107. கோழை மிடறாக கவி- பாடல் 2

107. கோழை மிடறாக கவி- பாடல் 2

மேரு மலையினை

பாடல் 2:

    அண்டம் உறு மேரு வரை அங்கி கணை நாண் அரவதாக எழிலார்
    விண்டவர் தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடமாம்
    புண்டரிக மாமலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடமெலாம்
    வண்டின் இசை பாட அழகார் குயில் மிழற்று பொழில் வைகாவிலே

விளக்கம்:

இந்த பாடலில் முப்புரம் எரித்த விகிர்தன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். விகிர்தன் என்றால் ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன் என்று பொருள். வானில் எப்போதும் வேறுவேறு திசைகளில் பறந்து கொண்டு இருக்கும், இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர் கொட்டினால் வரும் தருணத்தில் மட்டுமே ஒரே அம்பினால் அழிக்க முடியும் என்ற வரத்தின் விளைவால், ஒன்றுக்கொன்று துணையாக திகழும் இந்த மதில்களை எவராலும் அழிக்க முடியவில்லை. பெருமான் மட்டும் இந்த மதில்களை எரித்த வல்லமை உடையவராய் விளங்கியதால் பெருமானை முப்பரம் எரித்த விகிர்தன் என்று சம்பந்தர் இங்கே அழைக்கின்றார். தடம்=பொய்கை, குளம்; புண்டரிக மாமலர்=தாமரை; எழிலார்= அழகு மிகுந்த; பொதுவாக கோட்டைகள் கல் மண் ஆகியவை கொண்டு செய்யப்படும். ஆனால் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளோ தங்கம் வெள்ளி இரும்பு கொண்டு செய்யப்பட்டவை என்பதால் எழிலார் முப்புரம் என்று குறிப்பிடுகின்றார். விண்டவர்=சிவநெறியை விட்டு பிரிந்து சென்றவர்; அண்டம்= ஆகாயம்   

பொழிப்புரை:

ஆகாயம் வரை உயர்ந்து கிடந்த மேரு மலையினை வில்லாகவும், தீக்கடவுளை அம்பின் முனையாகவும், வாசுகி பாம்பினை வில்லின் நாணாகவும் கொண்டு, சிவநெறியினை விட்டு பிரிந்து சென்ற முப்புரத்து அரக்கர்களின் அழகுடன் விளங்கிய மூன்று கோட்டைகளையும் எரித்தவனும். ஏனைய தேவர்களிளிருந்தும் மாறுபட்டவனும் ஆகிய பெருமான் விரும்பி அமர்கின்ற இடம் திருவைகா தலமாகும். சிறந்த தாமரை மலர்களில் புகுந்து வண்டுகள் தேனுண்டு விளையாடிய மகிழ்ச்சியில் அருகில் உள்ள வயல்களிலும் அதனைச் சுற்றியுள்ள குளங்களிலும் வண்டுகள் இசை பாடி திரிய, அந்த இன்னிசைக்கு ஏற்றவாறு குயில்கள் கூவுகின்ற சோலைகளை உடைய தலம் திருவைகா ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com