50-ஆவது டெஸ்டில் அடியெடுத்து வைக்கும் 'அஸ்வின்' சாதனைகள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தியாவின் நட்சத்திர வீரர் அஸ்வினுக்கு 50-ஆவது போட்டியாக அமைந்து பெருமை சேர்த்தது. 
50-ஆவது டெஸ்டில் அடியெடுத்து வைக்கும் 'அஸ்வின்' சாதனைகள்

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஃபெரோஷா கோட்லாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களம் கண்டார். பின்னர் தனது அபாரமான சுழற்பந்துவீச்சாலும், 8-ஆவது வரிசையில் இறங்கி சில முக்கிய ரன்களை குவித்தும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-காவஸ்கர் டெஸ்ட் தொடரின் போது மோசமான ஃபார்மில் இருந்தார். இதனால் அந்நிய ஆடுகளங்களில் பந்துவீசத் தெரியவில்லை என்ற விமரிசனங்கள் எழுந்தன. இதையடுத்து இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இதன்பின்னர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார். இதனிடையே தனது ஃபிட்னஸிலும் தனி கவனம் செலுத்தி வந்தார். 

இதன் பிறகு நடந்த போட்டிகளில் எல்லாம் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தார். தொடர்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். 

அதுபோல உலக கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றிகரமான இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி பல சாதனைகளை படைத்து வருகிறார்.

இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் 92 இன்னிங்ஸில் விளையாடி 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிஸில் அதிபட்சமாக 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளும், ஒரு டெஸ்டில் 140 ரன்கள் விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

பந்துவீச்சு சராசரி 25.23 ஆகும். ஒரு இன்னிங்ஸில் 25 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் ஒரு டெஸ்டில் 7 முறை 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.

அதுபோல பேட்டிங்கைப் பொறுத்தவரையில் 49 டெஸ்டுகளில் 69 இன்னிங்ஸில் விளையாடி 1903 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 124 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 32.25 ஆகும். 4 சதங்களும், 10 அரை சதமும் விளாசியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் 2016-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய இரண்டுக்கும் தேர்வு செய்யப்பட்டார். ராகுல் டிராவிட் (2004) பிறகு ஐசிசி-யின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்ற 2-ஆவது இந்தியர் ஆவார். உலகளவில் 8-ஆவது வீரராக திகழ்கிறார்.

'சர் கார்ஃபீல்டு சோபர்ஸ்' விருது வென்ற 3-ஆவது இந்தியர், உலகளவில் 12-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010) ஆகியோர் மட்டுமே இந்த விருது பெற்ற இந்தியர்கள் ஆவர்.

வங்கதேசத்துக்கு எதிராக ஐதராபாதில் நடைபெற்ற டெஸ்டில், 250-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் அதிவேகமாக 250 (45 டெஸ்டுகளில்) விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையப் படைத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லி, 49 டெஸ்டில் 250 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இந்தியாவின் அனில் கும்ப்ளே, கபில் தேவ், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், பிஷன் சிங் பேடி ஆகியோருக்கு அடுத்து 250 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய 6-ஆவது இந்தியர் ஆனார்.

தொடர்ந்து 2 சீசன்களாக சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துள்ளார்.

ஒரு சீசனில் (1979-80) அதிக விக்கெட்டுகள் (63) வீழ்த்திய கபில்தேவின் சாதனையை முறியடித்தார். 2016-17 சீசனில் 64 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

டெஸ்ட் போட்டிகளில் 25 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை சாய்த்தும் சாதனை படைத்தார். அதுபோல 75 விக்கெட்டுகள் மற்றும் 500 ரன்களை அதிவேகத்தில் கடந்த வீரர் என்ற டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.

இந்தியாவில் விளையாடிய 30 டெஸ்டுகளில் மட்டும் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். இவ்வளவு குறைந்த டெஸ்டுகளில் வேறு எந்த வீரரும் இந்தியாவில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியது கிடையாது. 

ஒரு சீசனில் அதிக பந்துகளை வீசியவர் என்ற புதிய சாதனை படைத்தார். 2016-17 சீசனில் 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 3,701 பந்துகளை வீசினார். முன்னதாக, அனில் கும்ப்ளே, 2004-05 சீசனில் 3,673 பந்துகளை வீசியதே இதுவரை சாதனையாக இருந்தது.

நடப்பு சீசனில் இந்திய அணி வீசிய ஓவர்களில் சராசரியாக 31 சதவீதம் அஸ்வினால் வீசப்பட்டது. ஒவ்வொரு டெஸ்ட் இன்னிங்ஸிலும் சராசரியாக 29.2 ஓவர்களை வீசி வருகிறார். 

ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார். 2016-17 சீசனில் மட்டும் இதுவரை 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007-08 சீசனில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், 78 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com