தமிழ் சந்ததிகளுக்காக ஆஸ்திரேலியாவில் அவ்வை தமிழ்ப்பள்ளி

ஆஸ்த்ரேலியா நாட்டில் மெல்பெர்ன் நகரில் வாழும் தமிழர்களின் பிள்ளைகள் மற்றும் எதிர்காலத் தமிழ்ச் சந்ததிகளுக்காக, அவ்வை தமிழ்ப் பள்ளி' உருவானது.
தமிழ் சந்ததிகளுக்காக ஆஸ்திரேலியாவில் அவ்வை தமிழ்ப்பள்ளி

ஆஸ்த்ரேலியா நாட்டில் மெல்பெர்ன் நகரில் வாழும் தமிழர்களின் பிள்ளைகள் மற்றும் எதிர்காலத் தமிழ்ச் சந்ததிகளுக்காக, நம் மூதாட்டி அவ்வையாரை பெருமை படுத்தும் விதமாக அவர்கள் பெயரிலேயே 'அவ்வை தமிழ்ப் பள்ளி' உருவானது.

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஐந்து தமிழ் நண்பர்கள் - அந்தோணி, அரசு, ருத்ரா, செல்வா, செந்தில் என அனைவரும் ஒன்று சேர்ந்து தன் தாய்மொழி தமிழுக்கு அவர்கள் வாழும் மெல்பெர்ன் மண்ணில் எப்படி சிறப்பு சேர்க்கலாம் என எண்ணிய பொழுது உருவானது மெல்பெர்ன் தமிழ் மன்றம் ஆகும்.

அவர்கள் ஒன்று சேர்ந்து முதலில் மெல்பெர்ன் தமிழ் மன்றம் (Melbourne Tamil Mandram - (MTM)) என்ற ஓர் இலாப நோக்கற்ற அமைப்பை ஆஸ்ட்ரேலியன் விதி முறைகளின் படி பதிவு செய்தார்கள். பின்னர் இந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்ற விவாதத்தில், உடனே ஆற்ற வேண்டிய முதல் பணியாக அவர்கள் எடுத்த முடிவுதான் அவ்வை தமிழ்ப் பள்ளி உருவாகக் காரணமானது.

இளைய தலைமுறையை காக்கும் ஒரே பணி தமிழ்ப் பள்ளித் தொடங்குவதுதான் எனத் தீர்மானித்து அவ்வை தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. . அவ்வாறு தொடங்கிய அவ்வைப்பள்ளி மூலம் தமிழ் வாயிலாக, நமது தமிழ்க் குடியின் சிறப்பு, 50,000 ஆண்டுகள் மூத்தகுடித் தமிழனின் பெருமை, பாரம்பரியம், பண்பாடு, நாகரீகம் அனைத்தையும் அள்ளிக்கொடுத்து இங்கு வாழும் நமது அடுத்தத் தலைமுறை தங்களது சொந்த அடையாளத்தை தொலைத்து விடாமலும் சுயமரியாதையுடனும் வாழ வழி செய்வது என தீர்மானித்தோம்.

அவ்வாறு கடந்த ஏப்ரல் 16ந் தேதி சனிக்கிழமை காலை இனிதே அவ்வை தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் சீனிவாசன், வாசன் சீனிவாசன் அவர்களை அழைத்திருந்தோம். அவர்கள் வந்திருந்து விழாவினைச் சிறப்பித்து அருமையான சொற்பொழிவை ஆற்றினார்கள். எதிர்பார்த்ததை விட அதிக தமிழ்க் குடும்பங்கள், பெற்றோர்கள், குழந்தைகள் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர்.

ஐந்து இயக்குனர்கள் முறையே பொறுப்புகளைப் பிரித்துக்கொண்டனர். அதன்படி அந்தோணி அவர்கள் வெளியுறவுகளை கவனிக்க, அரசு அவர்கள் விழாவில் வரவேற்புரையை நிகழ்த்தினார். செந்தில் அவர்கள் தலைவர் உரை நிகழ்த்த,அவ்வைப் பள்ளியின் தலைமையாசிரியரான செல்வா அவர்கள் ஆசிரியைகளின் அறிமுகம் மற்றும் பாடத் திட்ட வரைவு போன்ற அனைத்தையும் விளக்கி கூறினார்கள். ருத்ரா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் கமிஷனர் சிதம்பரம் சீனிவாசன் அவர்கள் அவ்வை தமிழ்ப்பள்ளியின் சீரிய பணியை பாராட்டி, இப்படிப்பட்ட இன்றியமையாத சேவை இன்றைய உலகின் அவசியத்தேவை என்பதை தன் இயல்பான பேச்சினால் விளக்கி கூறினார்கள். தமிழ், சமஸ்கிருதம், பெங்காலி, ஆங்கிலம், ஜாப்பனீஸ் போன்று பல மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழையும் அதன் சிறப்பையும் கண்டு பிரம்மித்ததோடு, தமிழில், தான் உரையாடும்பொழுது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி தனக்குள் ஏற்படுவதை நினைவு கூர்ந்தார்கள். அதோடு தான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதற்கு அதனை ஏற்று அதன்படி பல வழிகாட்டுதல்கள், மற்றும் உற்சாகப் படுத்துதல் தொடர்பான கருத்துகளை தயார் செய்து வந்து பேசுவதை தனக்குக் கொடுத்த பொறுப்போடு நியாயப்படுத்திக் கூறியபோது அரங்கமே அதிர்ந்தது!!

அடுத்ததாக பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் வாசன் சீனிவாசன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆஸ்ட்ரேலியாவில் வாழ்ந்து அதன்படி, தான் புரிந்துள்ள தமிழ்ப் பள்ளியின் அவசியம் பற்றியும் இது போன்ற பள்ளிகள் முன்பு தமிழர்களுக்காக இல்லாதது குறித்தும், சிரமங்களை விளக்கினார்கள். அடுத்து தன்னுடைய விடாமுயற்சியால் 71 படுக்கைகள் அடங்கிய முதியோர் இல்லத்தை, நோபல்பார்க் புறநகர் பகுதியில், இந்தியர்களுக்காகவே அரசாங்கத்திடம் போராடி பெற்றதன் சிறப்பை விளக்கினார்கள். இதற்கு முன் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குமுன் கேரம்டோவ்ன்ஸ் புறநகரில் அமைந்துள்ள சிவா-விஷ்ணு கோவில் உண்டானபோது, அதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து, இந்தியாவிலிருந்து விநாயகர் சிலையை வடிவமைத்து அதனை, ஜீயர், மற்றும் சங்கராச்சாரியார் மகாசுவாமிகள் மூலம் உருவேற்றி அதனைச் சக்தி குறையாமல் இங்கு கொண்டு வந்து ஸ்தாபித்தது முதல் தன் முக்கிய பொறுப்புகளைக் கூறியபொழுது, கூடியிருந்த ஒவ்வொரு தமிழனும் வாழ்கையில் நாமும் ஏதாவது செய்யவேணும் என என்னத் தோன்றியது.

ஒரு மனிதன் அவனது உடலையும் உலகத்தில் அவனது இருப்பையும் இணைப்பது அவனுடைய மூச்சுக்காற்று ஆகும்.

அதுபோல அவன் பிறந்த சமூகத்தில் அவனுக்கும் அவன் சமூகத்திற்கும் உள்ள தொடர்பை அவனது சொந்த தாய்மொழியால் மட்டுமே அறிய முடியும்.. அத்தோடு அவனது அடையாளம் அவன் சமூகம் சார்ந்த பெருமை அனைத்தும் அவனது தாய்மொழியால் மட்டுமே காக்கப்படும்.. அந்த வகையில் இங்கு தொடங்கப்பட்டுள்ள அவ்வை தமிழ்ப் பள்ளியானது தனது சிறந்த சேவையைத் தொடர்வதன்மூலம், தமிழ்ச் சமுகம் காக்கப்பட்டு இன்னும் சில வருடங்களில் உலகத் தமிழர்கள் போற்ற சரித்திரம் படைக்கும் என்பது மட்டும் நிச்சயம்!!!

மெல்பெர்ன் வாழ் தமிழர்களே!! வாருங்கள், உங்கள் குழந்தைகளை அழைத்து வாருங்கள். தமிழ் பயிலுவோம்!! தமிழ் கற்பிப்போம்!! தமிழ் வளர்ப்போம்!! உலகின் மூத்த குடியாம் தமிழ்க்குடியின் சிறப்பு, தமிழனின் பெருமை, பண்பாடு, நாகரிகம் பாரம்பரியம் அனைத்தையும் நம் தாய்மொழியாம் தமிழின் மூலம் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு வழங்கி, நம் வருங்கால சந்ததிக்கு பெருமை சேர்ப்போம். வாழ்க தமிழ்!! வாழிய பல்லாண்டு!!!

அவ்வை தமிழ்ப் பள்ளியானது ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை ஹன் டிங்டேல் தொடக்கப் பள்ளி, ஓக்ஃலி தெற்கு (Huntingdale Primary School, Grange Street, Oakleigh South, Victoria-3167) புறநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்து, குழந்தைச் செல்வங்களை வரவேற்று மகிழ்கிறோம். நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com