ஃபார்முலா 1 சாம்பியன்: நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு

இந்த சீசனின் ஃபார்முலா 1 கார் பந்தய சாம்பியனான ஜெர்மனியின் நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஃபார்முலா 1 சாம்பியன்: நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு

இந்த சீசனின் ஃபார்முலா 1 கார் பந்தய சாம்பியனான ஜெர்மனியின் நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மெர்ஸிடஸ் டிரைவரான 31 வயது ரோஸ்பெர்க், ஃபார்முலா 1 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 5 நாள்களிலேயே ஓய்வு பெற்றிருப்பது உலக முழுவதும் உள்ள ஃபார்முலா 1 ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.
1993-இல் ஆலன் பிராஸ்ட் நடப்பு சாம்பியனாக இருந்தபோது ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு ஓய்வு பெற்ற நடப்பு சாம்பியன் நிகோ ரோஸ்பெர்க் ஆவார்.
வியன்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற ரோஸ்பெர்க், "பார்முலா 1 கார் பந்தய போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது என முடிவெடுத்துள்ளேன். சாம்பியன் பட்டம் வென்றதுமே இந்த முடிவை எடுத்துவிட்டேன். அடுத்ததாக தந்தை மற்றும் கணவர் என்ற இரு பொறுப்புகளை கவனிக்கவுள்ளேன்' என்றார்.
ரோஸ்பெர்க், தனது ரசிகர்களுக்காக சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கார் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவு. 25 ஆண்டுகள் கார் பந்தயத்தில் ஈடுபட்டுவிட்டேன். ஃபார்முலா 1 போட்டியில் சாம்பியனாக வேண்டும் என்பது எனது மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கை கடின உழைப்பு, பல்வேறு தியாகங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் எட்டிவிட்டேன். எனது கார் பந்தய வாழ்க்கையில் நான் இப்போது உச்சகட்டத்தில் இருக்கிறேன். இதுவே நான் ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம்' என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மெர்ஸிடஸ் அணியின் தலைவர் டாட்டோ வோல்ஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது நிகோ ரோஸ்பெர்க்கால் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவாகும். அவர் தனது கார் பந்தய வாழ்க்கையில் உச்சகட்டத்தில் இருக்கும்போது ஓய்வு முடிவை எடுத்துள்ளார். ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் சாம்பியனாவதுதான் ரோஸ்பெர்க்கின் இளம் வயது கனவு. இப்போது அந்தக் கனவை நனவாக்கிய கையோடு ஓய்வு பெற்றிருக்கிறார்' என்றார்.
ரோஸ்பெர்க்கின் கார் பந்தய வாழ்க்கை அவருடைய 6-ஆவது வயதில் கார்ட்டிங் ரேஸ் மூலமாகத் தொடங்கியது. அதன்பிறகு தலைசிறந்த கார் பந்தய வீரராக உருவெடுத்த ரோஸ்பெர்க், 1997-இல் பிரிட்டனின் லீவிஸ் ஹாமில்டனுக்கு சவால் அளிக்கக் கூடிய வீரராக திகழ்ந்தார். இவர்கள் இருவரும் 2000-இல் மெர்ஸிடஸ் அணிக்காக ஒன்றாக இணைந்து கார் பந்தயத்தில் பங்கேற்க ஆரம்பித்தனர்.
2002-இல் ஜெர்மன் ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஸ்பெர்க், பின்னர் ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்க ஆரம்பித்தார். 2008-இல் ஆஸ்திரேலிய கிராண்ட்ப்ரீ போட்டியில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் ஃபார்முலா 1 போட்டியில் முதல் வெற்றியை ருசித்தார்.
2010 முதல் 2013 வரை மைக்கேல் ஷூமாக்கருடன் இணைந்து மெர்ஸிடஸ் அணிக்காக ஃபார்முலா 1 போட்டியில் பங்கேற்றார். 2013-இல் ஷூமாக்கர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஹாமில்டனுடன் இணைந்து மெர்ஸிடஸ் அணிக்காக ஃபார்முலா 1 போட்டியில் பங்கேற்று வந்தார் ரோஸ்பெர்க்.
இதன்பிறகு மெர்ஸிடஸ் அணி தொடர்ச்சியாக ஃபார்முலா 1 போட்டியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த ஆண்டு ரோஸ்பெர்க் சாம்பியன் ஆனார்.
ஃபார்முலா 1 போட்டியில் இதுவரை 23 ரேஸ்களில் வென்றுள்ள ரோஸ்பெர்க், 30 முறை முதல் வரிசையில் இருந்து காரை இயக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com