107. கோழை மிடறாக கவி- பாடல் 4

வணங்க வேண்டும்
107. கோழை மிடறாக கவி- பாடல் 4


பாடல் 4:

    இன்னவுரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்
    தன்ன உருவாம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம்  
    முன்னை வினை போய் வகையினால் முழுது
        உணர்ந்து முயல்கின்ற முனிவர் 
    மன்ன இருபோதும் மருவித் தொழுது சேரும் வயல் வைகாவிலே

விளக்கம்:

பெருமானின் தன்மை இன்னது என்று அறிய முடியாத நிலையில் உள்ளது என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. சம்பந்தரும் இந்த பாடலில் இன்னவுரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது என்று குறிப்பிடுகின்றார். இதே கருத்தினை வெளிப்படுத்தும் திருமுறை பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். கயிலாய மலையின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் முதல் (6.57.1) பாடலில் அப்பர் பிரான் பரிசை அறியாமை நின்றாய் போற்றி என்று கூறுகின்றார். பரிசு=தன்மை; பலவகை தன்மைகளாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு நாம் உணர்ந்த பல தன்மைகளை தாண்டியும் வேறோர் தன்மை எடுக்கும் திறமை உடையவன் இறைவன் என்பதால், பரிசு அறியாமை நின்றாய் என்று கூறுகின்றார். 

    பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை
        நின்றாய் போற்றி
    சூட்டான திங்கள் முடியாய் போற்றி தூமாலை மத்தம்
        அணிந்தாய் போற்றி
    ஆட்டானது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார்
        புரம் எரிய நக்காய் போற்றி
    காட்டானை மெய்த்தோல் உரித்தாய் போற்றி கயிலை மலையானே
        போற்றி போற்றி

பொருங்கை மதகரி என்று தொடங்கும் திருவாரூர் பதிகத்தின் (6.33) இரண்டாவது பாடலில் அற்புதன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அற்புதன் என்ற சொல்லுக்கு இன்ன தன்மையன் என்று அறிய முடியாதவன் என்று சிவக்கவிமணி திரு சி.கே. சுப்பிரமணியம் பெரிய புராண விளக்கம் நூலில் கூறுகின்றார். அற்புதன் காண்க அநேகன் காண்க என்பது திருவாசகம் திருவண்டப்பகுதியின் ஒரு வாக்கியம்.

    கற்பகமும் இரு சுடரும் ஆயினானைக் காளத்தி கயிலாய
        மலையுளானை
    விற்பயிலும் மதன் அழிய விழித்தான் தன்னை விசயனுக்கு
       வேடுவனாய் நின்றான் தன்னைப்
    பொற்பமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்
        பெருமானைப் பொருந்தார் சிந்தை 
    அற்புதனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்து அடியேன்
        அருவினை நோய்  அறுத்தவாறே

கோகர்ணம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.49.8) அப்பர் பிரான் இன்னவுரு என்று அறிவொண்ணாதான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.

    பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேரருளன் காண்
         பிறப்பு ஒன்று  இல்லாதான் காண்
    முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூவெயிலும் செற்று
         உகந்த முதல்வன் தான் காண்
    இன்னவுருவு என்று அறிவொண்ணாதான் தான் காண் ஏழ்கடலும்
         ஏழ் உலகும்  ஆயினான் காண்
    மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மாகடல் சூழ்
         கோகரணம் மன்னினானே 

திருப்பழனம் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தை (5.92) கண்டு கொள்ள அரியான் என்று இறைவனை குறிப்பிட்டு அப்பர் பிரான் தொடங்குகின்றார். கேட்டிரேல்=கேட்பீராகில்: சூழலே=சூழ வேண்டாம். கனிவித்து=அன்பு பாராட்டி கனியச் செய்து, பக்குவப்படுத்தி: பாணி=கை: துன்னுதல்=சூழுதல்: பாழிமை=அடிமைத் திறத்தின் வலிமை. இந்த பாடல் இயமனின் தூதுவர்களுக்கு எச்சரிக்கை விடும் பதிகத்தின் பாடல். பெருமானின் தொண்டர்களை நீர் சென்று சூழாதீர்கள்; அவர்களது உயிரினைப் பறித்து நரகத்துக்கு கொண்டு போகும் நோக்கத்துடன் சென்று சூழ்ந்தால் உங்களுக்கு தீங்கு விளையும் என்று இந்த பதிகத்து பாடல்களில் அப்பர் பிரான் எச்சரிக்கை விடுகின்றார்.  

    கண்டு கொள்ள அரியானைக் கனிவித்துப்
    பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்
    கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்
    கொண்ட தொண்டரை துன்னிலும் சூழலே  

சிவபெருமான் நாம் கண்டு கொள்வதற்கு அரியவன் என்பதை உணர்த்தும் வண்ணம், சுந்தரர் திருவாரூர் பதிகம் ஒன்றின் (7.59) முதல் பாடலில், இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். 

    பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
        போகமும் திருவும் புணர்ப்பானைப்
    பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் பிழை
        எலாம் தவிரப் பணிப்பானை
    இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மானை
         எளிவந்த பிரானை
    அன்னம் வைகும் வயல் பழனத்தணி ஆரூரானை
         மறக்கலுமாமே

சுந்தரர் வேண்டியபோதெல்லாம் அவருக்கு, சிவபெருமான் பொன்னும் பொருளும் வழங்கியதை நாம் அனைவரும் அறிவோம். பொன்னையும் பொருளையும் கொடுத்த இறைவன், அவற்றை அனுபவிக்கும் பாக்கியத்தையும் அளித்ததாக சுந்தரர் இங்கே கூறுகின்றார். பலவிதமான செல்வங்கள் இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாமல் பலர்  இருப்பதை நாம் உலகினில் காண்கிறோம். நமக்கு உள்ள செல்வத்தை அனுபவிக்கும் வாய்ப்பும், இறைவனின் அருள் இருந்தால் தான் நிறைவேறும். தனக்கு அத்தகைய அருள் இருந்ததாக சுந்தரர் இந்த பாடலில், போகமும் புணர்ப்பானை என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திரு என்ற சொல், செல்வத்துள் உயர்ந்த செல்வமாகிய வீடுபேற்றினை குறிப்பிடுகின்றது. தான் சுந்தரனாக எடுத்த இந்த பிறவியின் முடிவில் வீடுபேறு, தனக்கு அருளப்படும் என்பதை உணர்ந்த சுந்தரர், திருவும் புணர்ப்பானை என்று எதிர்காலத்தை குறிப்பிட்டு உணர்த்துவதை நாம் இந்த பாடலில் காணலாம். பழைய வினைகளின் பயனாக நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை நுகரும் போது, மேலும் பல தவறுகளைச் செய்து வினைகளைப் பெருக்கிக் கொள்வது மனித இயல்பு. அவ்வாறு தான் பிழை செய்யாத வண்ணம் காப்பவன் இறைவன் என்றும் இங்கே சுந்தரர் கூறுகின்றார். இன்ன தன்மையன் என்று அறிவதற்கு அரியவன் என்றாலும் அடியார்களுக்கு எளியவனாக இருப்பது பெருமானின் சிறப்புத் தன்மை. எனவே எளிவந்த பிரான் என்று கூறி, பெருமானின் தன்மையினை நாம் உணரமுடியாமல் போனாலும், அவனது அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதை உணர்த்தி சுந்தரர் ஊக்குவிப்பதையும் நாம் உணரலாம். மணிவாசகரும் சிவபுராணத்தில், சொல்லற்கரியான் என்று சிவபெருமானை குறிப்பிட்டு, சொல்லற்கரியானது திருநாமத்தைச் சொல்லி, அவனது திருவடிகளை வணங்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார். இன்ன தன்மையன் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவன் சிவபிரான் என்று கூறுவதால் அணுக முடியாதவன் என்று நினைத்து நாம் ஒதுங்கிவிடக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் சிவபிரான் மிகவும் எளிமையாக அடியவர்களுக்கு உள்ளான் என்று கூறும் பாங்கு ரசிக்கத்தக்கது.

இறைவனின் திருவுருவக் காட்சியினைக் காண்பதற்கே அவனருள் வேண்டும். அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடலை நாம் இங்கே காணலாம் (6.97.10)

    மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான்
       வார்சடையான் என்னின் அல்லால்
    ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன்
       ஓர் உவமனில்லி
    அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே
       கண்ணாகக் காணின் அல்லால்
    இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்
       என்றெழுதிக் காட்ட ஒணாதே 

பல வேறு வடிவங்களில் அடியார்களுக்கு காட்சி அளிப்பவனும், எங்கும் நிறைந்தும் காணப்படும் இறைவனை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் அடக்க முடியுமா, முடியாது அல்லவா. எந்த வடிவத்தில் அவனை நினைத்தாலும் அதனையும் கடந்து வேறோர் உருவம் எடுக்கும் சக்தி படைத்த அவனுக்கு எந்த உருவத்தை நாம் கற்பிப்பது. அதனால் தான் மணிவாசகர் தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில், ஓருருவம் ஒருநாமம் இல்லாதவன் என்று கூறுகின்றார்.

    திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை
    உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
    ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
    திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

இன்ன தன்மையன் என்று கூறவொண்ணா தன்மையன் என்பதால் அவனது குணத்தினை அறிந்தவர்கள் எவரும் இல்லை என்று அப்பர் பிரான் கூறும் பாடல் பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பாடலாகும் (4.88.2). மறி=மான் கன்று; பொறி=புள்ளிகள்; அரவம்=பாம்பு; குறி=அடையாளம்; மாமலை=சிறந்த இமயமலை;

    மறி உடையான் மழுவாளினன் மாமலை மங்கை ஓர்பால்
    குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன்
    பொறியுடை வாளரவத்தவன் பூந்துருத்தி உறையும் 
    அறிவுடை ஆதி புராணனை  நாம் அடி போற்றுவதே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.90.5). இடபத்தை வாகனமாகக் கொண்டு பல இடங்களிலும் திரியும் பெருமானின் பெயர்களையோ குணங்களையோ, வேடத்தின் அடையாளங்களையோ எவராலும் முழுமையாக அறிய முடியாது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

    ஆன் அணைந்து ஏறும் குறிகுணம் ஆர் அறிவார் கை 
    மான் அணைந்து ஆடு மதியும் புனலும் சடை முடியன்
    தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திருவேதிகுடி
    ஆன் அணைந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்து பாடல் ஒன்றினில் (4.27.8) அப்பர் பிரான், காட்சிக்கு அரியவராக விளங்கும் பெருமான் இன்ன தன்மையன் இன்ன உருவினன் என்று சுட்டிக் காட்ட இயலாத வண்ணம் இருப்பதால் கருத்தில் வாரார்  என்று கூறுகின்றார், 

    காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தலாகார்
    ஏணிலார் இறப்பும் இல்லார் பிறப்பிலார் துறக்கலாகார்
    நாணிலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்
    ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகை வீரட்டனாரே

இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான், நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது மனதினில் உருவகித்துக் கொண்டு வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் வரையறைக்குள்ளே எப்படி நாம் இறைவனின் தோற்றத்தையோ குணத்தையோ அடக்க முடியும். அதனால் தான் அவனது அடையாளத்தையும் (குறி) குணத்தையும் யார் அறிய முடியும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.77.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்
    தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்
    பூவணக் கிழவனாரைக் புலியுரி அரையனாரை
    ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே

இன்ன தன்மையன் என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இறைவனை நாம் உணர்வினால் அவன் இருப்பதை புரிந்து கொண்டு அவனை வழிபட்டு வணங்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவனது தன்மை யாது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது தவறு என்பதை உணர்த்தும் திருவாசகப் பாடலை இங்கே நாம் சிந்திப்பது பொருத்தமாகும். இந்த பாடலில் இறைவனை உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் கூறுகின்றார். எப்படி உண்மையாக இருக்கும் பொருள் இல்லாத பொருளாக மாற முடியும். நமது உணர்வினால் உணரப் படுபவன் இறைவன். எனவே அவன் உள்ளதை, அவன் இருக்கும் உண்மையை நாம் யாவரும் உணர்வால் அறிந்து உணர்கின்றோம். ஆனால் அதே இறைவனை நமது அறிவின் துணையால் இன்ன தன்மையன் என்று ஆராயத் தொடங்கினால் அவனை நாம் உணர முடியுமா. முடியாது என்பதே விடை. எனவே தான் அறிவினால் கண்டறியாத பொருள் என்று உணர்த்தும் பொருட்டு இன்மையுமாய் உள்ளவன் என்று கூறுகின்றார். உணர்வால் உணர முடியும் இறைவனை அறிவினால் உணர முடியாது என்பதை சுட்டிக் காட்டவே உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். வளி=காற்று; ஊன்=உடல்;

    வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
    ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
    கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
    வானாகி நின்றாய் என் சொல்லி வாழ்த்துவனே

அறிவதேல் அரிது=இறைவனின் அருளும் ஞானமும் இல்லையேல் அறிய முடியாதது; மிகுத்த தவன்=மிகுந்த தவத்தினை உடையவன்; நீதியொடு=அருளோடு; நீதி பலவும்= பலவாகிய புண்ணியங்களும்; வகையினால்=முறைமைப்படி முழுதுணர்ந்து; மன்ன=நிலை பெற்று; மருவி=அடைந்து; 

பொழிப்புரை:

இன்ன உருவத்தை உடையவன் இன்ன நிறத்தை உடையவன் என்று பெருமானின் திறத்தினை, நமது சிற்றறிவின் துணை கொண்டு அறிவது மிகவும் அரிதான செயல். அவனது கருணையும் அவனது அருளும் இருந்தால் தான் அவனது தன்மையை நாம் உணர முடியும். புண்ணியங்கள் அனைத்தும் தனது உருவம் என்று சொல்லும் வண்ணம் சிறந்த தவக்கோலத்தை உடையவன் பெருமான்; அவன் அடியார்களுக்கு அருளும் பொருட்டு அமர்ந்து உறையும் இடம் திருவைகா. பண்டைய வினைகள் அனைத்தையும் கழித்து ஒழிக்கும் வகையினை அறிந்து முற்றிலும் உணர்ந்து கொண்டு வினைகளை கழிக்கும் வழியினில் ஈடுபட்டு தவநிலை கூடுவதற்கு  முயற்சி செய்யும் முனிவர்கள் காலை மாலை என்று இரண்டு பொழுதிலும் நிலையாக தொழுது போற்றும் வண்ணம் சென்று சேரும் தலம் திருவைகா ஆகும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com