107. கோழை மிடறாக கவி- பாடல் 7

சிவபெருமான் விரும்பும்
107. கோழை மிடறாக கவி- பாடல் 7

பாடல் 7:

    நாளும் மிகு பாடலொடு ஞானமிகு நல்ல மலர் வல்ல வகையால்    
    தோளினொடு கை குளிரவே தொழும் அவர்க்கு அருள் செய் சோதி இடமாம்
    நீள வளர் சோலை தொறு நாளி பல துன்று கனி நின்றது உதிர
    வாளை குதி கொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே

விளக்கம்:

நாளி=தென்னை; வாளை=ஒரு வகை மீன்கள்; ஞானமிகு=சிவஞானம் மிகுந்து; தோளினொடு கை குளிரவே=பெருமானை வழிபட்ட மகிழ்ச்சியினால் மனம் குளிர்ந்து போன்று உடல் உறுப்புகளும் குளிர்ந்த நிலை; மிகு பாடல்=மிகுந்த பாடல்; ஞானமிகு நல்ல மலர்= சிவபெருமான் விரும்பும் எட்டு அக மலர்கள், கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கம், பொறுமை, தவம் வாய்மை அன்பு அறிவு ஆகிய சிறந்த குணங்கள்; துன்று கனி= அடர்த்தியான கனிகள்; 

தோளைக் குளிரத் தொழும் அடியார் என்று சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு அப்பர் பிரான் தோளைக் குளிரே தொழுவேன் என்று கூறும் பாடல்களை நமக்கு நினைவு படுத்துகின்றது. திருவையாறு பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.03.04) இளம் மலர்கள் தூவி தோளைக் குளிர பெருமானைத் தொழுவேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெய்வளை= நெருக்கமாக கைகளில் வளையல்கள் அணிந்தவள், இங்கே உமை அம்மையை குறிக்கின்றது. துறை இளம் பன்மலர்=நீர்நிலைகளை அடுத்து உள்ள இடங்களில் வளரும் மலர்கள்; குளிர்தல்=மகிழ்தல். ஆலும்=ஒலிக்கும்;

    பிறை இளம் கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடித்
    துறை இளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
    அறை இளம் பூங்குயில் ஆலும் ஐயாறு அடைகின்ற போது
    சிறை இளம் பேடையொடாடிச் சேவல் வருவன கண்டேன்
    கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

உள்ளம் மகிழ்வுடன் இருந்தால் தோள்கள் விம்முவது இயற்கை. தனது உள்ளம் மகிழ்ந்து இருந்த காரணத்தால், தனது தோள்களும் மகிழ்ந்து இருந்த நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபிரானின் புகழினை மகிழ்ந்து பாடும் பெண்கள், தங்களது  உள்ளங்கள் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தமையால் அவர்களது தோள்களும் விம்மிப் புடைத்து இருந்த நிலையினை மற்றொரு பெண்ணுக்குச் சுட்டிக்காட்டி பாடும் பாடல்களை தோணோக்கம் என்ற தலைப்பின் கீழ் மணிவாசகர் திருவாசகத்தில் அருளி இருப்பது இங்கே நினைவு கூறத் தக்கது. கல் போன்ற தனது மனத்தினை உருக்கிய சிவபெருமான், தனது நெஞ்சினுள்ளே புகுந்து கொண்டமையால் உலகம் தன்னை அறிந்து கொண்டதாகக் கூறும் பெண்மணி தனது தோள் விம்மிப் புடைத்துள்ள நிலையினைக் காணுமாறு தனது தோழியிடம் கூறும் பாட்டு இது.

    கற்போலும் நெஞ்சம் கசிந்து உருகக் கருணையினால்
    நிற்பானைப் போல் என் நெஞ்சினுள்ளே புகுந்து அருளி
    நற்பால் படுத்து என்னை நாடறியத் தான் இங்ஙன்
    சொற்பாலது ஆனவா தோணோக்கம் ஆடாமோ   

பாவநாசப் பதிகத்தின் பாடல்களில் (4.15.5 & 4.15.9) இறைவனைத் தனது தோள்கள் குளிரத் தொழுததாக அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். குருமணி=நல்ல நிறமுடைய மாணிக்கம்: குடமூக்கு=கும்பகோணத்தில் உள்ள கும்பேசர் கோயில். உள்ளம் மகிழ்ச்சியுடன் இருந்ததால், உடலும் குளிர்ந்ததாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். விடமுணி= விடத்தை உண்டவன்;

    கோலக்காவில் குருமணியைக் குடமூக்கு உறையும் விடமுணியை
    ஆலங்காட்டில் அந்தேனை அமரர் சென்னியாய் மலரைப்
    பாலில் திகழும் பைங்கனியைப் பராய்த்துறையெம் பசும்பொன்னைச்
    சூலத்தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே

உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியாக இருந்ததால் உடலும் குளிர்ந்து காணப்பட்டது என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருவாசக பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. கண்ணப்ப நாயனார் செய்த பூஜைகளை மிகவும் விருப்பமுடன் ஏற்றுக்கொண்ட சிவபெருமானின் உடல் குளிர்ந்ததாக மணிவாசகர் தோள்நோக்கம் பதிகத்தின் மூன்றாவது பாடலில் கூறுகின்றார். சேடு=பெருமை; பொருள்=ஆகமப் பொருள். ஆகம விதிகளின் படி செய்யப்படுகின்ற பூசையினை மகிழ்ந்து ஏற்றுக் கொள்வது போல் கண்ணப்பர் செய்த பூஜையை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார் என்று இங்கே கூறுகின்றார். 

    பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச்
    செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
    விருப்புற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து அங்கு
    அருள் பெற்று நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ 

பாவநாசப் பதிகத்தின் ஒன்பதாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அப்பர் பிரான் சிவபிரானை, ஆலவாயெம் அருமணி என்று குறிப்பிடுகின்றார். அபிடேக பாண்டியன் என்ற மன்னனுக்கு மணிமுடிகள் செய்யும் பொருட்டு, விலை உயர்ந்த மாணிக்கக் கற்களை அளிப்பதற்காக, மாணிக்க வணிகர் போல் வேடம் தரித்து வந்த ஆலவாய் அண்ணல் புரிந்த திருவிளையாடல், திருவிளையாடல் புராணத்தில் மிகவும் விவரமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வண்ணம், ஆலவாய் மாணிக்கம் என்று அப்பர் பிரான் கூறுவதாக சில சான்றோர்கள் விளக்கம் அளித்துள்ளனர். நிமிர்ந்த தோள்கள் என்று பெருமானின் தோள்வலிமை இங்கே கூறப்படுகின்றது. தோற்றம்=பிறவி

    சோற்றுத்துறையெம் சோதியைத் துருத்தி மேய தூமணியை
    ஆற்றில் பழனத்தம்மானை ஆலவாயெம் அருமணியை
    நீற்றில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்தெம் நிலாச்சுடரைத்
    தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே

பொழிப்புரை:

தினமும் மிகுந்த பாடல்கள் கொண்டு பெருமானின் புகழினைப் பாடியும், சிவஞானம் மிகுந்தவர்களாய் பெருமானுக்கு உகந்த எட்டு அக மலர்களாகிய சிறந்த குணங்களுடன் (கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கம், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு) பெருமானை வழிபட்டு, தாங்கள் செய்யும் வழிபாட்டினால் உள்ளமும் உடலும் குளிர்ந்து தொழுகின்ற அடியார்களுக்கு அருள் புரியும் சோதி உறைகின்ற இடம் திருவைகா தலமாகும். நீண்டு வளர்ந்த சோலைகளில் உள்ள தென்னை மரங்களின் அடர்ந்த குலைகளிலிருந்து கீழே உதிரும் முதிர்ந்த காய்கள் எழுப்பும் ஓசை கேட்டு நீர் நிலைகளில் வாளை மீன்கள் துள்ளி குதித்து அருகிலுள்ள மலர் மொட்டுகளின் மீது பாய்வதால், தேன் நிறைந்த அந்த மொட்டுகள் விரிந்து மலர, தேன் மணமும் மலரின் நறுமணமும் கலந்து பரவும் வயல்களைக் கொண்ட தலம் திருவைகா ஆகும்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com