நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணி

நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி சார்பில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனவரி 21ம் தேதி மதியம், தாமஸ் ஜெபர்சன் நடுநிலைப் பள்ளி மைதானத்தில் அமைதி பேரணி நடத்தப்பட்டது.
நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணி


நியூஜெர்சி: நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி சார்பில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனவரி 21ம் தேதி மதியம், தாமஸ் ஜெபர்சன் நடுநிலைப் பள்ளி மைதானத்தில் அமைதி பேரணி நடத்தப்பட்டது.

இந்திய உயர் நீதிமன்றம் விதித்த ஜல்லிக்கட்டுத் தடையை  நீக்கக் கோரியும், தமிழகமெங்கும் நடக்கும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையிலும்,  தமிழர் கலாச்சாரம்- பண்பாடு-பாரம்பரியத்தை நிலைநாட்டி,  தமிழர் உரிமைகளைப் பறைசாற்றும் நோக்கத்திலும் இந்தப் பேரணி கூட்டப்பட்டது.
 

இந்நிகழ்வில் சுமார் 300 சிறுவர்-சிறுமியர்களும், 450 பெரியவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, “வேணும் வேணும் எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேணும்”,  “ஏறுதழுவுதல் எம் உரிமை”, “ஜல்லிக்கட்டு தமிழர் உரிமை, உணர்வு, அடையாளம்” போன்ற வாசகங்கள் பதிந்த பதாகைகளை ஏந்தி நின்றனர். தமிழகமெங்கும் பரவும் போராட்டங்களுக்கு ஆதரவாக, “தமிழா தமிழா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்”, “அலங்காநல்லூர் ஆடும் வரை, வீரத் தமிழர் போராடுவோம்!”,  “கொம்பு கிட்ட வச்சிக்காத வம்பு!”, “வீழ்வேனென்று நினைத்தாயோ”, “இது தான் என் ஊரு, நீ மோதிப் பாரு!” போன்ற வாசகங்களும், மற்றும் அவர்களின் கோரிக்கைகளாக, “#Amend PCA”,  “தடை அதை உடை”, “அவசர சட்டம் தேவையில்லை, நிரந்தர சட்டமே தீர்வு!” போன்ற வாசகங்களும் பதிந்த பதாகைகளைக் காண முடிந்தது.  இந்தப் பேரணியில் பங்குகொண்ட பலரும், கொம்புகள் சீவிய காளை மாட்டின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட டி-ஷர்டுகளை அணிந்திருந்தனர்.
 

நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் கற்கும் 425 மாணவர்களுக்கும், ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டைப் பற்றியும், ஏறுதழுவுதல் தமிழர் மரபு பற்றியும், இன்று உலகமெங்கும் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் குறித்தும் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாக இப்பேரணி விளங்கியது. மாணவர்கள் தாங்களே வரைந்து எடுத்து வந்த காளைகளின் ஓவியங்களும், அவர்களே எழுதிய ஜல்லிக்கட்டு - ஆதரவு வாசகங்களும் உள்ள பதாகைகளைக் காண முடிந்தது. “அதெப்படி இந்திய அரசு, நம் விளையாட்டைத் தடை செய்யலாம்!” என்ற அறச்சீற்றத்தையும் பள்ளிக் குழந்தைகளிடம் உணர முடிந்தது.

நியூஜெர்சி மாநிலம், எடிசன் நகரில் வாழும் நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்களுக்கும், தங்கள் தாய்நாட்டில் நிகழும் வரலாறு காணாத எழுச்சி போராட்டத்தில் நேரடியாக பங்குகொள்ள முடியாத நிலையில், அவர்கள் தமிழர் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க இப்பேரணி ஒரு வடிகாலாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். பெரும் உத்வேகத்துடன் குழந்தைகளும் பெரியவர்களும் பேரணியில் பங்குகொண்டு, “ஜல்லிக்கட்டு வேண்டும், PETA வேண்டாம்!”, “வேண்டும் வேண்டும் நாட்டு மாடு வேண்டும், வேண்டாம் வேண்டாம் ஜெர்சி மாடு வேண்டாம்”, “காளையை அடக்குவோம், PETAவை முடக்குவோம்!”, “தடையை உடைப்போம், தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்!” போன்ற உணர்வுபூர்வமான உரத்த கோஷங்கள் எழுப்பினர்.
 

நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் இந்த ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணியை வெற்றிகரமாக நிகழ்த்த பல நிறுவனங்களும் துணை நின்று உதவின. தாமஸ் ஜெபர்சன் நடுநிலைப் பள்ளி மைதானத்தை பேரணி திடலாக அமைத்துக் கொள்ள உதவியது எடிசன் நகர கல்வி வாரியம். பேரணியில் பங்குகொள்ளும் மக்கள் களைப்பாறவும், பனியில் இதமளிக்கும் பொருட்டும்,  ஓட்டல் சரவண பவன், அறுசுவை உணவகம், மற்றும் காரைக்குடி செட்டியார் உணவகமும் சூடான தின்பண்டங்களையும், குழந்தைகளுக்குப் பழச்சாறும், பெரியவர்களுக்கு சூடான காப்பியும் இலவசமாய் வழங்கின.  

2010-ஆம் ஆண்டில் லாப-நோக்கமற்ற அமைப்பாக நிறுவப்பட்டு, “அகரம் முதலாம் தமிழெனுந் தேன் அடுத்த தலைமுறைக் கதுகொண்டு சேர்,” என்ற வாசகத்தையே குறிக்கோளாக கொண்டுள்ள நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, புலம்பெயர்ந்து நியூஜெர்சி வாழ் தமிழ் குடும்பங்களுக்கிடையே, தமிழ் மொழியையும்,  தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாட்டையும் கைவிடாது,  செழிக்க செய்யும் நோக்குடனே சேவை செய்து வருகிறது. இதே உயர் நோக்குடன் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணி, இங்குள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களை ஒன்றிணைக்கவும், தமிழர் உரிமை போராட்டத்திற்கு ஒரு சேர குரல் கொடுக்கவும் பெரிதும் உதவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com