மகளிர் ஆசிய கோப்பை: கடைசி பந்து வரை இந்தியா போராடி தோல்வி

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் கடைசி பந்தில் தோல்வியடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகளிர் ஆசிய டி20 கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 3-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இன்று (ஞாயிற்றுக்கிழமை) விளையாடின. 

இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் முதலில் களமிறங்கினர். இந்திய அணியில் தொடக்கம் முதலே வீராங்கனைகள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதனால், இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மட்டும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். கடைசி பந்தில் ஆட்டமிழந்த ஹர்மன்பிரீத் கௌர் 42 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். 

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்தது. 

113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 35 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடிய வங்கதேச அணி அதன்பிறகு தடுமாற்றத்தை சந்தித்தது.

இந்திய அணியில் பூனம் யாதவ் வங்கதேசத்தின் டாப்-4 வீராங்கனைகள் வரிசையாக பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால், போட்டியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 

கடைசியில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந்திய அணியில் முன்னணி பந்துவீச்சாளர்களின் ஓவர்கள் முடிவடைந்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் கடைசி ஓவரை வீசினார். 

முதல் 3 பந்துகளில் 1,4,1 ரன்கள் முறையே எடுக்கப்பட்டது. இதனால், இந்திய வீராங்கனைகள் சற்று நெருக்கடியை சந்தித்தனர். 4-ஆவது பந்தில் வங்கதேசத்தின் சன்ஜிதா இஸ்லாம் ஆட்டமிழக்க இந்திய வீராங்கனைகள் சற்று பெருமூச்சுவிட்டனர். அதனால் 2 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 

5-ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க முயற்சிக்க 2-ஆவது ரன்னில் ருமானா அகமது ரன் அவுட் ஆனார். இதனால், கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை. களத்தில் இருவரும் முதல் பந்தை எதிர்கொள்ளும் வீராங்கனைகள். வெற்றி யார் பக்கம் என பரபரப்பான சூழ்நிலை இரண்டு அணிக்கும் இருந்தது.

ஹர்மன்பிரீக் கௌர் கடைசி பந்தை வீச ஜஹானாரா அலாம் மிட் திசையில் 2 ரன்கள் எடுக்க இந்திய அணி தோல்வியடைந்தது. 

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேச அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது. ஆட்டநாயகி விருதை ருமானா அகமது தட்டிச் சென்றார். தொடர் நாயகி விருதை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com