2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூதாட்டம்? விசாரணை கோரும் அர்ஜுனா ரணதுங்கா!

2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூதாட்டம்? விசாரணை கோரும் அர்ஜுனா ரணதுங்கா!

2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா புகார் கூறினார்.

2011-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி ஏப்ரல் 2-ந் தேதி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் 10 பந்துகள் மட்டுமே மீதமிருந்த நிலையில், 274 என்ற கடின இலக்கை எட்டிப் பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது. இதன்மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஓவர் உலகக் கோப்பையை தன்வசப்படுத்தியது.

இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா பேட்டியளித்ததாவது:

2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோற்றது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அப்போது என்ன நடந்தது என்று இப்போது என்னால் கூற இயலாது. ஆனால், விசாரணை நடைபெற்றால் அதில் நடந்த முழு விவரத்தையும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தெரிவிக்க வேண்டும்.

ஏனென்றால், அன்றைய தினத்தில் இலங்கை அணியின் மனநிலை வேறு மாதிரி இருப்பதை என்னால் கணிக்க முடிந்தது. இதில் வீரர்கள் அனைவரும் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும், இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விடியோ பதிவை வெளியிட்டார்.

முன்னதாக, 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் தொடரை நடத்தியது யார் தவறு என்பது குறித்து இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா கேள்வி எழுப்பினார். ஏனென்றால் அந்தத் தொடரின் போதுதான் இலங்கை கிரிக்கெட் அணியின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்பின்னர், கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்களை முற்றிலும் புறக்கணித்தன. 

அர்ஜுனா ரணதுங்கா, தற்போது இலங்கை அரசின் பெட்ரோலியத் துறை மத்திய அமைச்சராக உள்ளார். மேலும், இவரது தலைமையிலான இலங்கை அணி, கடந்த 1996-ம் ஆண்டு இதே ஆசிய நாடுகளில் நடந்த உலகக் கோப்பை தொடரை வென்று சாதனை படைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com