110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 8

பொன்மலையை குறிக்கும்
110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 8

பாடல் 8:

    ஒலி செய்த குழலின் முழவமது இயம்ப ஓசையால் ஆடல் அறாத
    கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன்
    வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில்
    பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

விளக்கம்:

பூதரம் என்ற சொல் பூதம் என்று மருவியதாக கூறுவார். பூதரம் என்ற சொல் பொன்மலையை குறிக்கும் என்று அபிதான சிந்தாமணி நிகண்டு கூறுகின்றது. இங்கே கயிலாய மலையினை குறிக்கும். கலி என்ற சொல்லை களி என்ற சொல்லின், எதுகை நோக்கிய திரிபாகக் கொண்டு குழலின் ஓசை மற்றும் முழவின் ஓசை பொருந்திய நடனம் நடைபெறுவதால் களிப்பு மிகுந்து காணப்பட்ட மலை என்று பொருள் கொள்வார் பலர். ஒரு சிலர் கலி என்பதற்கு வலிமை என்று பொருள் கொண்டு வலிமை மிகுந்த கயிலாய மலை என்றும் கூறுகின்றனர். முதலிலே கூறப்பட்ட பொருள் மிகவும் பொருத்தமாக தோன்றுகின்றது.

பொழிப்புரை:

குழலின் ஒலியும் முழவின் ஓசையும் கலந்து நின்ற பின்னணியில் இடைவிடாது பூதங்கள்  நடனம் ஆட, களிப்பின் மிகுதியில் இருந்த கயிலாய மலையினை, தனது கைகளை அதன் கீழே செலுத்தி பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனை தனது கால் பெருவிரலினை மலையின் மீது அழுத்தி, அவனது வலிமையை அழித்தவர் சிவபெருமான். அவர் புலியின் தோலை ஆடையாக உடுத்தியுள்ளார். ஏதும் குறைவின்றி நல்ல வாழ்வு அமைந்து இருப்பினும் பெருமான், உலகத்தவர் தங்களது மும்மலங்களையும் தான் பிச்சைப் பாத்திரமாக வைத்துள்ள பிரம கபாலத்தில் இட்டு உய்யும் வண்ணம், பிச்சை ஏற்றுத் திரிகின்றார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் பந்தணைநல்லூர் தலத்தில் பசுபதியாக உறைகின்றார்.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com