108. மறம் பய மலைந்தவர்- பாடல் 7

மனதினை கட்டுப்படுத்தி
108. மறம் பய மலைந்தவர்- பாடல் 7

பாடல் 7:


    
மறத்துறை மறுத்தவர் தவத்து அடியர் உள்ளம்
    அறத்துறை ஒறுத்து உனது அருட்கிழமை பெற்றோர்
    திறத்துள திறத்தினை மதித்து அகல நின்றும்
    புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்

விளக்கம்:


மறத்துறை=பாவம் விளைவிக்கும் செயல்கள்; மறுக்கும்=விரும்பாது ஒதுக்கும்; ஒறுத்து= கட்டுப்படுத்தி; அறத்துறை ஒறுத்து=புலன்களின் வழியில் செல்லாமல் அறத்துறையில் செல்லும் வண்ணம் மனதினை கட்டுப்படுத்தி; கிழமை=உரிமை; அருட்கிழமை=அருள்+ கிழமை=சிவபிரானது அருளுக்கு பாத்திரமாகும் தன்மை; அகல நின்றும்=உயிர்களிடமிருந்து பிரிந்து வேறாக நிற்கும் தன்மை; 

அறத்துறை ஒறுத்து என்ற தொடருக்கு, இன்பத்தையும் வெறுத்து என்று சிலர் பொருள் கூறுகின்றனர். இன்பம் வரினும் துன்பம் வரினும் ஒன்றாக பாவித்து, துன்பம் வந்த போது கலங்காமலும் இன்பம் வந்த போது மகிழ்ச்சி அடையாமலும் அனைத்தும் இறைவன் செயல் என்று எதிர்கொள்ளும் தன்மையுடன் செயல்படும் உயிர்கள் இருவினையொப்பு  என்ற நிலையை அடைகின்றன. தாங்கள் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களால் மனம் ஏதும் சலனம் அடையாமல் இருப்பதால், அவர்கள் மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வதில்லை. மேலும் பழைய வினைகளை எதிர்கொள்ளும் போது அவர்களின் சிந்தனையும் செயலும் மாற்றம் ஏதும் அடையாமல் இருப்பதால், வினைகள் செயலற்றுப் போவதால், இறைவன் பழைய வினைகள் அனைத்தையும் ஒருங்கே நீக்கி விடுகின்றான். இத்தகைய நிலை அடைவதற்கு தகுதி பெற, இன்பத்தையும் வெறுக்கும் தன்மை பெறவேண்டும். அத்தகைய நிலையினை தவம் புரிபவர்கள் அடைந்து, பெருமானின் அருளால் வீடுபேறு பெறுவதற்கு தகுதி பெறுகின்றனர் என்று விளக்கம் அளிக்கின்றனர். இத்தகைய விளக்கமும் பொருத்தமானதே. இத்தகைய நிலைக்கு அப்பர் பிரானின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். சமணர்களின் சூழ்ச்சியால் பல வகையான துன்பங்கள் அடைந்த போதும் ஏதும் கலக்கம் அடையாமல், எப்பரிசாயினும் ஏத்துவன் எம் இறைவனை, என்ற கொள்கையுடன் எதிர்கொண்ட அவர். திருப்புகலூரில் மாணிக்கக் கற்கள் மண்ணுடன் கலந்து தோன்றிய போதும், அவைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் மண்ணுடன் வாரியெடுத்து அப்புறப் படுத்தியவர் அப்பர் பிரான். இத்தகைய அடியார்களையே சேக்கிழார் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் என்று கூறுகின்றார்.        

பொழிப்புரை:

பாவம் விளைவிக்கும் தீய செயல்களை முற்றிலும் விலக்கி தவத்தினை புரியும் அடியார்கள் தங்களது மனம் ஐந்து புலன்களின் வழியில் செல்லாமல் அடக்கி அறவழியில் நிலைத்து நிற்குமாறு கட்டுப்படுத்துகின்றனர். அத்தகைய அடியார்கள் பெருமானது அருளினைப் பெரும் தகுதி உடையவர்களாக விளங்குகின்றனர். அவர்களது தன்மையை மதித்து அவர்களது மனதினில் குடிகொள்ளும் பெருமான், அவர்களிடமிருந்து அகன்று வேறாகவும் இருக்கும் தன்மை உடையவன் ஆவான். இத்தகைய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்து உறைகின்றான்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com