111. பூங்கொடி மடவாள் - பாடல் 1

துயர் தீர்த்த நாதர்
111. பூங்கொடி மடவாள் - பாடல் 1


பின்னணி:

சேய்ஞலூர் தலம் சென்று இறைவனை வணங்கி, பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் அந்த பதிகத்தினில் அந்த தலத்தில் வாழ்ந்த சண்டீசரையும் குறிப்பிட்டு சிறப்பித்து பாடிய பின்னர்  அங்கிருந்து புறப்பட்டு திருப்பனந்தாள் சென்றதன் பின்னர் அருகில் இருந்த பந்தணைநல்லூர் மற்றும் ஓமாம்புலியூர் தலங்கள் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. ஆங்கு என்ற சொல் திருப்பனந்தாள் தலத்தினை குறிப்பிடுகின்றது. திருப்பனந்தாள் தலத்து இறைவன் மீது கண்பொலி நெற்றியினான் என்று தொடங்கும் பதிகத்தினை (3.62) திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். இந்த தலத்தினை ஓமாம்புலியூர் என்று அப்பர் பிரானும் ஓமாம்புலியூர் என்று சம்பந்தரும் தங்களது பதிகத்தில் குறிப்பிடுகின்றனர். சேக்கிழார் ஓமாம்புலியூர் என்றே பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். திருக்கோயில் வடதளி என்று குறிப்பிடப்படுகின்றது. எனவே ஊரில் மற்றொரு சிவாலயம் இருந்திருக்க வேண்டும் என்றும், அந்த ஆலயத்திலிருந்து வேறுபடுத்திக் கட்டவே வடதளி என்று இந்த திருக்கோயிலை அழைத்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த தலம் பந்தணைநல்லூர் தலத்திற்கு வடகிழக்கில் எட்டு கி.மீ. தூரத்தில் உள்ளது. 

    ஆங்கு சொல்மலர் மாலை சாத்தி அப்
    பாங்கு பந்தணைநல்லூர் பணிந்து பாடிப் போய்த்
    தீங்கு தீர் மாமறைச் செம்மை அந்தணர் 
    ஓங்கும் ஓமாம்புலியூர் வந்து உற்றனர்

இந்த தலம் சிதம்பரத்திற்கு 24 கி.மீ. தென்மேற்கு திசையிலும் காட்டுமன்னார்குடி ஊருக்கு தெற்கே எட்டு கி.மீ. தொலைவிலும் உள்ளது. இரண்டு இடங்களிலிருந்தும் நகரப் பேருந்து வசதி உள்ளது. முனிவர் வியாக்ரபாதர் அவர்களுடன் தொடர்பு கொண்டு புலியூர் என்று அழைக்கப்படும் ஐந்து தலங்களுள் ஒன்று. அவையாவன, பெரும்பற்றப்புலியூர் (தில்லைச் சிதம்பரத்தின் மறு பெயர்), ஓமாம்புலியூர், பெரும்புலியூர், பாதிரிப்புலியூர் (கடலூர்) மற்றும் எருக்கத்தம்புலியூர். சுவாமி சன்னதியில் ஐந்த தலத்து மூர்த்திகளும் புடைச் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளன. தட்சிணாமூர்த்தியிடம் உமையம்மை பிரணவ மந்திரம் உபதேசம் பெற்றதையும், வியாக்ரபாதர் வழிபட்டதையும் இணைத்து ஓம் ஆம் புலியூர் என்று அழைத்ததாக தமிழ்த் தாத்தா திரு உ.வே.சா. அவர்கள் கூறுகின்றார். ஆலமரத்தின் கீழே பிரணவ உபதேசம் நடைபெற்றதால் வடதளி என்ற பெயர் வந்தததாக கூறுவார்கள். வடம் என்றால் ஆலமரம் என்று பொருள். பொதுவாக கோஷ்டத்தில் காணப்படும் தென்முகக் கடவுளை நாம் இங்கே கருவறை முன்னர் அர்த்த மண்டபத்தில் காணலாம். ஓம்புதல் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். நம்மை பாதுக்காக்கும் இறைவன் உறையும் கோயில் என்ற பொருள் பட ஓமாம்புலியூர் என்ற பெயர் வந்ததாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. துயர் தீர்த்த நாதர் என்ற திருநாமத்திற்கு இந்த விளக்கம் பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். ஓமம் வளர்த்து வேள்விகள் செய்யும் அந்தணர்கள் நிறைந்த தலம் என்பதால் ஓமாம்புலியூர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவன் பெயர் துயர் தீர்த்த நாதர், பிரணவபுரீசுவரர். அம்பிகையின் பெயர் பூங்கொடி நாயகி. புஷ்பலலிதாம்பிகை. லலித் என்ற வடமொழிச்சொல் கொடியினை குறிக்கின்றது. 
 
  
பாடல் 1:

    பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி அடிகள்
    வீங்கிருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
    தேங்கமழ் பொழிலில் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
    ஓங்கிய புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

விளக்கம்:

இந்த பதிகம் பூங்கொடி மடவாள் என்ற அம்மையின் திருநாமத்துடன் தொடங்குகின்றது. இவ்வாறு தலத்து இறைவியின் நாமத்தோடு தொடங்கும் மற்றைய பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பூங்கொடி நாயகி என்ற பெயர் சற்றே பூங்கொடி மடவாள் என்று மாற்றப்பட்டுள்ளது. மடமங்கை என்றால் இளம்பெண் என்று பொருள்.

    பதிக எண்    தலம்            தொடக்கச் சொற்கள்
    1.09        சீர்காழி            வண்டார்குழல் அரிவை    
    1.10        அண்ணாமலை    உண்ணாமுலை உமையாளொடும்
    1.25        செம்பொன்பள்ளி    மருவார்குழலி மாதோர்
    1.49        நள்ளாறு        போகமார்த்த பூண்முலையாள்
    5.10        மறைக்காடு        பண்ணின் நேர் மொழியாள்
    5.85        சிராப்பள்ளி        மட்டுவார் குழலாளொடு
    7.71        திருமறைக்காடு    யாழைப் பழித்தன்ன மொழிமங்கை

வீங்கிருளில் பெருமான் நட்டம் ஆடுகின்றார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பிரளயம் ஏற்படும் போது அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்குகின்றன. அத்தகைய உயிர்கள் அனைத்தும் மலத்துடன் இணைந்து இருப்பதால், அந்த உயிர்களால் முக்திநிலை அடைந்து நிலையான ஆனந்தம் பெறமுடிவதில்லை. அந்த உயிர்களுக்கு, தங்களது மலங்களை கழித்துக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, இறைவன் உலகினை மீண்டும் படைப்பதற்கு திருவுள்ளம் கொள்கின்றார். அந்த தருணத்தில் அவர் ஆடுகின்ற நடனத்திலிருந்து நாதம் பிறக்கின்றது. நாதத்திலிருந்து ஆகாயமும் பின்னர் மற்ற நான்கு பூதங்களும் தோன்ற, பஞ்ச பூதங்களின் கலப்பாகிய உலகத்து பொருட்களும் தோன்ற, உயிர்களும் அவற்றின் வினைத் தொகுதியின் தன்மைகளுக்கு ஏற்ப உடல்களுடன் இணைக்கப் படுகின்றன. இவ்வாறு உலகம் மீண்டும் தோன்றுவதற்கு இறைவனின் நடனம் மூல காரணமாக இருப்பதை நாம் உணரலாம். இந்த செய்தியை உணர்த்தும் பொருட்டு வீங்கிருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் என்று சம்பந்தர் கூறுகின்றார். இங்கே விகிர்தர் என்று சம்பந்தர் கூறுவதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். விகிர்தர் என்றால் மாறுபட்ட இயல்பு உடையவர் என்று பொருள்; மேலே குறிப்பிடப்பட்ட செய்திகளில் உள்ள சில அம்சங்ளை நாம் மீண்டும் நினைவு கூர்வோம். பிரளய காலத்தில் எஞ்சி நிற்பவர் இறைவன் மட்டுமே. அனைவரும் நல்ல ஒளியின் பின்னணியில் நடனம் ஆடுவதை விரும்புவர்; ஆனால் இறைவனோ நள்ளிருளில் நடனம் ஆடுகின்றார். அவ்வாறு ஆடும் நடனத்தில் இசைக்கப்படும் உடுக்கையின் ஓசை, ஆதி நாதமாக உலகத்தைத் தோற்றுவிக்கின்றது. இத்தகைய செயல்களை இறைவனைத் தவிர்த்து வேறு எவரும் செய்ய முடியாது என்பதை குறிப்பிடும் வண்ணம், ஏனையோரிடமிருந்து மாறுபட்டவர் என்று உணர்த்தும் வண்ணம் விகிர்தர் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேங்கமழ்=இனிமையான நறுமணம்; செறிந்த=நெருங்கிய, அடர்ந்த; கோதுதல்=குடைதல், கிளறுதல்; வீங்கிருள்=அடர்ந்த இருள், பிரளய காலத்து இருள்;    
 
பொழிப்புரை: 

பூங்கொடி நாயகி என்று அழைக்கப்படும் இளமையான உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் வைத்துள்ளவரும், முறுக்குண்ட சடைமுடியை உடையவரும், பிரளய காலத்தில் ஏற்படும் அடர்ந்த இருளில் நடனமாடுபவரும், ஏனையோரிடமிருந்து மாறுபட்ட குணங்களை உடையவரும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் உறையும் இடம் யாது என்று வினவுவீராயின், நான் சொல்வதை கேட்பீர்களாக; நறுமணம் கமழும் சோலைகளில் செழிப்பாக வளரும் மலர்களைக் குடைந்து அடர்ந்து கூட்டமாக நெருங்கும் வண்டுகள் இசை பாடுவதும், உயர்ந்த புகழினை உடைய அந்தணர்கள் நிறைந்ததும் ஆகிய ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் அவ்வாறு பெருமான் உறையும் இடம் ஆகும்.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com