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க அருள் செய்த      
 தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே

இதே செய்தி சம்பந்தர் திருவண்ணாமலை மீது அருளிய பதிகத்திலும் காணப்படுகின்றது. தொறு என்றால் ஆடுகள் என்று பொருள். நிரை என்றால் மந்தை. ஆமாம் பிணை என்றால் காட்டு பசுக்கள். 

    பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
    மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தாய்
    தூமா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும்
    ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

விடைவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பத்தாவது பாடலிலும் இந்த செய்தி குறிப்பிடப் படுகின்றது. சிவநெறியை அடையாதார் புரங்கள் மூன்றும் வேவ மூவர்க்கு அருள் செய்த பெருமான் என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

    உடை ஏதும் இலார் துவராடை உடுப்போர்
    கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர்
    அடையார் புரம் வேவ மூவர்க்கு அருள் செய்த
    விடையார் கொடியான் அழகார் விடைவாயே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.78.5) தன்னைத் தொழுத திரிபுரத்தவர்கள் மூவரும் அழியாத வண்ணம் பெருமான் காப்பாற்றினர் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். சொக்கர்=பேரழகு உடையவர்; துணை மிக்க=தங்களைக் காத்துக் கொள்வதில் தாங்களே உதவி செய்து கொண்ட மூன்று கோட்டைகள்; எயில்=மதில்; உக்கு=பொடியாகி; அற=ஒழிய; முனிந்து=கோபித்து; பக்கம் உற=தனது பக்கத்தில் இருக்கும் வண்ணம்; மூவரில் இருவர்  வாயில் காப்பாளராகவும் மற்றொருவர் முழவம் வாசிப்பவராகவும் இருக்கும் தன்மை சுந்தரரால் திருப்புன்கூர் பதிகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அரவம் உற்ற=விளையாடும் மகளிரின் ஆரவாரம் பொருந்திய; கொக்கு=மாமரச் சோலைகள்; தனது சிரிப்பினால் மும்மதில்களும் வெந்து அழியுமாறு செய்த சிவபெருமான், தன்னை வணங்கிப் போற்றி வந்த மூவரும் மகிழுமாறு, அவர்கள் தன் பக்கத்தில் இருக்குமாறு அருள் செய்தான் என்ற தகவல் இந்த பாடலில் காணப்படுகின்றது.  உக்கு=பொடியாகி; அற=வீழ; கொக்கு பொழில்=மாமரச் சோலைகள்: வேதிகுடி தலத்தில் இருந்த மகளிர்களின் மேனி ஒளி, மாந்தளிர்களின் ஒளியினை விடவும் மிகுந்து இருந்ததாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

    சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழத்
    தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார் இனிது தங்கு நகர் தான்
    கொக்கு அரவம் உற்ற பொழில் உற்ற வெற்றி நிழல் பற்றி வரி வண்டிசை குலாம்
    மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடம் போக நல்கு வேதிகுடியே      

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.60.9) அப்பர் பிரானும் இந்த செய்தியை குறிப்பிடுகின்றார். கோளரி=வெற்றி கொண்ட சிங்கம், நரசிங்கமாக திருமால் தோன்றியதை குறிப்பிடுகின்றார். நரசிம்மராக வந்த திருமால் என்று குறிப்பிட்டு அம்பின் வலிமையை அப்பர் பிரான் நயமாக உணர்த்துகின்றார். கலை=மான்; கொள்கையான்= செய்கையான், செயலைச் செய்தவன்; தத்துவம்=உண்மையான பொருள்; திரிபுரத்தின் மேல் படையெடுத்து சென்ற போது, திருமால் அம்பின் கூரிய முனையாக நின்ற தன்மையும் இந்தப் பாடலில், கோளரியை கூர் அம்பா வரை மெல் கோத்த சிலையான் என்று கூறப் பட்டுள்ளது.

    கொலை யானை உரி போர்த்த கொள்கையானைக் கோளரியைக்
        கூரம்பா வரை மேல் கோத்த
    சிலையானைச் செம்மை தரு பொருளான் தன்னைத்
        திரிபுரத்தோர் மூவர்க்குச்  செம்மை செய்த 
    தலையானைத் தத்துவங்கள் ஆனான் தன்னைத் தையலோர்
        பங்கினனை தன் கை  ஏந்து
    கலையானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக்
        கண்ணாரக் கண்டேன்  நானே

தோணோக்கம் பதிகத்தில் மணிவாசகரும், திருபுரத்தில் வாழ்ந்து வந்த அடியார்கள் மூவர் தீயினில் எரியாமல் பிழைத்து, பெருமானின் அருகே இருந்து பணிவிடை செய்யும் வாய்ப்பினை பெற்றார்கள் என்று கூறுகின்றார். இந்த நிகழ்ச்சி நடந்தது பண்டைய நாளில் என்பதை உணர்த்தும் பொருட்டு, இந்த நிகழ்ச்சி நடந்தேறிய பின்னர் எண்ணற்ற இந்திரர்களும் பிரமர்களும் திருமாலும் மாண்டனர் என்று கூறுகின்றார்

    எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்துப்
    கண்ணுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதற்பின்     
    எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
    மண்மிசை மால் பலர்  மாண்டனர் காண் தோணோக்கம்

எற்றுதல்=மோதுதல், எதிர்த்தல்; இடை கொள்வார்=துன்பம் செய்பவர் தேற்றினார் = அழித்தல் தொழிலைச் செய்யும் பகைவர்கள்; முற்றினார் = முற்றிய தவம் செய்தவர்கள்; 
 
பொழிப்புரை:

தமக்கு பகைவர்களாக விளங்கி, தாங்கள் சென்ற வழியில் இடைமறித்து போருக்கு அழைப்பவர் எவருமில்லாத நிலையிலும், நிலவுலகம் மற்றும் வானுலகத்தில் இருந்தவர்களை துன்புறுத்தியும் அழித்தும் போர் செய்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் நடுவே பெருமானின் திருவடிகளை சென்று அடையும் நோக்கத்துடன் முற்றிய தவத்துடன் வாழ்ந்து வந்த சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவரைத் தவிர்த்து திரிபுரத்தில் வாழ்ந்து வந்த ஏனையோரை தீயினில் வேகவைத்து அழித்த பெருமான், மூவிலைச் சூலமும் மழு ஆயுதமும் தனது கையில் ஏந்தியவர் ஆவார். அவரே பந்தணைநல்லூர் தலத்தில் பசுபதி என்ற திருநாமத்துடன் விளங்குகின்றார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com