111. பூங்கொடி மடவாள் - பாடல் 3

குற்றமற்ற தவங்கள்
111. பூங்கொடி மடவாள் - பாடல் 3

பாடல் 3:

    பாங்குடை தவத்துப் பகீரதற்கு அருளிப் படர்சடைக் கரந்த நீர்க் கங்கை
    தாங்குதல் தவிர்த்துத் தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
    ஆங்கெரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அங்கையால் ஆகுதி வேட்கும்
    ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

விளக்கம்:

பாங்குடை=சிறந்த தவத்தினை உடைய; தராதலம்=பூமி; தத்துவன்=மேலானவன்; இந்த பாடலில் பெருமான் பகீரதனுக்கு அருள் புரியும் வண்ணம் கங்கை நதியை சிறிது சிறிதாக வெளியிட்ட செய்தி கூறப்படுகின்றது. பகீரதனை குறிப்பிடும் திருமுறைப் பாடல்கள் மிகவும் அரிது. அத்தகைய பாடல்களை நாம் இங்கே காண்போம். காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.69.6) பாரத நாட்டில் சிறந்து விளங்கிய பகீரதன் தனது முன்னோர்கள் நற்கதி அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் அரிய தவம் செய்து வானுலகில் இருந்த கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்த போது அந்த நதியினை சடையினில் ஏற்றும் பின்னர் சிறிது சிறிதாக வெளியேற்றியும் அருள் புரிந்த பரமன் உறையும் தலம் திருக்காளத்தி என்று கூறுகின்றார். வாரதர்=வார்+அதர், நெடிய வழிகளை உடைய; இரும்=பெரிய; சேவலின்=தங்கியிருக்கும் குடிசை; விசும்பு= ஆகாயம்

    பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு         
    ஆரருள் புரிந்து அலை கொள் கங்கை சடையேற்ற அரன் மலையை வினவில் 
    வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்து அவர் எரித்த விறகில்
    காரகில் இரும்புகை விசும்பு கமழ்கின்ற காளத்திமலையே

அநேக காலம் தவம் செய்த பகீரதன் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் திருச்சேறை பதிகத்தின் பாடலாகும் (4.73.4). முதலில் தேவலோகத்தில் இருந்த கங்கை நதியை பூமிக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரமனை நோக்கித் தவம் செய்த பகீரதன், பின்னர் பிரமனின் ஆலோசனைப் படி, கீழே இறங்கும் கங்கையைத் தாங்கவேண்டும் என்று சிவபிரானை நோக்கித் தவம் செய்தான், பின்னர் சிவபிரானின் தலையில் சிக்குண்ட கங்கை நீரை மெல்ல விடுவிக்கவேண்டும் என்று மறுபடியும் சிவபிரானை நோக்கித் தவம் செய்தான். சிவபிரானின் சடையில் இருந்த இறங்கிய கங்கை, தான் செல்லும் வழியில், ஜஹ்னு என்ற முனிவரின் ஆசிரமத்தை அழித்துவிட, கோபம் கொண்ட முனிவர் கங்கை நதியை, ஒரு சிறு துளியாக மாற்றி குடித்து விட்டார். பின்னர் அவரையும் வேண்டி கங்கை நதியை பகீரதன் வெளிக்கொணர்ந்து, பாதாள லோகம் வரை அழைத்துச் சென்று, தனது மூதாதையர்கள் சாம்பலை கங்கை நீரில் கரைத்து அவர்களுக்கு விமோசனம் அளித்தான். இந்த வரலாறு, வால்மீகி இராமயணத்தில் மிகவும் விவரமாக, விஸ்வாமித்திரர் இராமருக்கு கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு பலமுறை, தவம் செய்த பகீரதனை அநேக காலம் வஞ்சனை இல்லாத தவங்கள் செய்தான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தனது ஐந்து புலன்களையும் அடக்கி, ஐந்து தீக்களை வளர்த்து அதனிடையே நின்று பல ஆண்டுகள், வஞ்சனை ஏதும் இல்லாமல், தனது மூதாதையர்கள் கடைத்தேற வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் தவம் செய்த பகீரதனின் தவத்தினால் தேவலோகத்திலிருந்து கீழே கங்கை நதி பாய்ந்தது. ஆனால் தேவலோகத்தை விட்டுத் தன்னை பிரித்ததால் ஏற்பட்ட கோபத்துடன், பல கிளைகளாகப் பிரிந்த கங்கை மிகுந்த வேகத்துடன், பூமியையே கரைத்து, பாதாள லோகத்திற்கு அடித்துச் செல்வது போல் கீழே இறங்கியது. இவ்வாறு மிகுந்த வேகத்துடன் இறங்கிய கங்கை நதியை தனது சடையில் ஏற்ற சிவபெருமான், கங்கை நதி சீராக மண்ணுலகில் பாயுமாறு செய்தார். இவ்வாறு எவர்க்கும் துன்பம் ஏற்படாத வண்ணம் கங்கை நதியை வழி நடத்தியவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

    அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம்
    வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
    வெஞ்சின முகங்களாகி விசையொடு  பாயும் கங்கை
    செஞ்சடை ஏற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (4.65.7) அப்பர் பிரான் பகீரதனின் தவம் பற்றி குறிப்பிடுகின்றார். மை=குற்றம்; மையறு=குற்றமற்ற; குற்றமற்ற தவங்கள் செய்தவன் பகீரதன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டவர்களாக, மிகுந்த வேகத்துடன் பாயும் கங்கை நதியின் வேகத்தை அடக்கும் ஆற்றல் பெருமானுக்கு உண்டு என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக, தேவர்கள் இருந்தமை இங்கே ஐயமில் அமரர் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. கங்கை நதியினை தாங்கும் ஆற்றல் பெருமான் ஒருவருக்கு மட்டுமே உண்டு என்று பகீரதனுக்கு உணர்த்தியது பிரமன் தானே. நெளிய=பூமி புரட்டி செல்லப்படும் வண்ணம் வேகமாக பாய்ந்த கங்கை நதி.

    மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
    ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகமதாகி
    வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை என்னும்
    தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே

மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதி பெருமானின் சடையில் ஒரு பனித்துளி போன்று காணப்பட்டது என்று வீழிமிழலை பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.50.10) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

   அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை
           எடுத்த அரக்கன் தோள்கள்
   இறுத்தானை எழுநரம்பின் இசை கேட்டானை இந்துவினைத்
           தேய்த்தானை இரவி தன் பல்
   பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப் பரந்து இழியும்
            புனல் கங்கை பனி  போல் ஆங்குச் 
   செறித்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார்
            தீநெறிக்கே சேர்கின்றாரே

பெருமானே, பண்டைய நாளில் உன்னைப் பணிந்து வணங்கிய பார்த்தன் பகீரதன் பல பத்தர்கள் மற்றும் சித்தர்களுக்கு அருளிய பெருமானே, நீ எனக்கும் அருள் புரிய வேண்டும் என்று சுந்தரர் கூறும் பாடல் வீழிமிழலை பதிகத்தின் பாடலாகும் (7.88.7). வான்=உயர்வு

    பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
    திணிந்த மாடம் தோறும் செல்வம் மல்கு திருமிழலைத்
    தணிந்த அந்தணர் சந்தி நாள்தொறும்  அந்தி வான் இடு பூச் சிறப்பவை
    அணிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளிதிரே

திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.55.7) சுந்தரரும், பகீரதனின்  வேண்டுகோளுக்கு இணங்கி கங்கையைத் தனது சடையில் ஏற்ற பெருமான் என்று கூறுகின்றார்

    போர்த்த நீள்செவியாளர் அந்தணர்க்குப் பொழில் கொள்
        ஆல் நிழல் கீழ் அறம்  புரிந்து     
    பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய்
        பண்டு பகீரதன் வேண்ட
    ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின்
        சடை மிசைக் கரந்த
    தீர்த்தனே நின் தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில்
        திருப்புன்கூர் உளானே 

மூன்று விதமான எரி வளர்த்த அந்தணர்கள் வேள்விகள் செய்து ஆகுதி வழங்கிய இடம் என்று இந்த தலத்தினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஆகவனீயம் என்பது தேவர்களுக்கு உரியது என்றும், தக்ஷிணாக்நீயம் என்பது முன்னோர்களுக்கு உரியது என்றும் கார்கபத்யம் என்பது இல்லறத்தோர்களுக்கு உரியது என்றும் கூறுவார்கள். உலகம் செழித்து வாழ வேள்வி செய்பவர்கள் என்பதால் அந்தணர்களை ஓங்கிய மறையோர் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.         

பொழிப்புரை:

சிறந்த குணமுடையவனும் கடும் தவங்கள் செய்தவனும் ஆகிய பகீரதனுக்கு அருளும் முகமாக, தனது படர்ந்த சடையில் மறைத்து வைக்கப் பட்டிருந்த கங்கை நதியினை தாங்குதளைத் தவிர்த்து, சிறிது சிறிதாக விடுவித்து சடையிலிருந்து கீழே விழுந்து நிலத்தினில் பாயும் வண்ணம் செய்தவனும், அனைவர்க்கும் மேலோனும் ஆகிய பெருமான் உறையும் இடம் யாது என்று நீங்கள் வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக; மூன்று விதமான எரி வளர்த்து, அருகில் அமர்ந்து, தங்களது அழகிய கைகளால் நெய் சமித்து அன்னம் போன்றவற்றை ஆகுதியாக அளித்து வேள்வி வளர்த்து ஓங்கிய சிறப்பினை உடையவர்களாய் திகழ்ந்த அந்தணர்கள் உடனிருந்து வாழ்கின்ற ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com