நாகபுரியில் இன்று 2-ஆவது டி20: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
நாகபுரியில் இன்று 2-ஆவது டி20: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இங்கிலாந்து அணி, இந்த ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
அதேநேரத்தில் இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களம் காணுகிறது.
கடந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பேட்டிங் மிக மோசமானதாக அமைந்தது. கேப்டன் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும், இந்திய அணியால் 147 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி எவ்வித நெருக்கடியும் இன்றி எளிதாக வெற்றி கண்டது. எனவே இந்திய அணி முதலில் பேட் செய்யும்பட்சத்தில் வலுவான ஸ்கோரை குவித்தாலொழிய வெற்றி பெறுவது கடினம்.
இந்திய அணியில் தொடர்ந்து தடுமாறி வரும் தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்குப் பதிலாக இந்த ஆட்டத்தில் இளம் வீரரான ரிஷப் பந்த் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் கோலி, ரெய்னா, யுவராஜ் சிங், தோனி, மணீஷ் பாண்டே ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பது முக்கியமாகும்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பூம்ராவின் பந்துவீச்சு கடந்த ஆட்டத்தில் எடுபடவில்லை. எனவே அவருக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் இடம்பெற வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சில் பர்வீஸ் ரசூலுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான பேட்டிங்: இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி என 7 வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் கிறிஸ் ஜோர்டான், பிளங்கெட், டைமல் மில்ஸ் கூட்டணியை நம்பியுள்ளது இங்கிலாந்து. சுழற்பந்து வீச்சில் மொயீன் அலி, ஆதில் ரஷித் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
இந்திய அணி கடந்த 15 மாதங்களில் எந்தத் தொடரையும் இழக்கவில்லை. ஆனால் அந்த வெற்றியை தக்கவைக்குமா என்பது இந்த ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.
மைதானம் எப்படி? நாகபுரி மைதானத்தில் இதுவரை 10 டி20 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 7-இல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இந்திய அணி இங்கு இரு ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அந்த இரண்டிலும் இரண்டாவதாக பேட் செய்த இந்திய அணி, இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளிடம் முறையே 29 மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.
இந்தியா (உத்தேச லெவன்): விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல்/ரிஷப் பந்த், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, பர்வீஸ் ரசூல்/அமித் மிஸ்ரா, யுவேந்திர சாஹல், ஆசிஷ் நெஹ்ரா, புவனேஸ்வர் குமார்/ஜஸ்பிரித் பூம்ரா.
இங்கிலாந்து (உத்தேச லெவன்): சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷித், டைமல் மில்ஸ்.

போட்டி நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு:  ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com