டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைப்பேன்: மாரியப்பன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020-இல் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் உலக சாதனை படைப்பேன் என்று மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு கூறினார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைப்பேன்: மாரியப்பன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020-இல் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் உலக சாதனை படைப்பேன் என்று மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு கூறினார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு "மரம் மதுரை' அமைப்பு சார்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் தடகளப் போட்டிகளில் சாதிக்கும் அளவிற்கு திறமையான மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வர வேண்டியது அவசியம்.
ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றேன். உயரம் தாண்டுதலில் 1.92 மீ. என்பது உலக சாதனையாக உள்ளது. தற்போது மேற்கொண்டு வரும் பயிற்சிகளில் 1.96 மீ. உயரம் வரை என்னால் தாண்ட முடிகிறது. 2020-இல் டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் 2.10 மீ. உயரம் வரை தாண்டி புதிய உலக சாதனை படைப்பேன். அதற்காக தற்போது கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
அதைத் தொடர்ந்து அவரது பயிற்சியாளர் சத்தியநாராயணா பேசியது: 2020-இல் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா நிச்சயம் அதிக தங்கப் பதக்கங்களை வெல்லும். மாரியப்பன் தங்கவேலு தற்போது பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக லண்டன் தடகளப் போட்டி, ஆசிய தடகளப் போட்டி ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதே அவருடைய ஒரே நோக்கமாக உள்ளது என்றார்.
முன்னதாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ராஜா முத்தையா மன்றம் முதல் தெப்பக்குளம் வரை திறந்த வாகனத்தில் மாரியப்பன் தங்கவேலுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் சோலை எம்.ராஜா, இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச்செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com