108. மறம் பய மலைந்தவர்- பாடல் 11

பெருமானைப் புகழ்ந்து
108. மறம் பய மலைந்தவர்- பாடல் 11


பாடல் 11:

    கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தம்
    தரும் கழுமலத்து இறை தமிழ்க் கிழமை ஞானன்
    சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்
    பெரும் பிணி மருங்கு உற ஒருங்குவர் பிறப்பே 

விளக்கம்:

கருங்கழி=கரிய உப்பங்கழிகள்; பொருந்திரை=பெரிய அலைகள்; குலவு=விளங்கும்; மருங்கு அற=இருந்த இடம் தெரியாது முற்றும் ஒழிய; பிறப்பு ஒருங்குவர்=பிறப்பு ஒழியப் பெறுவார்கள். கிழமை=உரிமை; 

பொழிப்புரை:

பெரிய அலைகளால் அடித்துக் கொண்டு வரப்படும் முத்துக்கள், கரிய உப்பங்கழிகளில் பொருத்தி விளங்கும் தன்மையை உடைய கடற்கரை உடைய கழுமலம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் தலைவனும், தனது ஞானத்தினால் தமிழுக்கு உரிமை கொண்டாடும் தகுதி படைத்தவனும் ஆகிய சம்பந்தன், வண்டுகள் இடைவிடாது ஒலி செய்யும் புறம்பயம் தலத்தில் உறையும் பெருமானைப் புகழ்ந்து பாடிய தமிழ்ப் பாடல்களில் வல்லவர்களின் பிறவிப் பிணி இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் ஒழிய, அவர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவார்கள்.  

முடிவுரை:

பொருளாழம் மிகுந்த இந்த பதிகம் பல அரிய கருத்துக்களை மிகவும் எளிய முறையில் உணர்த்துகின்றது. முதல் பாடலில் அம்மையும் அன்னையும் வேறு வேறு அல்ல இருவரும் ஒருவரே என்றும், இரண்டாவது பாடலில் விரித்த சடையினில் கங்கை நதியினை அடக்கிய வல்லமை படைத்தவன் என்றும், மூன்றாவது பாடலில் உலகத்தை தோற்றுவித்தும் ஒடுக்கியும் மீண்டும் தோற்றுவித்து திருவிளையாடல் புரிபவன் பெருமான் என்றும், நான்காவது பாடலில் அடியார்களுக்கு நீறணிந்த தனது திருமேனியை காட்டி அருள் புரிபவன் என்றும், பிறப்பு மற்றும் இறப்பினைக் கடந்த பெருமான் என்று ஐந்தாவது பாடலிலும், தன்னை நினைக்கும் அடியார்களின் மனதினில் உறைபவன் பெருமான் என்று ஆறாவது பாடலிலும், அடியார்களுக்கு அவர்களின் தன்மைக்கு ஏற்ப அருள் புரியும் பெருமான் என்று ஏழாவது பாடலிலும், ஐந்து புலன்களை வென்றவன் என்று எட்டாவது பாடலிலும், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவருடன் ஒன்றி நின்று அவைகள் தங்களது செயல்களைச் செய்வதற்கு மூல காரணனாக இருப்பவன் என்று ஒன்பதாவது பாடலிலும், முக்திநெறிக்கு வழி காட்டாத நூல்கள் தாழும் வண்ணம் செய்பவன் பெருமான் என்று பத்தாவது பாடலிலும் கூறிய சம்பந்தர், இந்த பாடலை வல்லமையுடன் ஓதும் அடியார்கள் முக்தி நிலை அடைவார்கள் என்று கூறுகின்றார். நாமும் இந்த பதிகத்தின் பொருளினை நன்கு உணர்ந்து அவற்றினை மனதினில் கொண்டு மனமொன்றி. இந்தளம் பண் பொருந்தும் வண்ணம் இந்த பதிகத்தை ஓதி, முக்தி பெறுவதற்கு தகுதி உடையவர்களாக மாறுவோமாக.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com