குயீன்ஸ்லாந்தில் தமிழ்மன்றம் அறிமுகவிழா!

குயீன்ஸ்லாந்து தமிழ்மன்றத்தின் அறிமுகவிழாவும் அந்நிகழ்வில் நடைபெற்ற 'தமிழ் நதி' எனும் தமிழ் இலக்கிய கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டனர்.
குயீன்ஸ்லாந்தில் தமிழ்மன்றம் அறிமுகவிழா!


குயீன்ஸ்லாந்து தமிழ்மன்றத்தின் அறிமுகவிழாவும் அந்நிகழ்வில் நடைபெற்ற 'தமிழ் நதி' எனும் தமிழ் இலக்கிய கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம்:

சங்க நாதம்...!
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று, அலையெழுப்பி ஆர்ப்பரிக்கும் பொற்கரைக் கடலோரம் வெற்றிச் சங்கு முழங்கிட, பொய்க்காது வானமும் மழையைப் பொழிந்திட, வற்றா நதிகளில் ஊறும் நீர் போல் எமது உள்ளங்களில் நல்ல கருத்துக்கள் ஊற்றெடுக்க, பிரவாகித்த தமிழ் நதியோடு, குயீன்ஸ்லாந்து மாநிலத் தமிழர்களுக்கு, குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றம் அறிமுகமானது.

கூவும் குயிலினும், குழலினும் இனிமை கொண்ட குரலுடைய செல்வி. ஓவியாவின் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் கேட்டோரைக் கிறங்கச் செய்து, தமிழுணர்வைத் தட்டியெழுப்பியது.

‘தமிழும் நதியும்’ என்ற தலைப்பில் சொற்களைப் பொழிந்த  ரவிச்சந்திரனின் தமிழலை, நதியில் கடல் வந்து கலந்ததோ எனப் பிரம்மிக்க வைத்தது.

மூத்தவரை அடுத்து சபைக்கு வந்த சிறுவன் முகிலமுதன், மாமன்னர் ‘அசோகரை’ப் பற்றி தான் வாசித்துத் தெரிந்து கொண்டவற்றை எம்முடன் பகிர்ந்தான். பின் தொடர்ந்த சிறுமி பிரணதியோ, பிரளயமாய் “என் பார்வையில் ஏகலைவன்” என்ற தலைப்பில், பிரமாதமாகப் பேசிச் சென்றாள்.

தன் மென்மையான குரலில், மருத்துவர் காயத்திரி காந்திதாசன் “மண்ணின் நினைவில் ஒரு பெண்ணின் மனம்” என்ற தலைப்பில், இருபது வருட இடைவெளியில் யாழ் மண்ணில் தான் அனுபவித்த உணர்வுகளை பகிர்ந்து மனங்களைக் கசிய வைத்தார். தன் உணர்வுகளைப் புரிந்து கொண்ட, தன் மகன் சிறுவன் அகிலன் காலணிகளைக் கழற்றி, கால்களை நம் மண்ணில் பதியுங்கள் அம்மா எனச் சொன்னதைச் சொல்லி எமக்கும் அம்மண்ணைத் தொட்ட உணர்வை ஊட்டினார்.

தொடர்ந்து பேசிய முகுந்தராஜ், லா.ச.ரா அவர்களின் ‘பிராயச்சித்தம்” எனும் நூலை அறிமுகம் செய்து வைத்தார். ஆத்திகமும் நாத்திகமும் இழையோடும் நாவலின் சுவையைச் சொல்லி, மற்றவரையும் வாசிக்கவைக்கும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினார்.

இளம் மருத்துவர். மதுஜா, கல்கி அவர்களின் கற்பனைத் திறத்தை வியந்து ஐம்மதங்களாய் சித்தரிக்கப்பட்ட ஐந்து ரதச் சிற்பங்களின் பெருமையை சிவகாமியின் சபதம் நாவலில் இருந்து எடுத்துச் சொன்னார். புலம்பெயர் மண்ணில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் நாவலை வாசிக்கும் வல்லமையை வளர்த்துக் கொண்ட அவரது செயல், அவரைப் போல் வேறுமண்ணில் பிறந்து வளர்பவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் எனலாம்.

தொடர்ந்து நதியில் விழுந்தது ‘சிறு துளி’ என்னும் மருத்துவர் ராம்குமாரின் கவிதை வனிதாவின் இனியகுரலில். தமிழகத்தின் அண்மைக் கால நிலவரங்களை கவிதையில் சுவையாகச் சொன்னவர், கொம்புவைத்த அரிமா என்று காளைகளைக் குறிப்பிட்டது மனதைக் கவர்ந்தது.

‘ஆசித் தமிழர்கள்’ எனும் தலைப்பில் தொடர்ந்து உரையாற்றி, இன்னுமொரு இளம் மருத்துவரான பகீரதன், நடையுடை பாவனைகளால் புலம்பெயர்வோருக்கு ஏற்படும் அனுபவங்களை, நகைச்சுவையோடு சொல்லி சபையையே கலகலக்க வைத்தார்.

‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற கு.அழகிரிசாமியின் கதையைப் பற்றிப் பேசிய  பார்த்தீபன், மாசுமருவற்ற குழந்தைகளின் மனதைச் சொல்லும் கதையை சுவைபட விவரித்தார்.

தன் தற்போதையத் தொழில் வேறாக இருப்பினும் மனதால் தான் என்றும் விவசாயியே என்று உழவரைப் பற்றிய தன் உணர்வுக் கவிதை மூலம் திரு. சிவா கைலாசம் இயம்பிச்சென்றார். தாலியை விற்றாலும் விற்பார்களே தவிர விதை நெல்லை ஒரு நாளும் விற்க மறுக்கும் மண்ணின் மைந்தர்களின் மகத்துவத்தைச் சொன்னது மனதைத் தொட்டது.

இலத்திரனியல் கழிவுகளால் (electronics waste) மாசடையும் உலகத்தைப் பற்றி, உண்மைச் சம்பவங்களை தழுவிய தன் சிறுகதை மூலம் சொன்ன மருத்துவர். ஜனனி, ‘அத்தியாவசியமில்லையெனில் இலத்திரனியல் உபகரணங்களை வாங்க வேண்டாம்’ எனும் பொருளுள்ள கோரிக்கையை சபையின் முன் வைத்தார்.

‘பெண் என்பவள் ஒரு வாழும் நூலகம்’ எனும் தலைப்பில் , பல்லினப் பெண்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வின் தொகுப்புரையைத் தந்த திருமதி.சுமதி, தமிழ்ப் பெண்கள் சாதனையாளர்களாக வருவதைத் தடுக்கும் காரணிகள் என்ன என்ற கேள்விக் கணையை வீசி, யோசிக்க வைத்தார்.

இசை, நூற்றாண்டுகளைத் தாண்டிச் செல்லும் வலிமை வாய்ந்தது என்பதை உதாரணங்களோடு, தமிழின் பயணம் இசையுடன் கூடும் என்ற தலைப்பின் கீழ் பண்ணிசை மூலம் விளக்கிச் சென்றார் மனுநீதிச் சோழன்.

தொடர்ந்து பேசிய  சாரதா, இருண்ட கண்டமென்ற பெயர் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டத்திலும், தற்போது வாழும் அவுஸ்திரேலியக் கண்டத்திலும் தனக்கேற்பட்ட திடுக்கிடும் திகில் அனுபவங்களை, ‘அனுபவங்கள்’ என்ற தலைப்பிலேயே பகிர்ந்து கொண்டார்.

மோர் பற்றிப் பேசப் போகிறேன் என மார்தட்டி வந்த பவன், மோர்(More) எனும் பெயரில் தொடங்கிய விற்பனை நிலையத்தில் நுழைந்து, விதவிதமாய் மோர் தேடி, அது கானல்நீரான சோகக்கதையை சிரிக்கச் சிரிக்கச் சொன்னாலும், தமிழ் மொழி வேற்று மொழி மோகங்களால் அழிந்து வரும் அவலத்தை, மோர் பார் லெஸ் (More for less) என்ற மொழிபெயர்க்கப்பட்ட (?விழி பிதுங்கும்) பதாகையினூடு உறைக்கும்படி எடுத்துச் சொன்னார்.

இறுதியில் பேசிய ரஜினிகாந்த் (எங்கள் ஊர் சிலம்பரசராக்கும்), தான் ஜெயமோகனின் தீவிர ரசிகர் என்பதை, அவர் படைப்புக்களில் தன்னை லயிக்கச் செய்த காரணங்களின் மூலம் எடுத்துச் சொன்னார்.

தமிழ் நதி இலக்கியக் கூட்டம் இத்துடன் நிறைவுபெற தேநீர் இடைவேளை ஆமை வடையுடனும், உளுந்து வடையுடனும், இனிப்புடனும் இடம் பெற்றது.

செவிகளையும், வயிற்றையும், மனங்களையும் இவ்வாறு நிறைய வைத்து, அடுத்து கோலாகலமாக ஆரம்பமானது குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றத்தின் அறிமுக விழா.

“துளிகள் சேர்ந்து நதியானோம்.
அணி திரண்டு ஆழியானோம்.
மனங்கள் சேர்ந்து மன்றமானோம். தமிழ் மன்றமானோம். குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றமானோம்” என தன் அறிமுக உரையை ஆரம்பித்த மருத்துவர், வாசுகி சித்திரசேனன், ‘போற்றினும் தூற்றினும் ஆற்றல் மிகக் கொண்ட செயற்குழுவை அவை என்றும் அசைக்காது, மன்றம் தன் நேர் வழியில் நேர்மையோடும், நெஞ்சுறுதியோடும் ஏறு நடைபோடும்’ என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

மன்றத்தின அண்மைக் காலத் திட்டங்களான நடமாடும் நூலகம், தமிழ் நதி மின்னிதழ், இலக்கிய நிகழ்வுகள் என்பனவற்றையும், நீண்ட காலத் திட்டங்களான தமிழர் குடில், குடியிருப்புகள், தமிழர் கலாச்சார நிலையம் என்பவற்றைப் பற்றியும் குறிப்பிட்ட அவர், ஒளிபடைத்த கண்ணோடும், உறுதிகொண்ட நெஞ்சோடும், களிபடைக்கும் மொழியோடும், வலிமைகொண்ட தோளோடும், தெளிந்த நல் மதியோடும் மன்றத்தில் சேர்ந்து பணியாற்ற வருகை தந்த தமிழ் நெஞ்சங்களை அன்புடன் அழைத்தார்.
 

அறிமுகவுரையைத் தொடர்ந்து மங்கள குத்துவிளக்கேற்றல் இடம் பெற்றது. முன்னாள் அல்ஜெஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினரும், பல்லினக் கலாச்சாரத்தை வழிமொழியும் அரசியல் பிரமுகருமான திரு. அந்தோனி ஷொர்ட்டென், குயீன்ஸ்லாந்தின் பெண் சாதனையாளர்களில் ஒருவரான செல்வி. ரீனா அகஸ்டின், மற்றும் மன்றப் பிரமுகர்கள் ஆகியோர் விளக்கேற்றினர்.

அந்தனி ஷர்ட்டென் தனது உரையில் பல்லினக் கலாச்சாரத்தின் உன்னதத்தையும், உயர்வையும் எடுத்துச் சொன்னார். அத்துடன் அவுஸ்திரேலியா, பல்லினக் கலாச்சாரத்தை வளர்க்க எவ்வாறு வாய்ப்பளிக்கின்றது, அதன் மூலம் எத்தகைய பரஸ்பர நன்மைகள் கிடைக்கின்றன என்பவற்றையும் எடுத்துரைத்தார். மேலும் நூலகம் மற்றும் சமுகநலன் தரும் மன்றத்தின் நிகழ்வுகளுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தார்.

குயீன்ஸ்லாந்து மாநிலத்தின் பெண் சாதனையாளர்களில் ஒருவரான செல்வி. ரீனா அகஸ்டின் தான் எத்தகைய பாதையைக் கடந்து வந்தேன் என்றும் தன் அனுபவத்தினால் மற்றவர்களுக்கு வழிகாட்ட எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றும் தமிழும், ஆங்கிலமும் கலந்துவந்த மணிப்பிரவாள நடையில் கூறினார்.

தொடர்ந்து, மன்ற அங்கத்தவர்களாக இணைவதற்குரிய விண்ணப்பங்களைக் கையிலளித்து, “குயீன்ஸ்லாந்து தமிழ் சமூகத்திற்கான தேவைகளை, ஆலோசனைகளைக் கூறுங்கள், செய்துமுடிக்க காத்திருக்கிறோம்” மன்றத்தின் நோக்கங்களை விவரித்துக் கூறினார் மன்றத் தலைவர் பார்த்தீபன் இளங்கோவன்.

மன்ற செயற்குழுவினரான தலைவர் பார்த்தீபன், துணைத்தலைவர் பிரபா ஸ்ரீராம், செயலாளர் வாசுகி சித்திரசேனன், பொருளாளார் மகிழன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முகுந்தராஜ் சுப்பிரமணியம், பிரதீப் குமார், சிவா கைலாசம், ரஜினிகாந்த் ஜெயராமன் ஆகியோரை, இருவரிக்கவிதைகளில் நயம்பட அறிமுகம் செய்தார்  ரவிச்சந்திரன். தன்னைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கவிபாடியதைக் கண்டுரசித்த பார்வையாளர்களில் ஒருவராக வீற்றிருந்த, 4EB-வானொலியின் தமிழ்ப் பிரிவு நிர்வாக பொறுப்பதிகாரி ரமாதேவி தனசேகர், ரவிச்சந்திரனைப் பற்றியும் சிறு கவிதை சொன்னார்.

வந்துவாழ்த்திய அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் தெள்ளு தமிழில் நன்றி கூறினார் சிவா கைலாசம்.

நம்மினத்தின் உயர் விழுமியங்களில் ஒன்றான விருந்தோம்பலின்படி வந்தவர்கள் அனைவருக்கும் வடை, பாயசத்தோடு விருந்து பரிமாறப்பட்டு இனிதே நிறைவுற்றது விழா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com