டி20: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கைக்கு எதிரான ஒரே டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டி20: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கைக்கு எதிரான ஒரே டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கொழும்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வென்றது. 82 ரன்கள் விளாசிய இந்திய கேப்டன் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர், ஒரே டி20 ஆட்டம் என அனைத்திலும் வெற்றி கண்டு இலங்கையை முற்றிலுமாக ஒயிட்வாஷ் செய்துள்ளது.

முன்னதாக, டி20 ஆட்டம் தொடங்க இருந்த நேரத்தில் மழை பெய்ததை அடுத்து, ஆட்டம் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து பேட் செய்த இலங்கை அணியில், 5 ரன்கள் சேர்த்திருத்த உபுல் தரங்காவை போல்டாக்கினார் புவனேஸ்வர் குமார். அடுத்து வந்த முனவீரா நிலைத்து ஆட, பூம்ரா பந்துவீச்சை எதிர்கொண்ட டிக்வெல்லா போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

அவரை அடுத்து மேத்யூஸ் களம் காண, மறுமுனையில் அரைசதம் கடந்து 29 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 53 ரன்கள் எடுத்திருந்த முனவீரா ஆட்டமிழந்தார். பின்னர் பிரியஞ்சன் களத்துக்கு வர, 7 ரன்களுடன் மேத்யூஸ் வீழ்ந்தார். அடுத்து வந்த திசர பெரேரா11 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விடைபெற்றார். பிரியஞ்சன் சற்று நிலைத்து ஆட, சீகுகே பிரசன்னா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  முடிவில், பிரியஞ்சன் 40 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களுடனும், இசுரு உதனா 10 பந்துகளுக்கு 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் என 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் சாஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2, புவனேஸ்வர் குமார், பூம்ரா தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தனர்.

கோலி அபாரம்: இதையடுத்து, 171 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். உடன் வந்த கே.எல்.ராகுல் 18 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

அடுத்து இணைந்த கோலி-மணீஷ் பாண்டே ஜோடி அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. கோலி 30 பந்துகளிலும், மணீஷ் பாண்டே 36 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. 54 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்திருந்த கோலி, வெற்றியை நெருங்கிய நிலையில் சிக்ஸர் விளாச முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை அடுத்து வந்த தோனியின் உதவியுடன், இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்தினார் மணீஷ் பாண்டே. அவர் 36 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 51 ரன்களுடனும், தோனி ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஸ்கோர் போர்டு

துளிகள்...
*ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணா 3.5-2.5 என்ற புள்ளிகள் கணக்கில் கியூபாவின் யூரி விடல் கொன்சால்ûஸ வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
*இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் இம்மாதம் மோதவுள்ள ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில், ஐசிசியின் பழைய விதிமுறைகளே பின்பற்றப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதேவேளையில், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரின்போது புதிய விதிகள் பின்பற்றப்படவுள்ளன.
*புச்சி பாபு கிரிக்கெட் போட்டியின் "டி' பிரிவில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது உத்தரப் பிரதேச அணி.
*இந்திய வில்வித்தை சங்கத்தின் நிர்வாகியாக முன்னாள் தலைதைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியை நியமிக்கும் தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அந்தச் சங்கம் முடிவு செய்துள்ளது.
*ஹாங்காங்கில் நடைபெறும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தகுதிச்சுற்று வீரரான விக்ரம் மல்ஹோத்ரா, வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
*இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அதிகாரிகள் நிர்வாக மனப்போக்கை விடுத்து, சேவை நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com